
அட்ரஸைச் சொல்லுடா!
இப்போதெல்லாம் அடிக்கடி ஏதாவது ஒலித்துண்டை அவிழ்த்துவிட்டு, அண்ணனின் மானத்தை அரிசிக்கப்பலில் ஏற்றிவிடுகிறார்கள் முன்னாள் மானத்தமிழ் தம்பிகள். எல்லாம் முப்பட்டானுக்கு முந்தைய தலைமுறை வரை தோண்டி எடுத்து, பச்சை, பச்சையாய் நோண்டி நொங்கெடுக்கும் பச்சைத் தமிழர்களின் பதிவுகள். இந்த தினுசான, நவீனரகத் தாக்குதலைச் சமாளிக்க, அண்ணனுக்குச் சில யோசனைகளை ஆமைக்கறி தின்றுகொண்டே சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்..! சிந்திக்கணும் எம் உறவுகளே..!

சொல்வதற்கோ, சமாளிப்பதற்கோ எந்தக் காரணமும் இல்லாட்டி, இருக்கவே இருக்கிறது இலுமினாட்டி. ஏற்கெனவே, பகிரியில் பாரிசாலன் பகிர்ந்திருந்த படங்களை எல்லாம் பிரின்ட் அவுட் எடுத்துவந்து, `பாபா’ முத்திரையை வட்டம் போட்டுக்காட்டி “இது இலுமினாட்டிகளின் முத்திரை” என முகத்தை உக்கிரமாய் வைத்துக்கொண்டு பேசிய வரலாறு நம்மிடம் இருக்கிறது. அதனால், “அலைபேசியைக் கண்டுபிடிச்சது யாரு, அலைபேசி கோபுரங்கள் ஏன் முக்கோண வடிவத்துல இருக்கு. `சிவாஜி’ படத்தின் இறுதிக்காட்சியில ‘அலைபேசி பொத்தானை அமுக்கிடுவேன்’னு ஏன் ரஜினி தீயவனை மிரட்டணும்? எல்லாம் சிந்திக்கணும்” என நான்கைந்து வண்ண பிரின்ட்-அவுட்களை எடுத்து விட்டால்போதும், தம்பிகள் `இது இலுமினாட்டிகளின் சதி’ என நம்பிவிடுவார்கள். பிறகு, அண்ணனுக்கு சாதகமாய் இணையத்தில் தீவிரமாய்க் களமாடத் தொடங்கிவிடுவார்கள்.

முன்னாள், இன்னாள் தம்பிகள் அத்தனை பேரிடமும் அட்ரஸ் (எ) முகவரியைச் சேகரித்து, கணினியில் பதியும் வேலையை வேகமாக அண்ணன் தொடங்க வேண்டும். அட்ரஸ் இல்லாமல் போனதுதான், ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் சமீபத்திய பிரச்னையின் ஆணி வேர். ஆக, முன்னாள், இன்னாள் தம்பிகள் யாராவது அலைபேசியில் அழைத்துக் கழுவி ஊற்றத் தொடங்கினால், கணினியில் இருக்கும் முகவரியை உடனே எடுத்துக்கொண்டு, `தம்பி, உன் அட்ரஸ் எங்ககிட்டே வந்துடுச்சு. உன் வீட்டு முன்னாடி உடனே போய்ப் பாரு ராஜா’ என கிலி கிளப்பலாம். பதறியடித்துப் போய்ப் பார்ப்பார்கள். ஆனால், நாம் ஒன்றும் செய்யப்போவதில்லை, வீட்டு வாசலில் குட்டி ஆமை பொம்மை ஒன்றை வைக்கப்போகிறோம். அந்த ஆமையைப் பார்க்கும் தம்பிகள், ஒன்று, பழைய நினைவுகளை நினைத்துக் கண்ணீர் வடிப்பார்கள். அல்லது `ஆமை புகுந்த வீடு விளங்காதே’ என டரியல் ஆவார்கள். இரண்டில் எது நடந்தாலும், மகிழ்ச்சிதான். புவாஹாஹாஹா...

