சினிமா
Published:Updated:

“ஹீரோயினா இருக்கிறது கஷ்டம்!”

ஆ.அலெக்ஸ் பாண்டியன்

##~##

லேகா வாஷிங்டன்... 'நமக்கு இப்படி ஒரு பொண்ணு இருந்தா நல்லா இருக்குமே’ என்று பெற்றோர்களையும், 'நமக்கு இப்படி ஒரு லவ்வர் இருந்தா நல்லா இருக்குமே’ என்று பேச்சுலர்களையும் 'அட் எ டைமில்’ ஏங்கவைத்த 'மாடர்ன்’ சினேகா... நடுவுல கொஞ்ச வருஷமா ஆளையே காணோம்!

''ஒரே வருஷத்துல சினிமால இருந்து எஸ்கேப் ஆகிட்டீங்களே லேகா?''    

''ஒரே வருஷமா? ஹலோ... நான் பதினாலு வருஷமா சினிமால இருக்கேன். 'காதலர் தினம்’ படத்துல சின்ன கேமியோ பண்ணதுதான் சினிமாவில் என் அறிமுகம். அப்போ எனக்கு வயசு 14. ஸ்கூல் படிச்சுட்டு இருந்தேன். அப்புறம் ஸ்கூல் டிராமாக்களில் நடிக்கும்போது நடிப்பு ஆசை வந்துடுச்சு. ஆனா, சினிமா, ஹீரோயின்னுலாம் நினைச்சுப் பார்க்கலை. நடிக்கணும்... அவ்வளவுதான்! தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாக்கள், குறும்படங்கள்னு நடிச்சுட்டுத்தான் இருந் தேன். ஆனா, சினிமா நான் எதிர்பார்த்த மாதிரி இல்லை. அதனால, நானும் அதுல கான்சன்ட்ரேட் பண்ணலை!''

''சிம்பு கூட ஒரு படம் நடிச்சதோட ஒதுங்கிட்டீங்களே... அப்படி என்ன கசப்பான அனுபவம்?''  

''மத்த ஹீரோயின்கள்கிட்ட கேக்குற மாதிரி என்கிட்ட கேள்வி கேட்காதீங்க. எல்லா ஹீரோக்களுடனும் நடிக்கணும்னு நான் சினிமாவுக்கு வரலை. நல்ல கதை, சூப்பர் ஸ்க்ரிப்ட், நல்ல

“ஹீரோயினா இருக்கிறது கஷ்டம்!”

டீம்னா நடிப்பேன். மத்தபடி அஜித், விஜய், சூர்யா, ஆர்யா, சிம்பு கூடல்லாம் நடிக்கணும்னு எனக்கு ஆசை இல்லை. சும்மா ஒரு பந்தாவுக்காகச் சொல்லலை. நிஜத்துல அதுதான் என் கேரக்டர். ஆனா, அந்த கேரக்டர் சினிமாவுக்கு செட் ஆகலை. வேற வேலை பார்த்துட்டு இருந்தேன். இப்போ என் ரியல் கேரக்டருக்கு செட் ஆகிற மாதிரி ஒரு கேரக்டர் 'கல்யாண சமையல் சாதம்’ படத்துல கிடைச்சது. ரொமான்டிக் காமெடிப் படம். அதைவிட முக்கியம்... புத்திசாலித்தனமான, அழகான, தைரியமான பொண்ணா நடிக்க வேண்டிய கேரக்டர். என் நிஜ கேரக்டரும் அதானே... ஈஸியா நடிச்சுட்டேன்!''

''ஹீரோயினா இருக்க ஆசை இல்லைனு சொல்றீங்களா?''

''ஆசை இல்லைனு சொல்ல முடியாது. ஆனா, இங்கே ஹீரோயினா இருக்க ரொம்பக் கஷ்டமா இருக்கு. நடிக்க ஆரம்பிச்சப்பவே, 'சினிமால உன்னால நிலைச்சு நின்னு சமாளிக்க முடியாது’னு சொன்னாங்க. அப்போ எனக்கு அது புரியலை. ஆனா, அனுபவம் அவங்க சொன்னதுதான் உண்மைனு புரியவெச்சிருச்சு. ஆனா, எல்லா ஹீரோயின்களையும் ரசிப்பேன். அதுல ரீசன்ட்டா தமன்னாவை ரொம்பப் பிடிக்குது. ரொம்ப க்யூட்ல அவங்க?''

''மும்பைலயே செட்டில் ஆகிட்டீங்களே... ஏன்?''

''அங்கே ஒரு டிசைனிங் கம்பெனி நடத்துறேன். அதை நடத்துறதுக்காகவே டபுள் மாஸ்டர் டிகிரி பண்ணேன். ஒரு விஷயத்தை டிசைன் பண்ணி நமக்குப் பிடிச்ச மாதிரி ரிசல்ட் கொண்டுவர்றப்போ அவ்வளவு சந்தோஷமா இருக்கும். டிசைனிங் வேலைகள் போகத்தான் மாடலிங், ஆக்டிங்லாம் பண்ணிட்டு இருக்கேன். ஒரு சீக்ரெட் சொல்லவா? லேகா சீக்கிரமே ஒரு ஃபிலிம் இயக்கப்போறா! என் டிசைனிங் கம்பெனி நல்ல கிராஃப்ல போய்ட்டு இருக்கு. அதனால சீக்கிரமே ஒரு படம் இயக்கலாம்னு நினைக்கிறேன். 'இயக்குநர் லேகா வாஷிங்டன்’... சூப்பர்ல!''

“ஹீரோயினா இருக்கிறது கஷ்டம்!”

''சமீபத்திய சந்தோஷம், வருத்தம் என்ன?''

''இந்தில 'பவர்’னு ஒரு படத்தில் அமிதாப் பச்சன் கூட நடிச்சிருக்கேன். அவர்கூட நடிச்சது என் லைஃப்ல மறக்க முடியாத சந்தோஷம். ஆனா, அமிதாப் கூட நடிச்சிருக்கேன்னு நான் யார்கிட்ட சொன்னாலும் நம்ப மாட்டேங்குறாங்க. அதுதான் என் வருத்தம். இதுதான் லாஸ்ட்... இனி, யார்கிட்டயும் அமிதாப் கூட நடிச்சிருக்கேன்னு நானா சொல்ல மாட்டேன். எல்லாரும் படம் பார்த்துத் தெரிஞ்சுக்கட்டும்!''

''ஐ.பி.எல்-ல காம்பியரிங்லாம் பண்ணீங்க... அப்போ மேட்ச் ஃபிக்ஸிங் பத்திலாம் தெரிஞ்சிருக்குமே?''

''நான் உங்களுக்கு 'பை’ சொல்லி ஆறு மாசம் ஆச்சு!''