விகடன் விமர்சனக் குழு
##~## |
காதலை 'ஹாபி’யாகக்கொண்ட நாயகன்... காதல் 'ஃபோபியா’ கொண்ட நாயகி... இருவருக்கும் இடையிலான காதல் 'லீலை’!
முகம் பார்க்கும் முன் முட்டி மோதிக் கடுப்படிக்கும் ஷிவ் பண்டிட்டும் மானசி பரேக்கும் (இருவருமே அறிமுகங்கள்), முதல் பார்வைக்குப் பின் காதல்கொள்கிறார்கள். காதல், கல்யாணத்தை நோக்கி நகரும் கட்டத்தில்... 'நான் உன்கிட்ட ஒரு உண்மையை மறைச்சுட்டேன். அது என்னன்னு கேட்காத. நாம பிரிஞ்சுடலாம்’ என்று சொல்லி விலகுகிறார் ஷிவ். அது என்ன உண்மை... பிரிந்தவர்கள் சேர்ந்தார்களா?
காதல் - ஈகோ கூட்டணியை மட்டுமே நம்பிக் களம் இறங்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆண்ட்ரு லூயிஸ்.

சாஃப்ட்வேர் இன்ஜினீயர் தோற்றத்துக்கு ஷிவ் பண்டிட் கச்சிதம். ஆனால் சிநேகம், கோபம், பிரிவு, துயரம், காதலுக்கான உணர்ச்சிகள்... ம்ஹூம்! இத்தனைக்கும் 'கார்த்திக்’ - 'சுந்தர்’ என்று வெவ்வேறு உடல்மொழிக்கான ஸ்கோப் உள்ள கேரக்டர். குரலை மாற்றும் மெனக்கெடல்கூட இல்லையே நண்பா. ஷிவ்விடம் நல்ல லுக். அதனால், அடுத்த முறைக்கு இப்போதே பெட்டர் லக்!
ஷாப்பிங் மால் திருப்பத்தில் எதிர்ப்படும் ஏஞ்சலாக வசீகரிக்கிறார் மானசி பரேக். காருக்கு அருகில் 'கார்த்திக் இருக்கிறான்’ என்று தெரிந்ததும் கொடுக்கும் ரியாக்ஷன் ஆகட்டும், கல்லூரித் தோழிகளைப் பார்த்தவுடன் ஷிவ்வைத் தள்ளிவிட்டு தோழிகளைக் கட்டிப் பிடிப்பதாகட்டும், வேறு வழியே இல்லாமல் 'கார்த்திக்’கிடம் சுந்தரின் சைக்காலஜி கேட்பதாகட்டும்... பார்க்கப் பார்க்கப் பிடிக்கவைக்கிறார். ஷிவ்வை மிரட்டிக்கொண்டே இருக்கும் தோழியாக சுஹாசினியிடம் அந்த இயல்பே ஈர்ப்பு.
'உனக்கு ஹர்ட் ஆகக் கூடாதுனு நீ அவளை விட்டுட்டு வந்துட்ட... அப்ப அது அவளுக்கு ஹர்ட் ஆகாதா?’, 'நீ எத்தனையோ தப்பு பண்ற. அதை நீ மன்னிச்சுடற. ஆனா, இன்னொருத்தர் தப்பு பன்ணா... அதை மன்னிக்க முடியலை. ஏன்?’ - திகீர் திருப்பங்களோ ஜிலீர் ரசனையோ இல்லாதபடத்தில் இப்படியான வசனங்களே கொஞ்சம் சுவாரஸ்யம். கார்த்திக் சீண்டிவிடுவதாலேயே, சுந்தரிடம் மானசி நெருங் குவது... ஜாலி கேலி திருப்பம்!
'ஜில்லென்று ஒரு கலவரம்’, 'ஒரு கிளி ஒரு கிளி’ பாடல்களின் இசையில் மென்மையாக ஸ்கோர் பண்ணுகிறார் சதீஷ் சக்கரவர்த்தி. ஆங்... அப்புறம் கடந்த வெள்ளிக்கிழமை கோட்டாவுக்கு இந்தப் படத்தில் தலைகாட்டி இருக்கிறார் சந்தானம். காமெடியா..? அடப் போங்க பாஸ்... சும்மா காமெடி

பண்ணிக்கிட்டு.
அத்தனை ஷார்ப் மானசி 'கார்த்திக், சுந்தர்’ இருவருக்குமான வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் கடைசி வரை 'அப்பாவி’யாக இருப்பதும்... அந்த கேரக்டரையே காலி செய்கிறதே. படம் முழுக்க செல்போன், லேண்ட்லைன், காயின் பூத், ஹாஸ்டல் போன் என விதவிதமாக, ரகம்ரகமாக யாரேனும் எப்போதும் போனில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
நாலே கேரக்டர்கள், இரண்டே லொகேஷன்கள், மெதுவாக... மிக மெதுவாக நகரும் திரைக்கதை, சுவாரஸ்யமான வசனங்கள்கொண்ட சற்றே பெர்ர்ர்ரிய குறும்படம்!