ஸ்பெஷல் -1
சினிமா
Published:Updated:

தலைவா - சினிமா விமர்சனம்

தலைவா
பிரீமியம் ஸ்டோரி
News
தலைவா

மும்பை... தாராவி தமிழர்கள்... நல்லவர் ஒருவர் தாதா ஆவது... அவர் மகன் அடையாளம் தெரியாமல் வாழ்வது... அப்பா கொல்லப்பட, மகன் தாதாவாக... எதிரிகள் வேட்டையாடப்பட என... அதே களம், அதே தளம்

சம்பவம்-1: 'மினரல் வாட்டர்’ வாடிக்கையாளர்களிடம் தன்னை மாட்டிவிடும் விஜயிடம் சந்தானம்: ''நம்ம ஊர் அரசியல்ல சேர எல்லாத் தகுதியும் இருக்கு உனக்கு!''

சம்பவம்-2: மக்களுக்கு 'நல்லது’ செய்யத் தயங்கிக்கொண்டிருக்கும் விஜயிடம் ஒய்.ஜி.மகேந்திரன்: ''தலைவன்கிறது நாம தேடிப் போற விஷயம் இல்லை; நம்மைத் தேடி வர்ற விஷயம். உன்னை அவங்களுக்குத் தலைவன் ஆக கூப்பிடுறாங்க!''

மூன்று மணி நேரப் பொறுமையான கவனிப்புக்குப் பிறகு... 'தலைவா’ தடைக்குக் காரணமாக இருக்கலாம் என்று நாம் சந்தேகிக்கும் வசனங்கள் இவ்ளோதான். இனி விமர்சனம்...  

டான் அப்பாவின் டான்ஸ் பையன்'தலைவா’ ஆகும்... அதே கதை!

தமிழ் சினிமாவில் ஒரு டான் கதை எப்படி இருக்கும்?

மும்பை... தாராவி தமிழர்கள்... நல்லவர் ஒருவர் தாதா ஆவது... அவர் மகன் அடையாளம் தெரியாமல் வாழ்வது... அப்பா கொல்லப்பட, மகன் தாதாவாக... எதிரிகள் வேட்டையாடப்பட என... அதே களம், அதே தளம். கதாபாத்திரங்களில் மட்டும் சத்யராஜ், விஜயை நிரப்பினால்... 'தலைவா’!

இப்படியான விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காகவே டைட்டில் அறிவிப்பில், 'நாயகன்’ மணிரத்னம், 'சர்க்கார்’ ராம்கோபால் வர்மா போன்ற இயக்குநர்களுக்கு நன்றி சொல்லிவிடுகிறார் இயக்குநர் விஜய். 'செம ஷார்ப்’ சார் நீங்க!

தலைவா - சினிமா விமர்சனம்

படத்தைச் சுற்றியிருக்கும் அரசியலை விடுங்கள். விஜய்க்கு என்ன ஆச்சு? 'நண்பன்’, 'துப்பாக்கி’ என எக்ஸ்பிரஸ் சினிமா பயணத்தில் யுடர்ன் அடித்து, மீண்டும் பன்ச் பல்லக்கில் ஏறியிருக்கி றார். பின்பாதி முழுக்க 'தளபதி... தளபதி’ பில்டப் பாடலும் 'விஷ்வா பாய்’ புகழ்ச்சிகளுமாக சில படங்களுக்கு முன் பார்த்துப் பழகிய விஜய். இதனாலேயே துள்ளல் நடனம், எள்ளல் காதல் என அடக்கி வாசிக்கும் முன்பாதி விஜய், எளிமையாக வசீகரிக்கிறார். ஆக்ஷன் அவதாரங்களுக்கு இடையில், சத்யராஜ் இறக்கும்போதான ரியாக்ஷன்களிலும் முதல்முறை நடுக்கத்துடன் கத்தியைக் கையாளும்போது கண்களில் காட்டும் அதிர்ச்சியிலும் கலக்கல் ப்ரோ! கம்பீர 'அண்ணா’வாக நிமிர்ந்து நிற்பதைத் தவிர, சத்யராஜுக்குப் பெரிய வேலை இல்லை.

