என் விகடன் - திருச்சி
என் விகடன் - மதுரை
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

'எங்க வீட்டுப் பிள்ளை' 'நினைத்தாலே இனிக்கும்' மீண்டும் பார்க்கலாம்!

நா.கதிர்வேலன்படங்கள் உதவி : ஞானம்

##~##

'கர்ணன்’ - 1964-ல் வெளியானதைக் காட்டிலும், சமீபத்தில் டிஜிட்டல் மெருகேற்றி வெளியிடப்பட்டபோது இந்தப் படம் உண்டாக்கிய அதிர்வுகள் அதிகம். நாஸ்டால்ஜியா உணர்வுகளுக்கு டிஜிட்டல் கோட்டிங் கொடுத்த அந்த ட்ரெண்ட், இப்போது ரீமேக் ஜுரத்தில் வந்து நிற்கிறது. 'தில்லுமுல்லு’, 'மன்மத லீலை’ போன்ற 'எவர்க்ரீன் கிளாஸிக்’ படங்களை இப்போதைய நடிக - நடிகையர்களை வைத்து மீள் உருவாக்கம் செய்யும் முயற்சி களில் தடதடக்கிறது கோடம்பாக்கம். ஆனால், ஒற்றைப் பாடல் ரீ மேக்குகளுக்கே கொடி பிடிக்கும் கிளாஸிக் பிரியர்கள், '  ரீ மேக் வேண்டாம்... வேண்டுமானால் டிஜிட்டல் பொலிவு கொடுங்கள்’ என்று லாபி செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். சரி, அந்த விவகாரத்தை விடுவோம்... 'இப்போது டிஜிட்டல் பொலிவு கொடுக்கலாம் என்றால், உங்கள் டாப்-5 சாய்ஸ் படங்கள் எவை?’ என்று சீனியர் / ஜூனியர் 'மாஸ்டர் இயக்குநர்கள்’ சிலரிடம் கேட்டோம். அவர்களின் டிஜிட்டல் சாய்ஸ் இங்கே...  

 மகேந்திரன்

'எங்க வீட்டுப் பிள்ளை' 'நினைத்தாலே இனிக்கும்' மீண்டும் பார்க்கலாம்!

''கிளாஸிக் அந்தஸ்து உள்ள படங்களை ரீ மேக் என்ற பெயரில் அவமானப்படுத்தாமல், டிஜிட்டல் பொலிவு சேர்க்கலாம். அதற்காக எல்லாப் படங்களுக்கும் டிஜிட்டல் மெருகு சேர்க்கத் தேவை இல்லை. தவிர்க்க முடியாத, இன்றைய தலைமுறையும் அவசியம் பார்க்க வேண்டிய படங்களுக்கு டிஜிட்டல் பொலிவு கொடுக்கலாம். எனக்கு 'கப்பலோட்டிய தமிழன்’ படத்தை இப்போதைய தலைமுறைக்குக் கொண்டுசேர்க்க ஆசை. 'எங்க வீட்டுப் பிள்ளை’, 'ஆதிபராசக்தி’, 'தில்லானா மோகனாம்பாள்’, 'ரத்தக்கண்ணீர்’ போன்ற படங்களின் தனித்தன்மை இப்போதைய படங்களில் அரிது!''

கே.எஸ்.ரவிக்குமார்

'எங்க வீட்டுப் பிள்ளை' 'நினைத்தாலே இனிக்கும்' மீண்டும் பார்க்கலாம்!

'''300’னு ஹாலிவுட்காரன் வார் சினிமா எடுக்குறதுக்குப் பல காலம் முன்னாடியே நாம 'வீரபாண்டியக் கட்டபொம்மன்’ எடுத்துட்டோம். அப்படி ஒரு பிரமாண்ட படத்துக்குத்தான் டிஜிட்டல் கோட்டிங் கொடுக்கணும். தலைப்பு, சீன், பாட்டுனு 'ஆயிரத்தில் ஒருவன்’ இப்பவும் செல்லிங் சினிமா. 'அடிமைப் பெண்’ படத்தின் பாலைவனக் காட்சிகள் 'லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ டச்ல இருக்கும். 'நினைத்தாலே இனிக்கும்’, 'இளமை ஊஞ்சலாடுகிறது’ படங்களில் ரஜினி, கமலைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம். அதுலயும் 'நினைத்தாலே இனிக்கும்’லாம் இப்போதைய ஹிட் பாடல்களோட போட்டி போடுற மியூஸிக்கல் ட்ரீட்!''