அலைபேசியில் பேசினால்தானே அதைப் பதிவுபோட்டு, பகிரியில் பகிர்ந்து, தேரை இழுத்துத் தெருவில் விடுகிறார்கள். ஆக, இனி “அண்ணனைத் தொடர்புகொள்ள நினைப்பவர்கள் கடிதங்கள் மூலமாகவோ நம் புராதன முறைப்படி ஓலைகள் மூலமாகவோ மட்டுமே தொடர்பு கொள்ளலாம்” என அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாம். இப்படிச் செய்வதால் வசவுகளின் விகிதாசாரம் உண்மையில் குறையும். நாமும் கடிதங்களை எல்லாம் கழுதைக்கு உணவாய்க் கொடுத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிடலாம். அல்லது அண்ணன் அன்றாடம் பயன் படுத்தும் சில தமிழ் வார்த்தைகளுக்கே அர்த்தம் புரியாமல் முழிக்கிறார்கள் பொதுமக்கள். அதனால், இடைச்சங்க காலத்தில் புழக்கத்தில் இருந்த கெட்டவார்த்தைகளைக் கண்டறிந்து, அவற்றைக் கொண்டு அண்ணன் திட்ட ஆரம்பித்தால்போதும். ஒரே கல்லில் மூணு மாங்காய். ஒன்று, அண்ணன் திட்டுகிறார் என்பதே யாருக்கும் புரியாது. அப்படியே புரிந்தாலும் தமிழ் ஆர்வத்தைக் கண்டு வியப்பார்கள், அண்ணனுக்கும் ஆசைதீரத் திட்டிய மனநிறைவு கிடைக்கும்.

“ஏகே 74-ல சுட்ட முதல் இந்தியனே நான்தான்”, “40 ஆயிரம் டன் அரிசியைச் சுமந்து வந்த ஆஸ்திரேலியக் கப்பலைச் சுட்டுப் பழகினேன்” என, காசா பணமா, பல கதைகளைக் கரியாய் அள்ளிப்போட்டி ருக்கிறார் அண்ணன். தம்பிகளும் சிலிர்த்துப்போய் சில்லறையை விட்டெறிந் திருக்கிறார்கள். ஆக, அடுத்த வாரம் நடக்கும் ஒரு கூட்டத்தில், “இப்படித்தேன் நான் இலங்கைக்குப் போயிருக்குறப்போ, அங்கே ஒரு சிங்களவன் தினமும் எனக்கு போன் பண்ணி கிரெடிட் கார்டு வாங்கிக்கோ, லோன் வாங்கிக்கோன்னு டார்ச்சர் பண்ணிகிட்டு இருந்தான். இதைப் போய் அங்கிருந்த சில அண்ணன்கள் கிட்டே சொன்னேன். அப்படியா, இனி இந்த போன்ல பேசு. எதிர்ல பேசுறவனைப் பிடிக்கலைனா இந்தக் கறுப்புப் பொத்தானை அமுக்கிடுன்னு சொன்னாங்க. மறுபடியும் அவங்கிட்டே இருந்து போன் வந்தது, பொத்தானை அமுக்கினேன். திடீர்னு எங்கிருந்தோ ஒரு ஏவுகணை வந்து அவனைத் தாக்கிட்டுப் போயிடுச்சு. புவாஹாஹாஹா! அந்த போன்தான் இப்போ எங்கிட்ட இருக்கு” எனக் குட்டிக் கதை ஒன்றைச் சொல்லிவிட்டால் போதும். முன்னாள், இன்னாள் தம்பிகள் யாராய் இருந்தாலும் அண்ணனை அலைபேசியில் அழைக்க அரண்டு போவார்கள்.
-ப.சூரியராஜ்
ஓவியங்கள்: பிரேம் டாவின்சி