என் விகடன் - கோவை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - மதுரை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
Published:Updated:

சினிமா விமர்சனம் : நண்பன்

நண்பன்
பிரீமியம் ஸ்டோரி
News
நண்பன்

விகடன் விமர்சனக் குழு

ந்தியக் கல்வி முறையை 'மாத்தி யோசி’க்கச் சொல்லும்  நம்ம 'நண்பன்’!

 அவசியமான, அர்த்தம் உள்ள, அழுத்தமான மெசேஜ் சொல்லும் இந்தி 'த்ரீ இடியட்ஸ்’ படத்தைத் தமிழுக்குத் தந்ததற்காக ஷங்கருக்கு நன்றி. பிரபலமான பொறியியல் கல்லூரியில் படிக்க வருகிறார்கள் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த். 'மதிப்பெண்களும் வெற்றியும் மட்டுமே பிரதானம்’ என வலியுறுத்தும் சிடுமூஞ்சி கல்லூரி முதல்வர் சத்யராஜ். திணிக்கப்படும் இந்த அழுத்தங்களால் மாணவர்களின் வாழ்க்கை எப்படித் திசை மாறுகிறது? விஜய் நடத்தும் அறிவுக் களேபரங்களால் சத்யராஜ் மாறினாரா? இந்த நண்பர்களின் வாழ்க்கை என்னவானது?  

ஒரிஜினாலிட்டி மாறாமல் செதுக்கி இருப்பதில் படம் முழுக்கப் பளிச்சிடுகிறது ஷங்கரின் அக்கறை.

சினிமா விமர்சனம் : நண்பன்

நிஜமாகவே மாறுபட்ட விஜய். குறும்பு கொப்பளிக்கும் ஸ்மார்ட் மாணவன் பாரிவேந்தனாகப் பிரமாதம் பண்ணுகிறார். 'அவனா நீ?’ என்று கிண்டல் வாங்கி, அனுயாவிடம் அறை வாங்கி, நண்பர்களிடம் உதை வாங்கி, இமேஜை எல்லாம் உடைத்து நடிகனாக மிளிரும்போது... வெல்டன் விஜய்!

பென்சில் மீசை, வழுக்கையை மறைக்கும் ஒன் சைடு ஹேர் ஸ்டைல், எச்சில் தெறிக்கும் உச்சரிப்பு எனப் படத்துக்கு இன்னொரு ஹீரோ சத்யராஜ். மாணவனின் தற்கொலைக்குப் பின்பும்கூட மனம் மாறாத அழுத்தமான ஆள், அனுயா பிரசவத்துக்குப் பின் மாறும் இடத்தில் நெகிழடிக்கிறார்!  

இழுத்துக்கொண்டு கிடக்கும் அப்பா, முதிர் கன்னி அக்கா என ஜீவா குடும்பத்தின் ப்ளாக் அண்ட் வொயிட் எபிசோட் செம ஜாலியான... ஆனால், நெஞ்சில் அறையும் சோகம். மருத்துவமனையில் உயிருக்குப் போராடும்போது, 'டேய் உங்க அக்காவுக்கு மாப்பிள்ளை கிடைச்சிட்டாருடா’ என்று ஸ்ரீகாந்த்தை விஜய் காட்ட, 'ஓவராப் புளுகாதடா’ என உடையும்போது ஜீவா... ஆஹா!

அப்பாவிடம் தன் கேரியருக்காக உருகும்போது மனதில் ஒட்டிக்கொள்கிறார் ஸ்ரீகாந்த். சத்யனுக்கு இது செம சிக்ஸர் படம். 'ஹேய்... தோத்தாங்கோலிஸ்...’ என்று நண்பர்களைக் கலாய்ப்பதாகட்டும் அடிக்கடி 'பல்பு’ வாங்குவதாகட்டும்... தலைவா யூ ஆர் கிரேட்!

இலியானா... செம ஒல்லியானா. ஊட்டச் சத்து குறைந்த குழந்தை மாதிரி ஒல்லிப்பிச்சு உடம்பில் பரிதாபப்படவைக்குது பொண்ணு.

சினிமா விமர்சனம் : நண்பன்

படம் முழுக்க ஷங்கர் - மதன் கார்க்கியின் அழகான வசனங்களின் ஆதிக்கம். ஆனா, என்னாச்சு ஹாரிஸ்..? 'என் ஃப்ரெண்டைப் போல யாரு மச்சான்’ பாடலைத் தவிர எதுவும் பெரிதாக ஈர்க்கவில்லை. இந்தப் படத்தில் குத்துப் பாட்டு எல்லாம் எதுக்குங்க? படத்துக்கு எக்கச்சக்கமாக இளமை சேர்க்கிறது மனோஜ் பரமஹம்சாவின் பிரமாதமான ஒளிப்பதிவு!

படத்தில் எதற்கு எடுத்தாலும் ஆளாளுக்கு பேன்ட்டை கழற்றிக் காட்டும் ஜட்டி போஸ்... கண்ல அடிக்குது பாஸ்!

அந்த முதிர் கன்னி அக்காவின் துயரங்களையும் வறுமையில் வாடும் நோயாளிகளையும் இவ்வளவு தூரம் கேலி செய்தது... தப்பு. காதல், நட்பு துறந்து ஏன் விஜய் சொல்லாமல் போனார் என்பதற்கு வலுவான காரணம் இல்லையே..?

ஆனாலும் எந்திரத்தனமான நமது கல்வி முறையைச் சாடும் நல்ல நண்பன்!