கொதிக்கும் ‘தெனாலி’ வடிவேலுக.ராஜீவ் காந்தி
##~## |
வந்துட்டான்யா... வந்துட்டான்!’ என்று வடிவேலு ரீஎன்ட்ரிக்கு நண்டு சிண்டுகள்கூட விசில் போட்டுக் காத்திருக்க, கடந்த வாரம் கிளம் பியது அந்தக் குபீர்த் தகவல்... 'வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்துவரும் 'தெனாலி ராமன்’ படம் டிராப்’! இயக்குநர் யுவராஜுக்கும் வடிவேலுக்கும் பிரச்னை என்று மேலும் மேலும் தகவல்கள் தந்தியடித்தன.
'என்னதான் நடக்கிறது?’ என்று தேடிப் போனால், 'தெனாலி ராமன்’ செட்டில் நீல நிறத்தில் அரசாடை தரித்து, கிரீடம், செங் கோலுடன் பந்தாவாக அமர்ந்திருக்கிறார் வடிவேலு. அருகில் அன்றைய மனைவி. கிருஷ்ணதேவராயருக்கு 36 மனைவி களாம். அதனால், 'தினம் ஒரு மனைவி’யுடன் படப்பிடிப்பு நடக்கிறது!
''அண்ணே... நீங்க என்கிட்ட எதுவுங் கேக்க வேணாம். வெளில என்ன பேசுறாய்ங்கன்னு எனக்கே நல்லாத் தெரியும். இந்தா... படத்தை 40 பெர்சன்ட் முடிச்சாச்சு. புரொடியூஸரும் படத்தைப் போட்டுப் பார்த்துட்டு, எகிடுதகிடா குஷியாகிட்டாரு. ரெண்டு வார ஷூட்டிங்லயே இம்புட்டுத் தூரம் இழுத்துட்டு வந்துட்டோம். அப்ப, எம்புட்டு ஸ்பீடுனு பார்த்துக்கங்க. எவன் என்ன பேசினாலும் காதுல வாங்காதீங்க. அய்யனாரும் அம்மாவும் துணை இருக்கிற வரைக்கும் இந்த வடிவேலு எதுக்கும் அசரமாட்டான்!''
''சரி... பிரச்னை இல்லாமலா புகையும்?''
''நம்ம டைரக்டர் தம்பிக்கும் ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் தம்பிக்கும் கொஞ்சம் முட்டிக்கிச்சு. அட, வாய்க்கா வரப்புத் தகராறு கணக்கா சின்ன சண்டைதேன். அதுல கோச்சுக்கிட்டு அந்த அசிஸ்டென்ட் தம்பி டைரக்டரை விட்டுட்டுப் போயிடுச்சு. இம்புட்டுத்தாண்ணே நடந்துச்சு. அதைக் கண்ணு, காது வெச்சுக் கௌப்பிவிட்டுட்டாய்ங்க. ஆனா, அருமையான தம்பிண்ணே நம்ம டைரக்டர் யுவராஜ் தம்பி. சின்னப் புள்ளையா இருந்தாலும் பெரிய அறிவாளிண்ணே. குண்டு குண்டுப் பொஸ்தகமா நெறையப் படிச்சுட்டே இருக்காப்ல!''

''பார்வதி ஓமனக்குட்டன்தானே முதல்ல ஹீரோயினா புக் ஆனாங்க..?''
''நான் ஒரு அழகான பொண்ணுகூட ஹீரோயினா நடிக்கிறதுகூட என் எதிரிகளுக்குப் பொறுக்கலைண்ணே..! அந்தப் புள்ளதான் ஹீரோயின்னு நியூஸ் வந்தவுடனே, ஒருத்தன் ரெண்டு பேர் இல்லண்ணே... ஒரு ரெண்டாயிரம் பேர் சேர்ந்து ஏதேதோ சொல்லி அந்தப் புள்ள மனசைக் கெடுத்து விட்டுட்டாய்ங்க. 'என்னங்க நீங்க.... அவருக்கெல்லாம் ஜோடியா நடிக்கிறீங்க’னு சில ஹீரோக்களே கேட்டிருக்காங்க. வடிவேலு கூட ஹீரோயினா நடிக்கிறது குத்தமாய்யா? ஆனா, இதையெல்லாம் தாண்டி அம்சமா வருவாண்ணே தெனாலிராமன்!''
''லேசா 'இம்சை அரசன்’ சாயல் இருக்குமோ படத்துல?''
''அந்தப் படத்தோட பாதிப்பு இத்துனுக்குண்டு கூட இருக்காதுண்ணே! அதுக்காவே ரொம்ப மெனக்கெட்டுருக்கோம். சாம்பிளுக்கு ஒரு சம்பவம் சொல்றேன்... கேளுங்க. ஹீரோயினா நடிக்கிற மீனாட்சி தீக்ஷித்ங்ற புள்ளைக்கு என்னை நல்லாத் தெரியும். என் காமெடி பார்த்துட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன்னுலாம் சொல்லுச்சு. 'தெனாலிராமன்’ கெட்டப்பு போட்டுக்கிட்டு அந்தப் புள்ளை முன்னாடி போயி நான் நிக்கிறேன். என்னை அது கண்டுக்கவே இல்லை. அடையாளமே தெரியலை. டைரக்டர் தம்பிகிட்ட போயி 'யார் இவரு’னு கேக்குது. 'ம்ம்ம்... நான்தாம்மா உனக்கு அப்பாவா நடிக்கிறேன்’னு நான் சொல்றேன். 'ஓ...ஓ.கே’னு தலையாட்டிக்கிட்டு நின்னுடுச்சு. அப்புறம் 'இவர்தாம்மா வடிவேலு’னு சொன்னா, அந்தப் புள்ளை நம்பவே இல்லை. கூட நடிச்ச புள்ளையே நம்பலைன்னா.... அண்ணே இதுக்கு மேல நானே பேசிக் காய்ச்சலைக் கூட்டக் கூடாது. படத்துல வடிவேலு ஒரு சீன்லகூடத் தெரிய மாட்டான். கிருஷ்ணதேவராயரும், தெனாலிராமனும்தான் தெரிவாங்க!''

''இப்ப தமிழ் சினிமால காமெடி ஜுரம்தான் அடிக்குது. சமீபத்துல வந்த காமெடிப் படங்களைப் பார்த்தீங்களா?''
''இப்ப வர்ற காமெடிலாம் சிரிக்கிற மாதிரியாண்ணே இருக்கு? நேரம் கிடைக்கிறப்பலாம் தலைவர் எம்.ஜி.ஆர். படங்களைப் பார்ப்பேன். அது கொடுக்கிற தன்னம்பிக்கையே டானிக்கு கணக்கா இருக்கும். ஆனா, இப்பமும் எந்த டி.வி வெச்சாலும் என் காமெடி மட்டும்தானே ஓடவிட்டுட்டே இருக்காங்க. மக்கமாருக அதைப் பார்த்துட்டுத்தானே துன்பந் துயரம் மறந்து சிரிச்சுட்டு இருக்காங்க. என்னை இன்னமும் ரசிச்சுப் பார்க்கிற ஒவ்வொரு குடும்பமும் என் குடும்பந்தேன். என்ன ஒண்ணு... அவங்க வீட்டு ரேஷன் கார்டுல என் பேர் இருக்காது... அம்புட்டுதேன்!''