விகடன் விமர்சனக் குழு
##~## |
தூத்துக்குடியில் சுழலும் 'காதல்’ ராட்டினம்!
லகுபரன், ஸ்வாதி ( இருவரும் அறிமுகம்) காதலை இருவர் குடும்பமும் பிரிக்க நினைக்கிறது. காதல் ஜோடி ஓடிச் சென்று திருமணம் முடிக்க... இங்கு லகுபரனின் அண்ணன் கொலையாக... அதிர்ச்சி க்ளைமாக்ஸ்!
பள்ளிப் பருவக் காதலை எல்லை தாண்டாமல் கண்ணியமாகக் காட்டிய வகையிலும் அந்தப் பருவக் காதல்களின் முடிவு பெரும்பாலும் என்ன ஆகிறது என்பதை உண்மைக்கு மிக நெருக்கத்தில் சொன்ன விதத்திலும் நேர்த்தியான அறிமுகப் படைப்பில் கவனம் கவர்கிறார் இயக்குநர் தங்கசாமி.

விடலைத் திமிரும், கவுன்சிலர் வீட்டுப் பையனுக்கான அலட்சியமுமாக லகுபரன் அந்த கேரக்டருக்குக் கனகச்சிதம். போலீஸி டமும் ஸ்வாதியின் அண்ணனிடமும் அடி வாங்கும்போது பம்முவதும், தன் அண்ணனிடம் வீம்பு காட்டி முறைப்பதுமாக வயதுக்கு உரிய மேனரிஸங்களை அநாயாசமாக அள்ளித் தருகிறார்.
கொஞ்சம் காதல், நிறைய மிரட்சி எட்டிப் பார்க்கும் ஸ்வாதியின் கண்கள்தான் முன் பாதி முழுக்க கவன ஈர்ப்புத் தீர்மானம் வரைகிறது. ஆனால், இறுதி பதற்றப் பரபரப்புகளிலும் க்ளைமாக்ஸில் லகுபரனின் தந்தையை எதிர்கொள்ளும் இடத்திலும்... ஸ்வாதியிடம் இன்னும் தீயா வேலை வாங்கி இருக்கலாம்!
'ஜாடிக்கேற்ற மூடி’யாகத் தனக்கேற்ற பெண்ணை கரெக்ட் செய்யும் டீக்கடை பைக் இளைஞன், காதலில் சொதப்பிய பிறகு, 'இன்னைக்கு ட்ரீட் என்னுதுடா!’ என்று சலம்பும் நண்பன், அண்ணனை ஒரு பெண்ணுடன் ஹோட்டலில் பார்த்துப் பயப்படும் நண்பனிடம், 'உங்க அண்ணன்தாண்டா பயப்படணும்’ என்று.... இப்படிச் சில இடங்களில் மட்டுமே காமெடி!
தமிழ் சினிமாவின் முந்தைய 'காதல் கிளாஸிக்’குகள் பயணித்த பாதையிலேயே பயணிப்பதால், படத்தின் இறுதி வரை பேரதிர்ச்சியையோ பெரும் நிம்மதியையோ உண்டாக்கவில்லை திரைக்கதை. லகுபரனின் அண்ணனாக நடித்திருக்கும் இயக்குநர் தங்கசாமி, அவரது மனைவியாக வரும் ரேவதி, அரசாங்க வக்கீல் தருண், இரண்டு பக்கமும் தலையைக் கொடுத்து பஞ்சாயத்து பண்ணும் அண்ணாச்சி கனக சபாபதி என அனைத்து கேரக்டர்களும் முதலில் அமைதி காக்கவும், 'ஈகோ’ மோதல் ஆரம்பித்த பிறகு, ஒவ்வொருவரும் இயல்பு மாறுவதுமாக கிளை தாவும் இடங்களில் நிமிர்ந்து அமரவைக்கிறது அதே திரைக்கதை!

மனுரமேசன் இசையில் 'அவ்வளவு அழகு... அப்படியே நிலவு...’ பாடல் மட்டும் அழகு. பின்னணி இசை சமயங்களில் சூழ்நிலையைக் கலாய்த்துவிடுகிறது. ராஜ் சுந்தரின் ஒளிப்பதிவு இயல்பான கதைக்கு உறுத்தல் இல்லாமல் ஒத்துழைக்கிறது.
காய்ந்த பூ, குளிர்பான டின்னை வைத்து லகுபரன் சொன்ன பொய்களுக்காக மட்டுமே அத்தனை இழப்புகளுக்குப் பிறகும் காதலில் அவ்வளவு உறுதியாக இருக்கிறார் ஸ்வாதி. ஆனால், பிறகு எதற்கு அந்த க்ளைமாக்ஸ் மன மாற்றம்? 'பெண் மைனர்’ என்று இறுதியில் வாய்ஸ் ஓவரில் சொல்கிறார்கள். ஆனால், 'உங்க பொண்ணு அவனைக் காதலிக்கிறேன்னு சொல்லிட்டா, எல்லாமே போச்சு... அப்புறம் நீங்களே அவங்களுக்குக் கல்யாணம் பண்ணிவைக்கணும்!’ என்று காவல் நிலையக் காட்சிகளில் ஒன்றுக்கு மூன்று முறை அழுத்தமாகச் சொல்கிறார்களே. ஏன்? அந்த க்ளைமாக்ஸ் காட்சி மட்டும் 'அட’ போடவைக்கிறது!
'காதல்’ கதைதானே என்று 'விண்ணைத் தாண்டி’யெல்லாம் யோசித்துக்கொண்டு இருக்காமல், 'நாடோடி’ நண்பர்களுடன் 'ராட்டினம்’ ஏறியிருக்கிறார்கள்!