சினிமா
Published:Updated:

“அந்தத் தனிமை ஓநாய் நான்தான்!”

டி.அருள் எழிலன்

##~##

“தனித்து வாழும் பனி ஓநாய்களை 'லோன் வுல்ஃப்’னு சொல்வாங்க. அதையே என் பட கம்பெனிக்குப் பேரா வெச்சேன். 'இந்தப் பேரை மாத்தினாதான் நீ நல்லா இருப்ப’னு நண்பர்கள் சொன்னாங்க. நான் நல்லா இருந்தாத்தானே கெட்டுப்போறதைப் பத்திக் கவலைப்பட முடியும்! இப்போ தமிழ் சினிமால நானும் ஒரு தனித்து விடப்பட்ட ஓநாயாத்தான் வாழ்ந்துட்டு இருக்கேன். இந்தத் தனிமை எனக்குப் பிடிச்சிருக்கு!''

- முன்னைப் போல இல்லை. தன்மையாகப் பேசுகிறார் மிஷ்கின். ஆனால், அப்போதும் இப்போதும் உண்மை மட்டுமே! 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை முழுக்கவே இரவில் நிகழும் சம்பவங் களாக இயக்கிக்கொண்டிருக்கிறார். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்க்கும் மிஷ்கின், நண்பர்களையும் சந்திப்பதில்லை.

'' 'முகமூடி’ படம் வெளியான பிறகு, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சினிமா வாழ்க்கையிலும் ஏகப்பட்ட பிரச்னைகள். பணப் பிரச்னையும் மனச் சுமையும் அழுத்துச்சு. அந்தப் பாரத்தை இறக்கிவைக்கத் தான் இந்தப் படம் இயக்குறேன். என் அலுவலகத்தை அடமானமாவெச்சு கடன் வாங்கி இந்தப் படம் செய்யிறேன். சென்னைக்கு வரும்போது எதுவும் இல்லாம வந்தேன். இப்போ எல்லாத்தையும் இழந்த பின்னாடி திரும்பவும் ஒரு புள்ளியில் இருந்து ஆரம்பிக்கிறேன். நம்பிக்கை மட்டும் ஏகமா இருக்கு!''  

“அந்தத் தனிமை ஓநாய் நான்தான்!”

'' 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’... என்ன தளம்?''

''இரவும் பகலுமான ஒரு நாளில் ஒரு மனிதனின் வாழ்க்கைதான் கதை. 'நந்தலாலா’ சாயலில் ஒரு பயணம். ஆனால், இது எதிர்த் திசைப் பயணம். அதிகாலைத் தூக்கில் தொங்கப்போகிறவன், அதற்கு முந்தைய இரவில் காந்தியாகவும் புத்தனா கவும் மாறும் ஈரமான கதை. முந்தைய எல்லாப் படங்களையும்விட அதிக உழைப்பைக் கொடுத்து உருவாக்கிட்டு இருக்கேன்!''  

“அந்தத் தனிமை ஓநாய் நான்தான்!”

''உங்களைப் பத்தி கோடம்பாக்க வட்டாரத்தில் என்ன பேசிக்கிறாங்கனு தெரியுமா?''

'' 'திமிர்பிடித்தவன், அகம்பாவக்காரன், மன நோயாளி’... இப்படித்தானே?! சினிமா வில் எனக்கு நண்பர்களே இல்லை. இதை ரொம்ப வேதனையோடு சொல்றேன். நான் என் மனைவியைப் பிரிஞ்சு வாழ்றேன். இது என் மகளுக்கும் தெரியும். ஆனா, என் செல்ல மகள் ஒரு நாள்கூட, 'அப்பா ஏம்பா வீட்டுக்கு வர்றதே இல்லை’னு கேட்டதில்லை. அவ்வளவு நாகரிகமா அவள் வளர்ந்திருக்கிறாள். யாரோட படுக்கை அறைக்குள்ளும் நான் எட்டிப் பார்த்ததில்லை. ஆனா, என் ஜன்னல் வழியே என்னைக் கண்காணிக்க ஆசைப்படுறாங்க. நான் அவங்களுக்காக என் கதவுகளையே திறந்து வெச்சிருக்கேன். வெல்கம் ஆல்!''

''சசிகுமார், பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி... இவங்கள்லாம் உங்களோட நெருங்கிய நண்பர்கள் ஆச்சே?''

''ஆமாம்... என்னோட மிகச் சிறந்த நண்பர்கள். ஆனா, இப்போ அவங்க நினைச்சாலும் என்னைத் தொடர்புகொள்ள முடியாது. ஏன்னா, மொபைல், இன்டர்நெட்னு எல்லா தகவல் தொடர்பு வசதி களில் இருந்தும் நான் ஒதுங்கி இருக்கேன். என் உதவி இயக்குநர்களோ, புரொடக்ஷன் மேனேஜரோகூட என்னை நினைச்சபோதெல்லாம் தொடர்புகொள்ள முடியாது. பொது நிகழ்ச்சிகளில் கருத்துச் சொல்லவோ, திருமண, துக்க நிகழ்வுகளில் கலந்துகொள்வதையோ கண்டிப்பா தவிர்த்துடுறேன். சினிமா செய்யும்போது மட்டும் ஒரு சினிமாக்காரனா இருந்துட்டு, அப்புறம் என் புத்தகங்களோடு வாழ ஆசைப்படுறேன்!''

''இந்தப் படத்திலாவது இளையராஜாவின் இசையை முழுமையா பயன்படுத்துவீங்களா?''

''இந்தப் படத்துக்கு இசையமைக்கணும்னு கேட்டு அவரைப் போய்ப் பார்த்தப்போ, 'அவமானப்படுத்துறதுக்காகவே என்கிட்ட வர்றியா’னு கேட்டார். நான் சொன்னேன், 'என் அம்மாவும் நீங்களும் ஒரே நாளில் இறந்தால், நான் உங்களைத் தான் பார்க்க வருவேன்’னு! அதுதான் உண்மை. காதல், காமம், பசி, வன்மம் என என் எல்லா பருவங் களையும் இளையராஜா

“அந்தத் தனிமை ஓநாய் நான்தான்!”

மூலமே கடந்திருக்கிறேன். அவர் என்னை அடித்தாலும், நல்ல சினிமாவுக்காக நான் மீண்டும் அவரிடமே செல்வேன்!''

''குறும்பட இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் ஆளுமை செலுத்துகிறார்களே... கவனிக்கிறீர்களா?''

''நான் ஒன்றரை வருஷமா சினிமாவே பார்க்கிறதில்லை. எல்லாருக்கும் வாழ்த்து கள். யாரையும் அளந்து விமர்சிக்கும் தகுதி யும் எனக்கு இல்லை. இன்னும் நாற்பது வருஷத்துக்குள்ள ஒரு நல்ல சினிமா எடுத்திருவேன்னு நம்புறேன். அதுவரை ஒரு குழந்தையைப் போல தத்தித் தத்தி நடந்து பழகிட்டு இருப்பேன்!''