Published:Updated:

கற்றது பி.ஈ!

கற்றது பி.ஈ!
பிரீமியம் ஸ்டோரி
News
கற்றது பி.ஈ!

கற்றது பி.ஈ!

``Oh fella, you made me cry!’’- இப்படித்தான் சொல்லத்தோணுது இன்ஜினீயரிங் படித்த, படிக்கிற பசங்களைப் பார்க்கும்போது. இப்பெல்லாம் ஒரு பையன் தடுக்கி விழுந்தா இன்ஜினீயரிங் காலேஜுக்குள்ளதான் விழவேண்டியிருக்கு. இன்ஜினீயரிங் காலேஜுக்குள்ள நுழையுறதுக்கு முன்னாடி கவுன்சிலிங் போறப்பவே முகமூடி கொள்ளைக்கூட்டம் வளைச்சிரும். ‘எங்க காலேஜ்ல ஏரோநாடிக்கல் இன்ஜினீயரிங் முடிச்சா ஏரோப்ளேன் ஃப்ரீ!’னு மட்டும்தான் சொல்லமாட்டானுக. ‘கப்பலில் வேலை’னு  மெரைன் இன்ஜினீயரிங் நாலு வருஷம் படிச்சு கடைசிவரை கடல்ல கால் நனைக்காத ஆட்களும் இருக்கானுங்க.

கற்றது பி.ஈ!

‘சர்வதேச தரத்திலான ஆய்வுக்கூடங்கள்’, ‘ஹைடெக் க்ளாஸ் ரூம்ஸ்’, ‘அறிவார்ந்த ஆசிரியர்கள்’னு முதல்நாள் அட்மிஷனப்போ அவய்ங்க கொடுக்குற பில்ட்-அப்லாம் வேற லெவல்ல இருக்கும். மொத்தக் காசையும் கட்டி அட்மிஷன் போட்ட பின்னாடிதான் இருக்கு கச்சேரி. ‘மெக்கானிக்கல் லேப்ல எலியெல்லாமா வளர்ப்பானுக?’, ‘தெர்மல் லேப்ல பாம்பு பூந்துடுச்சு!’, ‘ஜெனரேட்டருக்கு டீசல் இல்லை...அதனால ஒர்க்‌ஷாப் கேன்சல்!’னு முதல்நாளே கிளப்புவானுக பாருங்க பீதிய!  ஒருவேளை அவன் காலேஜுக்குள்ள விழாம புறம்போக்கு நிலத்துல விழுறான்னு வையிங்க. அதுக்காக உடனே சந்தோஷப்படாதீங்க. அவனைக் கைதூக்கிவிட ஓடிவந்த பெரியவரு யாருனு நினைக்கிறீங்க?  2002 பாஸ் அவுட்டான அந்தக் காலத்து இன்ஜினீயரிங் ஸ்டூடண்ட்தான்... வாங்க... இன்ஜினீயரிங்னாலேயே  நம்ம பசங்க `படுற / பட்ட’ பாட்டை கொஞ்சம் சொல்லுறேன்!

இன்ஜினீயரிங்  படிக்கிறப்போ நடக்கும் கூத்துகள்:

* வீட்டுல சுத்துற ஃபேன் காயில் தேய்ஞ்சு மெதுவா ஓடிரக்கூடாது..  ``எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படிச்சிருக்கியே... இதைக் கழட்டி சரி பார்க்க மாட்டியா.. என்னதான் படிச்சிக் கிழிச்சியோ?’’ என்பது அப்பாவின் வசவுமொழி. இதுக்கு பயந்துக்கிட்டே ஆர்வக்கோளாறுல ஏதாச்சும் பண்ணப்போக ஏடாகூடமா டிரான்ஸ்ஃபர்மர் வரை வெடிச்ச சம்பவம்லாம் நடந்திருக்கு. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பசங்க நிலைமை இன்னும் பரிதாபம். ஏரியால ஒரு பைக் நின்னுரக்கூடாது.  ``ஏப்பா... இன்ஜின் கரக்கு முறுக்குங்கிது. இதென்னன்னு பாரு? டூ- ஸ்ட்ரோக்கா ஃபோர்- ஸ்ட்ரோக்கா இது?’னு வந்துருவானுக. ‘போய்யா யோவ்...பைக்  பெட்ரோல்ல ஓடுதா... டீசல்ல ஓடுதான்னே எனக்குத் தெரியாது’னு  கவுண்டமணி எஃபெக்ட் கொடுப்பானுக நம்ம பசங்க! 

கற்றது பி.ஈ!

