Published:Updated:

ஆன்மிக அவதாரம்!

சிம்பு சீக்ரெட்ஸ் க.ராஜீவ் காந்தி

##~##

டந்த வாரத் தமிழ் சினிமாவின் பரபரப்பு... சிம்பு. 'வாலு’, 'வேட்டை மன்னன்’ என இரண்டு படங்களில் நடித்து வந்தவர், தடாரென அந்த ட்வீட் தட்டினார்... ''ஸாரி ஃப்ரெண்ட்ஸ்... 'வாலு’, 'வேட்டை மன்னன்’ ஆகிய இரண்டு படங்களும் டிராப் ஆகிவிட்டன. வேறு ஏதேனும் நல்ல புராஜெக்ட்டோடு உங்களைச் சந்திக்கிறேன்!'' அந்த ட்வீட் உண்டாக்கிய பரபரப்புக்கு விடை காண்பதற்குள் மீண்டும் கிளம்பியதொரு சிம்பு சென்சேஷன்... சிம்பு இமயமலைக்குச் சென்றதும், காவி காஸ்ட்யூமில் திரிந்ததுமான படங்களோடு, 'இனி ஆன்மிகம் தான்’ என்று அவர் முடிவெடுத்துவிட்டதுமான செய்திகள்!

அப்போது சிம்புவிடம் பேசியபோது, ''ஆமாங்க... ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு. அதான் ஆன்மிகத்துல கான்சன்ட்ரேட் பண்றேன். தியானமும் ஆன்மிகப் பயணமும்தான் எனக்கு என்னையே அடையாளம் காட்டுது. ஆன்மிகம்னா, சும்மா கோயில் குளத்துக்குப் போறது மட்டும்தான்னு நினைச்சுட்டு இருக்காங்க. ஃபைண்டிங் நாலெட்ஜ்தான் ஆன்மிகத்தின் அடிப்படை. அதாவது ஞானம் தேடுதல்!

இங்கே பனிமலையில் இருந்து வரும் தூய்மையான காத்தே அவ்வளவு ஃப்ரெஷ்ஷா இருக்கு. கடவுள் எனக்குத் தேவையான புகழைக் கொடுத்திருக்கார். போதும்கிற அளவுக்குப் பணமும் இருக்கு. எல்லாத்துக்கும் மேல, ரசிகர்கள் ஆதரவு இருக்கு. இனி, பணம் சம்பாதிக்கிறது முக்கியமில்லை. சினிமால இருந்து ஓய்வெடுக்கலாமானுகூட யோசிக்கிறேன்!'' என்றார்.

ஆன்மிக அவதாரம்!

''சும்மா இதுவும் ஒரு ரஜினி ஸ்டைல் ஸ்டன்ட்டா?'' என்ற கேள்விக்கு,

''இல்லை. என் அப்பாவே தீவிர ஆன்மிகவாதிதான். ஆஞ்சநேய பக்தர். ஆனா, இதுல சூப்பர் ஸ்டார் ரஜினியை ஃபாலோ பண்ணாலும் ஒண்ணும் தப்பில்லையே!'' என்று எதிர்க் கேள்வி கேட்டார்.

ஆனால், கோடம்பாக்கக் குருவிகள் 'வாலு’, 'வேட்டை மன்னன்’ படங்களின் தயாரிப்புத் தரப்போடு சிம்புவுக்கு ஏற்பட்ட கசமுசா காரணமாகவே 'ஆன்மிகத்துக்கு மாறிவிட்டேன்’ என்ற சிம்பு சீனுக்குக் காரணம் என்று காதைக் கடித்தார்கள். அதற்கேற்ப அந்தப் படங்களின் ஷூட்டிங்கையும் கண்டுகொள்ளவில்லை சிம்பு. 'தொடர்ந்து முறுக்கிக்கொண்டிருந்தால், இதுவரையிலான செலவும் வீணாகிவிடுமே’ என்று தயாரிப்புத் தரப்பு சமாதானம் பேச, சிம்பு இப்போது மீண்டும் லௌகீக வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டார்.

''என்னங்க... அதுக்குள்ள ஆன்மிகத்துல இருந்து லௌகீகத்துக்கு  யுடர்ன் அடிச்சுட்டீங்க?'' என்று கேட்டேன்.

ஆன்மிக அவதாரம்!

''எனக்கு சினிமாவில் நடிச்சுதான் சம்பாதிக்கணும்னு இல்லை. ஆனா, எனக்குப் பணம், புகழ், பேர் கொடுத்த ரசிகர்களை மறக்க முடியுமா? அவங்களுக்காக நான் தொடர்ந்து படங்கள்ல நடிக்கிறதுனு முடிவு பண்ணிட்டேன். அதோடு, இந்த மினி ஆன்மிகப் பயணமே என்னைப் பண்பட்ட பக்குவப்பட்ட மனுஷனா மாத்தியிருக்கு. 'வாலு’, 'வேட்டை மன்னன்’ படங்கள்ல நடிக்க வேண்டாம்னு நான் முடிவெடுத்ததைக்கூட வாபஸ் வாங்கிட்டேன். அந்த அளவுக்கு எனக்கு மெச்சூரிட்டி அதிகமாயிருச்சு. அந்த ரெண்டு படங்களையும் விறுவிறுனு நடிச்சுக் கொடுத்துருவேன்!'' என்றார்.

வீட்டில் திருமணத்துக்கு வற்புறுத்தல், இரண்டு பட ஷூட்டிங் பஞ்சாயத்து... இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் ஒரே கல்லில் தீர்வு காணவே ஆன்மிக மாங்காயை சிம்பு கையில் எடுத்தார் என்கிறார்கள் அவரது பார்ட்டி நண்பர்கள்!

அட, அதையும் பப்ளிக்குட்டி பண்ணிட்டாப்லயே!