
விகடன் விமர்சனக் குழு
தீவிரவாதிகளை வேட்டையாடும் ராணுவத் 'துப்பாக்கி’!
ராணுவ வீரனான விஜய் விடுமுறைக்கு மும்பைக்கு வந்த வேளையில், ஒரு திருடனைப் பிடிப்பதற்கு பதில் தீவிரவாதியைப் பிடித்துவிடுகிறார். அவனிடம் இருந்து தொடர் குண்டுவெடிப்புத் திட்டத்தைத் தெரிந்துகொண்டு, தன் ராணுவ நண்பர்களைத் துணையாகக்கொண்டு 'ஸ்லீப்பர் செல்’நபர்களை ரகசியமாக வேட்டையாடுகிறார். மொத்த நெட்வொர்க்கையும் இயக்கும் 'மாஸ்டர் மைண்ட்’ வில்லன் தன் சகாக்களைக் கொன்ற ரகசியத் துப்பாக்கி யார் என்று தேடும் முயற்சியில், பலர் உயிர்இழக்கிறார்கள். விஜய் தன்னையே பணயமாகவைத்து வில்லனைச் சந்திக்கச் செல்வது டிக்டிக் திக்திக் க்ளைமாக்ஸ்!
தியேட்டரைவிட்டு வெளியே வந்த பிறகு, 'இப்படி ஒரு ஆபரேஷன் நிஜத்தில் சாத்தியமா?’ என்று முட்டி மோதுகின்றன லாஜிக் சந்தேகங்கள். ஆனால், உள்ளே இருக்கும் வரை அப்படியான சந்தேகமே எழாத வகையில் பரபர திரைக்கதையால் அசரடிக்கிறது ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கம்.

'விஜய் மிலிட்டரியா?’ என்று சந்தேகத்தோடே அமர்ந்தாலும், விறைப்பும் முறைப்புமாக கேரக் டருக்கு அட்டகாசமாக உயிர் கொடுத்து இருக்கி றார் விஜய். நிதானமாகப் பேசிக்கொண்டேதீவிர வாதியின்கைவிரல்களைவெட்டும்போதும், சின்ன கத்தியை வைத்து மொத்தப் பேரையும் வீழ்த்தும்போதும் அனல் பட்டாசு. பன்ச் வசனம் பேசாமல், அதே சமயம் மிகவும் ஸ்டைலாக அப்ளாஸ் அள்ளுகிறது விஜயின் மேனரிசங்கள்!
காஜல்... செம ஜில். ஆனால், கவர்ச்சிப் பாடல்களுக்கு மட்டுமே அழகி டெடிகேடட்!
விஜய்க்குச் சவால் கொடுக்கும் செம க்ளெவர் ப்ளஸ் டெரர் வில்லனாக வரும் வித்யுத் ஜம்வால், தீர்க்கமான பார்வையிலேயே மிரட்டுகிறார்.
காமெடிக்கு என வலிந்து திணிக்கப்பட்ட ஜெயராமைவிடவும் அதிரிபுதிரி காமெடிசெய் கிறது சத்யனின் கதாபாத்திரம். தன் மேல் அதிகாரிகளுக்குக்கூடத் தெரிவிக்காமல், விஜய் சொல்வதை அப்படியே கேட்டு அவர் நடப்பது செம சீரியஸ் காமெடி!
என்னதான் 'ஸ்லீப்பிங் செல்’களுக்கு தங்கள் தலைவர் யார் என்று தெரிந்து இருக்காவிட்டாலும், தங்களுக்கு உத்தரவிடுபவர் யார் என்று தெரியும்தானே... ஆனால், அதைக்கூட கேட்டுத் தெரிந்துகொள்ள ஆசைப்படாமல், அனைவரையும் சுட்டே சாகடிக்கிறார் விஜய்.

'கூகுள்... கூகுள்’ பாடலில் மட்டுமே ஈர்க்கிறது ஹாரிஸின் இசை. மும்பையின் அழுக்கு, அழகு இரண்டையும் ஃப்ரெஷ் லுக்கில் தருகிறது சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு.
பயங்கரவாதிகள் என்றால் அவர்கள் சிறுபான் மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக மட்டுமே இருப்பார்கள் என்று சித்திரிக்கும் பொது புத்தி உச்சத்துக்குச் சென்று இருக்கிறது 'துப்பாக்கி’யில். அதிலும் சிறுபான்மையினர் குடும்பங்களும் பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்வதாகக் காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பது வேதனை.
லாஜிக் மேஜிக் பார்க்காவிட்டால், இந்த அளவு இம்ப்ரெஸ் செய்ய முடியும் என்றால், இப்படியான இன்னொரு விஜய் படத்துக்கு...
'வி ஆர் வெயிட்டிங்’!