*  வீட்டுக்கு யாராச்சும் வந்துட்டா போதும். அப்துல் கலாமுக்கு கசின்பிரதரா மாறி அப்பாக்கள் அள்ளிவிடுவாங்க பாருங்க. காது அவிஞ்சிடும். ``பையன் எம்.ஐ.டில தான் ஏரோநாட்டிக்கல் படிக்கிறான். அப்துல் கலாம் மாதிரி வரணும்னு ஆசைப்படுறான்!’’னு பெருமை பீத்தக் களஞ்சியமா பீலா விடுவாங்க. பையன் படிக்கிற காலேஜ் அப்துல்கலாம் படிச்ச மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜினு நினைச்சா, பாவங்க நீங்க. திண்டிவனத்துக்கும் மாமண்டூருக்கும் நடுவுல இருக்குற  `மாரியம்மன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி’னு ஒரு காலேஜ்! எதுக்கும் `ஐ.ஐ.டி’னா `இலிமினாட்டி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி’னு ஒண்ணு இருக்கானு கவுன்சிலிங் போறப்போ பார்க்கணும்!

*  `பேரு பெத்த பேரு. தாக நீலு லேது!’ங்கிற மாதிரி இன்ஜினீயரிங் படிக்கிறதெலாம் பெருமைனு சொன்னா எருமைகூட இப்ப மதிக்காது. காலைல 5 மணிக்கே எந்திரிச்சு குளிச்சு அரைத்தூக்கத்துல நீட்டா டக்-இன் பண்ணி நாய் வண்டி மாதிரி இருக்குற காலேஜ் பஸ்ல ஏறி...னு நாக்கு தள்ளிடும். காலேஜ் போய்ச் சேர்றதுக்குள்ள ரெண்டு வாட்டி தூங்கி விழுந்து கடைவாயெல்லாம் வழிஞ்சு ஓடியிருக்கும். செக்யூரிட்டிகூட நம்மளை நிப்பாட்டி, ``தலையை ஏன் ஒழுங்கா சீவலை?’’, ``ஐ.டி கார்டு எங்கடா?’’, ``ஷேவ் பண்ணாம வந்திருக்கியா..? ஏ.ஓ-கிட்ட போவோம் வா!’’னு தாளிச்சு எடுப்பானுக. ``அண்ணே... என்னை மன்னிச்சிருணே!’’னு அஜித் வாய்ஸில் பேசித் தப்பிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடும்!

கற்றது பி.ஈ!

*  இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வகுப்புக்கு வந்தா, பாடம் மட்டும் நடத்துறதுதானே உலக வழக்கம்? லேப், ஒர்க்‌ஷாப்னு கூட்டிட்டுப்போயி, 10 ரூபாய் பெறாத `ரெசிஸ்டர் தீய்ஞ்சு போச்சு’, ‘டெஸ்ட் ட்யூப் உடைஞ்சு போச்சு’னு 500 ரூபாய் தண்டம் கட்டச் சொல்றதெல்லாம் வன்கொடுமையா இல்லையா? காலேஜ் கேன்டீன்ல பொங்கலைத் தின்னுட்டு லேப்ல கவனமா இருக்கச் சொல்றதுக்கெல்லாம் கருடபுராணத்துல என்ன தண்டனை பாஸ்?

*  அது என்னவோ ஏரியா பசங்ககிட்ட நாம கெத்தா இருப்போம். அதுக்காக, ``உனக்கென்னப்பா இன்ஜினீயரிங் படிக்கிறே. ஈஸியா பொண்ணுங்க விழும்!’’னு சொல்றதெல்லாம் டூ மச்.  கேட்குறப்போ சஹாரா பாலைவனத்துக்கு நடுவுல ஷவர் பாத் ஃபீலிங் கிடைக்கும். ஆமா, ஃபீலிங் மட்டும்தான் கிடைக்கும். `முரட்டு சிங்கிள்டா நாங்க... எங்க பாவம் சும்மா விடாதுடாவ்வ்வ்!’னு மைண்ட் வாய்ஸ் கதறும்.

*  கடைசி வருஷம் புராஜெக்ட் ஒர்க்னு ஒண்ணு பண்ணச் சொல்லுவாங்க. ரெடிமேடா காசு கொடுத்து வாங்கி அதை அப்படியே போயி இறக்கி வெச்சா... பரீட்சைக்கு வர்ற எக்ஸ்டர்னல், ``வர்ரே வாவ்... இதுவல்லவோ புராஜெக்ட். அப்துல் கலாம் அவதரித்துவிட்டார்!’’ங்கிற ரேஞ்சுக்கு எதையாச்சும் அள்ளிவிட்டு அவார்டெல்லாம் கொடுத்துட்டுப் போவாங்க.
 
