எஸ்.கலீல்ராஜா
##~## |
“ ‘சிங்கம்’ பட வெற்றியைத் தாண்டி அந்த துரைசிங்கம் கேரக்டர் எல்லார் மனசிலும் அழுத்தமா பதிஞ்சுட்டான். நானே துரைசிங்கத்தின் ரசிகன் ஆகிட்டேன். துரைசிங்கத்துக்கு இன்னொரு புரமோஷன் கிடைச்சா, அடுத்த லெவல்ல அவன் என்ன பண்ணுவான்னு யோசிச்சேன். ஹரி நிறைய நேரம் எடுத்துக்கிட்டு ஸ்க்ரிப்ட் பண்ணிட்டே இருந்தார். ஒருநாள் 'துரைசிங்கத்தை அடுத்த ஸ்டேஜுக்குக் கொண்டு போற மாதிரி கதை சிக்கிருச்சு’னு சொன்னார். அப்படி வந்ததுதான் 'சிங்கம் 2’!'' - உற்சாகமாகப் பேசுகிறார் சூர்யா.

''அடுத்தும் கௌதம் வாசுதேவ் மேனன், லிங்குசாமி படங்கள்னு செம ஸ்டாக் வெச்சிருக்கீங்களே?''
'' 'துருவ நட்சத்திரம்’ கௌதம் மேனன் ஸ்பெஷல் காதல் கதை. 'வாரணம் ஆயிரம்’ முதல் பாதி மாதிரி படம் முழுக்க இளமையா, இனிமையா இருக்கும். லிங்குசாமி படத்துல கதைக்கு உள்ளே இருக்கிற ஹீரோவா இல்லாம, கதையை நகர்த்துற ஹீரோவா நடிச்சிருக்கேன்!''
''இப்போ சின்ன பட்ஜெட், அறிமுக ஹீரோ- இயக்குநர் காம்பினேஷன் படங்கள்தான் ஜெயிக்குதே?''
''சினிமா, பிசினஸ் எதுவா இருந்தாலும் ஏழு வருஷத்துக்கு ஒருமுறை டிரெண்டு மாறும். அப்படி இப்போ இளைய தலைமுறை இயக்குநர்களுக்கான டிரெண்ட். அவங்க திறமைகளைப் பார்க்கிறப்போ சந்தோஷமா இருக்கு. வில்லத்தனத்தைக்கூட சீரியஸா பண்ணாம, ஜாலியா பண்றாங்க. நல்லா இருக்கு. ஆனா, இன்னொரு பக்கம் யோசிச்சா, 'வாழ்க்கையை ரொம்பச் சாதாரணமா எடுத் துக்கிறாங்களோ’னு தோணுது. எல்லா படத்துலயும் சர்வ சாதாரணமா டிரிங்க் பண்றாங்களேனு கவலையாக்கூட இருக்கு. குறுக்கு வழில போனா வாழ்க்கைல ஜாலியா இருக்கலாம்னு சொல்றப்போ பதறுது. இதுலாம் நிச்சயமா கவலைப்பட வேண்டிய விஷயம். ஒரு சினிமா ரெண்டரை மணி நேரம் தான் ஓடுது. ஆனா, அது ஏற்படுத்துற தாக்கம் வாழ்நாள் முழுக்க இருக்கும். ரசிகர்களைச் சரியான பாதையில் வழிநடத்த வேண்டிய பொறுப்பு சினிமாக்காரங்களுக்கு இருக்குனு நான் நினைக்கிறேன்!''
''அவ்வளவு வெரைட்டி ஹிட் கொடுத்துட்டே இருந்தீங்க... நடுவுல 'ஏழாம் அறிவு’, 'மாற்றான்’... ஏன் அந்தச் சரிவு?''
''ரெண்டு படங்களுமே பெரிய கான்செப்ட். வழக்கமான டிரெண்ட் தாண்டி பிடிச்ச ஐடியா. அது ஹிட் ஆகியிருந்தா, டிரெண்ட் செட்டரா இருந்திருக்கும். 'மாற்றான்’ல உலகத்தையே புரட்டிப்போட்ட ஒரு விஷயத்தைக் கையில் எடுத்தோம். ஒரு விளம்பரத்துக்குப் பின்னாடி எவ்வளவு அரசியல் இருக்கு. நாம எவ்வளவு ஜாக்கிரதையா இருக்கணும்னு சொல்ல நினைச்சோம். ஆனா, அந்தப் படத்துல 'அப்பாதான் மகனுக்கு வில்லன்’ங்கிறதைத் தமிழக ரசிகர்களால் ஏத்துக்க முடியலை. அஞ்சு பேரோட ஐடியா, ரெண்டு கோடிப் பேரை சரியா ரீச் ஆகலை. அதுதான் காரணம்!''

''தமிழில் இருந்து இந்தி போறதுதான் இப்போ டிரெண்ட். இந்திப் படங்களில் நடிக்க ஆசை இல்லையா?''
''இப்போ மணிரத்னம் சாரை எடுத்துக்கிட்டா அவருக்கு இன்னைக்கு வரைக்கும் ஒரு அசல் கிராமத்துப் படத்தை எடுக்கணும்னு ஆசை. ஆனா, அவர் நகரத்துப் பின்னணியில் வளர்ந்ததால, அப்படியொரு படத்தை எடுக்காமலே இருக்கார். அந்த ஆசைலதான் பாலா படங்களைப் பிரமிச்சுப் பார்க்கிறார். 'நந்தா’, 'பிதாமகன்’ படங்கள் பார்த்துட்டு 'எப்படி இவ்வளவு கேரக்டர்களை ரியாலிட்டியோட காட்டுறீங்க. உங்ககூட வேலை பார்க்கணும் மாதிரி இருக்கு’னு பாலாகிட்ட ஆச்சர்யமா கேட்டார். அப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒரு பலம். எனக்கு தமிழ்நாடு, தமிழ் சினிமா, தமிழ் மக்கள்தான் பலம். அதனால இங்கேயே இருக்க ஆசைப்படுறேன். ரெண்டாவது... இந்தியில் படம் பண்ண ஆசையோ, தேவையோ இப்போ எனக்கு இல்லை!''

''சமூக வலைதளங்களில் நடிகர்கள்தான் சகட்டுமேனிக்கு விமர்சிக்கப்படுகிறார்களே?''
''இங்கே எல்லாருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு. அதை நான் மதிக்கிறேன். சிலர் என் படங்கள் பார்த்துட்டு ரொம்ப நுணுக்கமா, ஆரோக்கியமா விமர்சிப்பாங்க. அதெல்லாம் படிச்சா, 'நம்மளை இவ்ளோ கவனிக்குறாங்களே’னு பதற்றம் வரும். எல்லாத்தையும் சரி செய்யணும்னு தோணும். அடுத்து கதை கேட்கிறப்போ, அந்த பாயின்ட்லாம் மனசுல ஓடும். அதே இடத்துல சிலர், டாய்லெட் சுவர்ல எழுதுற மாதிரி கேவலமா எழுதுறாங்க. அதையெல்லாம் படிச்சு எதுக்கு நேரத்தை வீணாக்கணும்? உருப்படியா நேரத்தைச் செலவழிக்க எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கே?!''