க.நாகப்பன்
##~## |
‘ஆட்டோகிராஃப்’, 'காதல்’, 'வழக்கு எண் 18/9’ படங்களை ரசனை ஓவியமாக மனதில் பதியச்செய்த ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், 'கோலி சோடா’ மூலம் மீண்டும் இயக்குநர் இருக்கையில் அமர்கிறார்!
''பட ஸ்டில்களைப் பார்த்தா 'பசங்க’ பார்ட் 2 மாதிரியே இருக்குதே... ஆனா, அதென்ன 'கோலி சோடா’?''
''இந்தப் படத்தில் 'பசங்க’ பசங்க நடிச்சிருக்காங்களே தவிர, அந்தப் படத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் கிடையாது. ஒரு கோலி சோடாவில் 200 மில்லி தண்ணி இருக்கும். சாதாரணமா பார்த்தா அது வெறும் தண்ணிதான். ஆனா, அதுக்கு அழுத்தம் கொடுத்தா, அதுவரையிலான இயல்பை மீறி ஒரு விஷயம் பீறிட்டு வரும். 'இந்தத் தண்ணியிலா இவ்வளவு ஃபோர்ஸ் இருந்தது?’னு ஆச்சர்யப்படுவோம். அப்படிச் சாதாரணமா இருக்கிற நாலு பசங்களுக்கு பிரஷர் கொடுக்கும்போது, தொடர்ந்து தொந்தரவு பண்ணும்போது, அவங்க எப்படி அடிச்சு, உடைச்சு வெளியே வர்றாங்கனு சொல்ற படம்தான் 'கோலி சோடா’!''


''இந்தப் படத்துக்கு ஏன் 'பசங்க’?''
''மீசை சின்னதா அரும்பி நிக்கிற 16 வயசுப் பசங்க வேணும். மூட்டை தூக்கித் தூக்கி அவங்க உடம்பு இறுகி இருக்கணும். அந்த மாதிரி கோயம்பேடு மார்க்கெட்ல மூட்டை தூக்கும் நாலு பசங்களைப் பிடிச்சோம். ஒரு பையனை நடிக்கவெச்சோம். மறுநாளே ஆளைக் காணோம். போன்ல ஆளைப் பிடிச்சா, 'அண்ணா... நான் புதுக்கோட்டைல இருக்கேன். வெங்காயம் பிசினஸ் சீஸன். வர ஒரு மாசம் ஆகும்ணே’னு சொல்றான். இப்படித்தான் நம்ம வாழ்க்கை எதுன்னு தெரியாம, பசங்க பலர் ஓடிட்டு இருக்காங்க. ஒரு நாள் இயக்குநர் பாண்டிராஜ்கிட்ட கதை சொல்லிட்டு,

நடிக்கவைக்கப் பசங்க கிடைக்காத சிக்கலையும் சொன்னேன். ' 'பசங்க’ படத்துல நடிச்ச பசங்க இப்போ வளர்ந்து இருப்பாங்க. அவங்க நாலு பேரையும் நடிக்கவைக்கலாம். நானே வசனம் எழுதுறேன்’னு ஆர்வமா முன்வந்தார். அந்த நாலு பேரும் நான் எதிர்பார்த்த லுக்ல இருந்தாங்க. ரெண்டு, மூணு நாள் மார்க்கெட்ல என்ன நடக்குதுன்னு கவனிச்சவங்க, அவங்க பாட்டுக்கு வேலை செஞ்சு மார்க்கெட் பசங்களாவே ஆகிட்டாங்க. 'நல்லா நடிக்கணும்டா’னு சொன்னா, 'எங்களுக்கு ஐஸ்க்ரீம் வாங்கித் தருவீங்களா அங்கிள்’னு மட்டும் கேட்பாங்க. இந்தப் பசங்களைச் சந்தோஷப்படுத்த ஒரு ஐஸ்க்ரீம் போதும்!''

''பசங்கன்னாலே கேலி, கலாட்டாவா இருக்குமோ?''
''ஜாலியா இருப்பாங்க. அதே சமயம் படத்தில் ஒவ்வொரு கேரக்டரும் சென்சிபிளா இருக்கும். அவ்வளவா லட்சணமில்லாத ஒரு பொண்ணை 'அட்டு மேட்டர்’னு அர்த்தம் வர்ற மாதிரி 'ஏ.டி.எம்’னு பட்டப் பேர்வெச்சுக் கூப்பிடுவாங்க இந்தப் பசங்க. ஒரு கட்டத்துல அது அந்தப் பொண்ணுக்குத் தெரிஞ்சிரும். 'நான் நல்லாப் படிக்காம நீங்க என்னை மக்குனு சொன்னா, நான் வருத்தப்படுவேன். ஏன்னா, அது என் தப்பு. ஆனா, நான் அழகா இல்லாததுக்கு நானா காரணம்? அது என் தப்பில்லையே! நான் தப்பு பண்ணாதப்போ, நான் ஏன் வருத்தப்படணும்?’னு சொல்லுவா. பசங்களுக்கு 'அழகு’ன்னா என்னன்னு புரிஞ்சுபோகும். அப்புறமும் அந்தப் பொண்ணை 'ஏ.டி.எம்’னுதான் கூப்பிடுவாங்க. ஆனா, இப்போ அதுக்கு அர்த்தம் 'அழகிய தமிழ் மகள்’. இப்படிப் படத்தின் ஒவ்வொரு வசனத்திலும் அடுக்கிலும் நேர்மையை விதைச்சிருக்கோம்!''