இன்ஜினீயரிங் படிச்சு முடிச்சபிறகு  நடக்குற கூத்துகள்:

*  ரெஸ்யூம்னு ஒரு வஸ்துவை ரெடி பண்றதுக்கு தினுசு தினுசா மெனக்கெடுவாங்க.  ஒட்டுமொத்த கிரியேட்டிவிட்டியையும் அதுல கொண்டுபோய் வைப்பாங்க. உண்மையிலேயே அதுல சொல்லப்பட்டிருக்கிற திறமைகள் ஒருத்தனுக்கு இருந்தா இந்தியா எப்பவோ வல்லரசாகியிருக்கும். புருடா விடலாம். ஆனா  இப்படி ஏக்கர் கணக்குல விடக்கூடாது! 

கற்றது பி.ஈ!

*  ``ரீவேல்யூஷன் போட்டே மொத்தக் காசையும் அழிச்சிட்டடா.... இனி சொத்துல சல்லிக்காசு கிடையாது!’’ - வீட்டில் இப்படிச்  சொன்னாலும் சொல்லுவாங்க. ஏன்னா, ரீவேல்யூஷனுக்குத் துட்டு வாங்கியே ஒரு யுனிவர்சிட்டி பெருசா பெருசா  பில்டிங் கட்டுறாங்களாம்!

*  ``இப்படி வீட்டுக்குள்ளயே முடக்கிட்டுக் கெடந்தா எப்படி? நாலு இடத்துக்கு உன் பையனை இன்டெர்வியூவுக்குப் போகச் சொல்லு! வயிறு பத்தி எரியுது!’’னு `ரெயின்போ காலனி’ காலத்துக்கே டைம் மெஷின்ல கூட்டிட்டுப் போவாரு அப்பா. சோனியா அகர்வால் கிடைக்குறதெல்லாம் சினிமாவுல மட்டும்தான் பாஸ்!

*  ``ஏன்டா, சும்மாதானே இருக்கே... இந்தக் கேரட்டை நறுக்கிக் கொடேன்’’னு அம்மா சொல்ல ஆரம்பிச்சு, அப்படியே, ``கேஸ் தீந்துடுச்சு. நீ போயி மாமா வீட்டுல சிலிண்டர் தூக்கிட்டு வாடா!’’னு எடுபிடி வேலை பார்க்க அனுப்பிடுவாங்க. பிராண சங்கடம்!

*  ``அண்ணா, எனக்கு கால்குலஸ் சொல்லிக் கொடுக்குறீங்களா?’’னு டவுட்டு கேட்டு வருவான் ப்ளஸ் டூ படிக்கிற பக்கத்து வீட்டுப் பையன். `கால்குலஸா..! எனக்கு ஆறாம் வாய்ப்பாடே ஒழுங்கா தெரியாதுடா பக்கி. கடன் வாங்கிக் கழித்தலே மறந்துபோச்சு!’னு மைண்ட் வாய்ஸ் மானாங்காணியா கதறி அழும். எதிர்வீட்டுப் பாட்டி தன் பங்குக்கு எரியுற நெருப்புல எரிசாராயம் ஊத்திட்டுப் போகும். ``இங்கிலீஷ்ல பேசுறாங்கப்பா... கொஞ்சம் என்னன்னு கேட்டுச் சொல்லு!’’னு செல்போனைக் காதுல வெச்சுட்டு ரியாக்‌ஷனைப் பார்க்கும். அப்புறமென்ன...`ஐ கேன் டாக் இங்கிலீஷ், வாக் இங்கிலீஷ் தான்!’னு சமாளிக்க வேண்டியிருக்கும். 

*  ஒரு வருஷம் ரெண்டு வருஷம்னா பரவாயில்லை. ஆறு வருஷமா வேலை வெட்டி இல்லாம ‘ஐ.ஏ.எஸ் படிக்கப்போறேன்’, ‘குரூப் 1 எழுதப்போறேன்’னு புருடா விட்டா எப்படிப் பொறுத்துக்குவாங்க. கடைசியில, ``சினிமாதான் என்னைப் போட்டுத் தாக்கிப் புரட்டி எடுக்குது!’’னு ஹஸ்கி வாய்ஸில் கௌதம் மேனனாய் மாறி, குறும்பட இயக்குநராகி டயலாக் விடுவாங்க நம்ம பசங்க.

 ``வெளக்கமாறு பிஞ்சிரும்!’’ என்ற வார்த்தைக்கு முன்னால் அதுவும் வலுவிழந்து ஏதோவொரு கால்சென்டரில் கண்விழித்து வேலை பார்க்க வைக்கும் அந்த `பேச்சுலர் ஆஃப் இன்ஜினீயரிங்’ டிகிரி.  அவ்வ்வ்!

ஆர்.சரண் - ஓவியங்கள்: ரமணன்