பாலாஜி சக்திவேல்

'எங்க வீட்டுப் பிள்ளை' 'நினைத்தாலே இனிக்கும்' மீண்டும் பார்க்கலாம்!

''எனக்கென்னவோ டிஜிட்டல் பொலிவுக்குப் புராணப் படங்களும் வரலாற்றுப் படங்களும்தான் பொருத்தமா இருக்கும்னு தோணுது. 'நாடோடி மன்னன்’ படத்தில் ஒவ்வொரு ஃப்ரேமிலும் கம்பீரம் கலந்திருக்கும். அந்தப் படத்துல கதை சொல்லியிருக்குற விதம் சலிக்காது. ஒலி-ஒளி வசதிகள் இல்லாத அப்பவே, 'வேதாள உலகம்’ படம் மிரட்டி எடுத்துச்சு. இப்போ 3டி, டிஜிட்டல்னுலாம் மெருகேத்துனா, இங்கிலீஷ் படம்லாம் பக்கத்துல வராது. டிஜிட்டல் யுகத்துல எடுக்க வேண்டிய 'சந்திரலேகா’ படத்தை அப்பவே எடுத்திருக்காங்க. 'அந்த நாள்’, 'பொம்மை’ படங்களை டிஜிட்டல் கோட்டிங் வேற ஒரு பார்வையில் ரசிக்கவைக்கும்!''

ஏ.ஆர்.முருகதாஸ்

'எங்க வீட்டுப் பிள்ளை' 'நினைத்தாலே இனிக்கும்' மீண்டும் பார்க்கலாம்!

'' 'ஒளவையார்’ படத்தின் பிரமாண்டத்தை இப்போ நினைச்சாலும் ஆச்சர்யப்படுவேன். அதில் வர்ற 20 நிமிஷ ஊர்வலக் காட்சியை அந்தக் காலத்தில் எப்படி எடுத்திருப்பாங்கனு கற்பனைகூடப் பண்ண முடியலை. அதே மாதிரி 'உத்தமபுத்திரன்’. சிவாஜி அப்பவே ஸ்டைல்ல அடி பின்னி இருப்பார். 'பராசக்தி’ படத்துல இந்தத் தலைமுறை இளைஞர்களுக்கும் ஏகப்பட்ட செய்தி இருக்கு. 'குலேபகாவலி’ படத்தை டிஜிட்டல்ல பார்க்கப் பார்க்க பரவசமா இருக்குமே! 'சிவகங்கைச் சீமை’ படத்தில் எஸ்.எஸ்.ஆரின் துல்லிய வசனங்களும் போர்க்களக் காட்சிகளும் ஒவ்வொருத்தரையும் உசுப்பேத்தும்!''

கே.வி.ஆனந்த்

'எங்க வீட்டுப் பிள்ளை' 'நினைத்தாலே இனிக்கும்' மீண்டும் பார்க்கலாம்!

''பலர் பிரமாண்ட சினிமாக்களைத்தான் டிஜிட்டலில் பார்க்க ஆசைப்படுவாங்க. ஆனா, எனக்கு 'அபூர்வ ராகங்கள்’, 'உதிரிப்பூக்கள்’ படங்களை டிஜிட்டலில் பார்க்க ஆசை. 'அபூர்வ ராகங்கள்’ படத்தின் கலகல மிருதங்கக் காட்சிகளை இப்போதைய ஒலி அமைப்பில் பார்க்கப் பேராவலா இருக்கு. 'அவள் அப்படித்தான்’ படத்தில் ரொம்பக் குறைவான வசனங்களுக்கு இடையில் ஒலிக்கும் பின்னணி இசைக்கு நிறைய அர்த்தம் இருக்கும். அப்போதைய வசதிகளை வெச்சுக்கிட்டே 'வஞ்சிக்கோட்டை வாலிபன்’, 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படங்கள்ல அசத்தி இருப்பாங்க. அதே யூனிட்டை இப்போதைய கேமரா, டிஜிட்டல் ஒலி-ஒளிப்பதிவோட படம் எடுக்கச் சொன்னா, நாங்கள்லாம் அம்பேல்தான்!''