என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

பஸ்டர் கீட்டன்!

எஸ்.கலீல்ராஜா

##~##

ஸ்டர் கீட்டன் தெரியுமா? தெரிந்திருந்தால் நீங்கள் அவருடைய ரசிகராக இருப்பீர்கள். தெரியாவிட்டால், இனிமேல் அவருடைய ரசிகராக மாறிவிடுவீர்கள்!

 ஹாலிவுட்டின் மௌன சகாப்தத்தில் சார்லி சாப்ளினுக்கு இணையாக இருந்த, ஆனால் காலத்தால் மறக்கப்பட்ட கதாநாயகன் பஸ்டர் கீட்டன். சார்லி சாப்ளின் வளைந்து நெளிந்து விழுவது பார்த்து கண்ணீர் மல்கச் சிரித்திருப்போம். ஆனால், பஸ்டர் படங்களைப் பார்த்தால், சாப்ளின் செய்தது வெறும் 50 சதவிகிதம்தான் என்போம். அப்படி என்றால் பஸ்டர் ஏன் தோற்றார்... சாப்ளின் எப்படி ஜெயித்தார்?  

ஹாலிவுட்டில் மௌன சகாப்தம் (சைலன்ட் எரா) என்று அழைக்கப்படும் 1894 - 1929 காலகட்டத்தில் பிறந்தவர் கீட்டன் (1895). அப்பா, மேடை நாடக நடிகர். பஸ்டன் ஒன்றரை வயதுக்  குழந்தையாக இருந்தபோது, படிக்கட்டில் தலைகுப்புறக் கவிழ்ந்து விழுந்துவிட்டார். வீட்டில் உள்ளவர்கள் பதறிச் சென்று பார்த்தால், சின்ன சிராய்ப்புகூட இல்லாமல் சிரித்தார். 'தட் வாஸ் எ ரியல் பஸ்டர்!’ என மகனைப் பார்த்து அப்பா சொல்ல, அதில் இருந்து 'பஸ்டர்’ என்கிற வார்த்தை கீட்டனுடன் ஒட்டிக்கொண்டது.

பஸ்டர் கீட்டன்!

எப்படி விழுந்தாலும் அடிபடாத எலாஸ்டிக் உடம்பு தனக்கு இருப்பதைத் தெரிந்துகொண்டார் பஸ்டர். ஐந்து வயதிலேயே அப்பாவோடும் சகோதரர்களோடும் மேடை ஏறி நடிக்க ஆரம்பித்தார். தனது ரப்பர் உடம்பையே காமெடி ஆக்கினார். தன் பேச்சைக் கேட்காத மகனை அப்பா வழிக்குக் கொண்டுவருவதுதான் நாடகத்தின் கதையாக இருக்கும். மக்கள் சிரிப்பதற்காக பஸ்டரைக் கண்டபடி தூக்கி எறிந்தார் அப்பா. அதில் சிறுவன் பஸ்டர் இரண்டு விஷயங்களைக் கற்றுக்கொண்டான். ஒன்று... எப்படி விழுந்தால் அடிபடாது; இன்னொன்று... எப்படி விழுந்தால் மக்கள் சிரிப்பார்கள்!

சில படங்களில் சில்லறை கேரக்டர்கள் செய்த பின் 1920-ல் ஹீரோவானார் பஸ்டர் கீட்டன். காமெடி, பாடி இரண்டையும் மூலதனமாகவைத்து இரண்டு ரீல் படங்களாக நடித்துத் தள்ளினார். இயக்கம், காமெடி திரைக்கதை எல்லாம் அவரே. பஸ்டர் நடித்த படங்கள் எல்லாமே 'ப்ளாக் பஸ்டர்ஸ்’!

'ரிஸ்க்... மேலும் மேலும் ரிஸ்க்’ என ஸ்லாப்ஸ்டிக் காமெடியில் அடுத்தடுத்த நிலைகளுக்குச் சென்றார் பஸ்டர் கீட்டன். ஒருமுறை கீழே விழுந்ததில் அவரது கழுத்து எலும்பு முறிந்தது. ஆனால், அதை மிகத் தாமதமாகத்தான் உணர்ந்தார். இரண்டு கார்களில் காலை வைத்துப் பயணித்து, நடுவில் எதிரில் வரும் மோட்டார் சைக்கிளில் தாவுவது, ஓடும் ரயிலுக்கு முன்னால் ஓடுவது என அவர் நடித்த ஒவ்வொரு காட்சியும் ஆச்சர்யமூட்டிச் சிரிக்கவைத்தன!

1929-ல் மௌனப் படங்களின் காலம் முடிவுக்கு வந்தது. இந்த வருடம் ஆஸ்கர் விருதுகளை அள்ளிய 'தி ஆர்ட்டிஸ்ட்’ படத்தில் வருவதுபோல, அப்போதைய பல ஹீரோக்கள் பேசி நடிக்க விரும்பவில்லை. ஆனால், ஸ்டுடியோக்கள் பேசும் படங்களில் பிடிவாதமாக நின்றன. அப்போது பேசும் படத்தை ஏற்காத இரண்டு ஸ்டார்களில் ஒருவர், சாப்ளின். இன்னொருவர், பஸ்டர் கீட்டன். சாப்ளினின் படங்கள் சிம்பிள் பட்ஜெட்டில் இருக்க, பஸ்டரின் படங்களோ ராக்கெட், பறக்கும் கப்பல், மிதவை பலூன் என அப்போதே மெகா பட்ஜெட்டில் இருந்தன. இதனால் ஸ்டுடியோக்கள் புரொடக்ஷன் மேனேஜர்கள்  மூலம் அவரை இறுக்கிப் பிடிக்க ஆரம்பித்தார்கள். இதனால் தனது கற்பனைத் திறனை பட்ஜெட்டுக்குள் சுருக்கிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம்!

