க.நாகப்பன்
##~## |
கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என 12 வருடங்களாகப் பறந்து பறந்து நடித்தாலும் என்றென்றும் இளமையாக மின்னுகிறார் சித்தார்த்.
''நான் இப்போ ரொம்பச் சந்தோஷமா இருக்கேன். நடிகனுக்கு பிஸியா இருக்கிறதைவிடப் பெரிய சந்தோஷம் எதுவும் இருக்க முடியாது. அதுவும் தமிழ்ல பரபரப்பா இருக்கேன். 'காதலில் சொதப்புவது எப்படி’, 'உதயம்’ படங்களுக்கு அப்புறம் 'தீயா வேலை செய்யணும் குமாரு’ ரிலீஸ் ஆகப்போகுது. அடுத்து வசந்தபாலன் டைரக்ஷன்ல 'காவியத் தலைவன்’, 'பீட்சா’ கார்த்திக் சுப்பு ராஜ் இயக்கத்துல ஒரு படம் நடிக்கிறேன்!''
''அநேகமா ஜெனிலியா, தமன்னா, டாப்ஸி, த்ரிஷா, இலியானா, ஹன்சிகான்னு தென்னிந்தியாவின் அத்தனை ஹீரோயின்களுடனும் நடிச்ச ஹீரோ நீங்களாத்தான் இருக்கும்...''

''அத்தனை பேர்லயும் எனக்கு ஜெனிலியாதான் ஃபேவரைட். நல்ல பொண்ணு. அவங்க கல்யாணத்துக்குப் பிறகும் நல்ல ஃப்ரெண்ட்ஷிப்ல இருக்கோம். இதனால மத்த ஹீரோயின்கள் கோச்சுக்க வாய்ப்பிருக்கு. ஆனா, 'அவங்க என் முதல் பட ஹீரோயின். அந்த சென்டிமென்ட்’னு சொல்லிச் சமாளிச்சிடலாம். எப்படி?''
''திடீர்னு நடுவுல சம்பந்தமே இல்லாம 'மிட்நைட் சில்ட்ரன்’ படத்துல வித்தியாசமா நடிச்சிருந்தீங்களே?''
''சல்மான் ருஷ்டியின் நாவலை அருமையான சினிமா ஆக்கியிருந்தாங்க. படத்துல எனக்கு சின்ன ரோல்தான். ஆனா, வில்லன் கேரக்டர். இங்கேதான் 'சாக்லேட் பாய்’னு சொல்லிச் சொல்லி என்னைச் சாவடிக்கிறாங்க. அதை உடைக்கணும்னுதான் அப்படிலாம் வித்தியாசமான ரோல்ல நடிக்கிறேன்!''
''ரொம்ப ஓப்பனா இருக்கீங்களே?''
''அது ஒண்ணும் தப்பில்லையே! இப்போ எனக்கு 34 வயசு. ஒரு சினிமா ஹீரோவா என் வயசை எப்பவுமே நான் மறைச்சதே இல்லை. 1979 ஏப்ரல் 17... இதுதான் என் பிறந்த நாள். நான் எப்பவுமே ஒரு ஓப்பன் புக்தான்!''
''சமந்தா... காதல்... கல்யாணம்?''
'' 'நீங்க அந்தப் படத்துல ஏன் நல்லா நடிக்கலை’னு கேளுங்க. நான் பதில் சொல்றேன். நான் நடிச்ச படம் பார்த்துட்டுத் திட்டுங்க... இல்லை குட்டுங்க! நான் கேட்டுக்கிறேன், தப்பைத் திருத்திக்கிறேன். ஆனா, பெர்சனல் லைஃப்பத்தி எதுவும் பேச வேணாமே! என்கூட யார் இருக்காங்க, என் பெட்ரூம்ல என்ன இருக்குனு கேட்காதீங்க ப்ளீஸ்! என் கல்யாணத்தைப் பத்தி நான் ரெண்டு பேருக்கு மட்டும்தான் சொல்லக் கடமைப்பட்டு இருக்கேன். அது எங்க அப்பா, அம்மா. நான் அவங்ககிட்ட சொல்லிக்கிறேன்!''