பஸ்டர் கீட்டன்!

வேறு வழி இல்லாமல் பேசும் படங்களுக்கு மாறினார். நாடுகளுக்கு ஏற்றாற்போல ஒரே காட்சியையே ஆங்கிலம், ஸ்பானிஷ், ஜெர்மன், பிரெஞ்சு என்று  மாற்றி மாற்றி எடுத்தார். இதனால் எக்கச்சக்க நேர விரயம் மற்றும் பண விரயம். அவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்த 'வாட்... நோ ஃபியர்?’ படம் அதிரிபுதிரி ஹிட். இருந்தாலும் பேசும் பட டிரெண்டில் சமாளித்து நிற்க, மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது.

'வார்த்தைகள் சரியானபடி உணர்ச்சிகளைக் கொண்டுவருவது இல்லை’ என்று பேசும் படங்களைக் குறை சொன்னாலும், சார்லி சாப்ளின் சமயோ சிதமாக அந்தச் சூழ்நிலையைச் சமாளித்தார். குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்து ஹிட் கொடுக்க ஆரம்பித்தார். இதனால் பேசும் பட அலையில் சாப்ளினால் தப்பிக்க முடிந்தது. (கடைசியாக அவரும் 'தி கிரேட் டிக்டேட்டர்’ படத்தில் பேசி நடித்து மாற்றத்தை ஏற்றுக்கொண்டார்!)

உடல் சொன்னபடி வளைந்து குழைந்தாலும், எல்லாக் காட்சிகளிலும் பஸ்டர் கீட்டன் ஒரே மாதிரி முகத்தை வைத்து இருந்தார். அவருக்கு சாப்ளினைப் போல முக உணர்ச்சிகள் கடைசி வரை வரவே இல்லை. இதனால், மக்கள் அவரை 'கல் முகம்’ என்றார்கள். எளிய மனிதர்களை, அவர்களது பிரச்னைகளை கீட்டன் தொடவே இல்லை. 'என் நோக்கம் சிரிக்க வைப்பது மட்டுமே’ என்று பிடிவாதமாக இருந்தார்.

ஒரு கட்டத்துக்குப் பிறகு கீட்டன் பிராண்ட் காமெடி கசக்கத் தொடங்கி, ஹாலிவுட்டில் மவுசு குறைய ஆரம்பித்தது. மறுபுறம் திருமண வாழ்க்கையும் சரியாக அமையவில்லை. அடி மேல் அடியாக உடல்நிலையும் ஒத்துழைக்காததால் டி.வி. பக்கம் ஒதுங்கினார் பஸ்டர் கீட்டன்.

1952-ல் சார்லி சாப்ளினோடு 'லைம் லைட்’ படத்தில் சேர்ந்து நடித்தார். அதுதான் இருவரும் சேர்ந்து நடித்த முதலும் கடைசியுமான படம். அதன் பின் தொடர்ச்சியாக டி.வி. சீரியல்கள், மௌனப் படங்களில் கிடைத்த கேரக்டர்களில் நடித்தார். தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்பதைப் பற்றி அவர் அலட்டிக்கொள்ளவே இல்லை.

அவரது 70-வது வயதில் ஒரு படத்தில் நடித்தார். தீப்பிடித்த ஓர் இடத்தை ஓடித் தாண்ட வேண்டிய சீன். அவரது வயதைக் காரணம் காட்டி இயக்குநர் டூப் போடச் சொல்லிக் கேட்ட போது, 'நான் பஸ்டர் கீட்டன்’ என்றபடி இம்மி பிசகாமல் நெருப்பைத் தாண்டி அசரவைத்தார். 1966-ல் நுரையீரல் புற்று நோயால் தான் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்தபோதும்கூட, அவர் அதற்கு கவலைப்படவில்லை. இறப்பதற்கு முதல் நாள் வரை மருத்துவமனையில் நண்பர்களோடு சீட்டாடிக்கொண்டு இருந்தார். நிம்மதியாக இறந்தார்.

பஸ்டர் கீட்டன்!

பஸ்டர் கீட்டன் இறந்த பிறகு அவரது இன்னொரு வாழ்க்கை துவங்கியது. அவரது உடல்மொழியைக் கண்டு வியந்த அடுத்த தலைமுறை, அவரது படங்களை ஆவணமாக்கியது. ''கீட்டன்தான் உடல்மொழி காமெடியில் எனக்கு முன்மாதிரி.  அவரைப் பார்த்துதான் எப்படி அடிபடாமல் விழுவது, உடனே எப்படி எழுந்திருப்பது என்று கற்றுக்கொண்டேன்'' என்று மனம் திறந்து புகழ்ந்தார் ஜாக்கிசான்.

2002-ல் சைட் அண்ட் சவுண்ட் பத்திரிகை, உலகளாவியக் கருத்துக்கணிப்பு மூலம் பஸ்டர் கீட்டனின் 'தி ஜெனரல்’ படத்தை உலகின் 15-வது சிறந்த படமாகத் தேர்வுசெய்தது. அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் பஸ்டரை உலகின் தலைசிறந்த 21-வது நடிகராகத் தேர்ந்தெடுத்தது. இப்போது கீட்டனின் படங்கள் யூ-டியூப்பில் சக்கைப்போடு போடுகின்றன.

வாழ்நாள் முழுக்கச் சமரசம் செய்துகொள்ளாத கலைஞனாக, விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் ஓடிக்கொண்டே இருந்த பஸ்டர், தன் இறுதிக் காலத்தில் சொன்ன வார்த்தை இது... 'நிதானமாய் யோசி... வேகமாய்ச் செயல்படு!’