ஆஸ்திரேலியாவில் 'வாலிப வயோதிக அன்பர்களை’ அலையவிடும் அழகி அமலாபால், இடைவேளை ட்விஸ்ட்டுக்கு மட்டுமே பயன்பட்டு

இருக்கிறார். பின்பாதியில் தனது கடமையை நிறை «வற்ற அத்தனை இறுக்க நெருக்க சீருடை அணிந்து அமலா செல்வது... சிரிப்பூ!

  மீண்டும் ஒருமுறை, வழக்கம்போல ஹீரோ நண் பனாக சந்தானம். ரைமிங் காமெடிகளைக் குறைத்து, 'டான்ஸ்ல என்ன ப்ரோ கஷ்டம்? இப்படி இப்படித் தலையை ஆட்டுனவங்கதானே தமிழ்நாட்டில பெரிய ஆளா ஆகியிருக்காங்க’ என்று விஜயைக் கலாய்த்துக் கலாய்த்தேகாமெடி வெடிக்கிறார். 'நீங்க வைஜெயந்தி ஐ.பி.எஸ்-ல நடிச்ச டிஸ்கோ சாந்தி மாதிரியே இருக்கீங்க’, 'இவ்ளோ நைஞ்சுபோன சட்டையைப் போட்டுக்கிட்டு கூட்டத்துல மொத ஆளா நிக்காத’, 'இவன் ஏன் பீடா கடைக்காரங்ககிட்டே பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டு இருக்கான்?’ என்று சகட்டுமேனிக்கு சகலரையும் கலாய்த்து சீரியஸ் பின் பாதியைக் கலகலக்கவைக்கிறார்.

'கத்தி கைக்கு வந்துட்டா, ஒண்ணு காக்கும்... இல்லாட்டி அழிக்கும்’, 'இது ஒருவழிப் பாதை. வந்துட்டா திரும்ப முடியாது. போறது உயிராத்தான் இருக்கும்’ - பன்ச்களை ஒருமுறை கேட்கலாம். ஆனா, அரை மணிக்கு ஒருமுறை அதே பன்ச்களை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கலாமா பாஸ்? 'ராமூஊஊஊ’, 'விஷ்வாஆஆஆஆ’ என்று தியானம் செய்து கொண்டே இருப்பது மட்டும்தான் மும்பையைக் கட்டுப்படுத்த நினைக்கும் வில்லனின் கேம் பிளானா? தாதா கதைக்கு இன்னும் சுவாரஸ்ய முடிச்சுகளை இறுக்கி இருக்கலாம் ப்ரோ!

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு, ஆஸ்திரேலிய  அழகுக்கும் மும்பை ஆக்ஷனுக்கும் தனி டோன் சேர்ப்பதில் ஜெயித்திருக்கிறது.  ஜி.வி.பிரகாஷின் இசையில்  'வாங்ண்ணா வணக்கங்ண்ணா’ மாஸ் என்றால், 'யார் இந்தச் சாலையோரம் பூக்கள் வைத்தது’ கிளாஸ். 'கிரைம் பிராஞ்ச் அதிகாரிகள் அண்டர்கவர் ஆபரேஷனுக்காக இந்த அளவுக்கு இறங்கி வேலை பார்ப்பார்களா?’ என்றெல்லாம் கேட்கக் கூடாது. உஷ்ஷ்ஷ்!

கதையின் ஒரு காட்சிகூட தமிழகத்தில் நிகழவில்லை. அதீத வன்முறைக் காட்சிகளும் இல்லை. 'மும்பை மண்ணின் மைந்தர்களை’ சீண்டும் வசனங்களுக்காக மும்பை அரசாங்கம் படத்துக்குத் தடை விதித்தால்கூட ஒரு நியாயம் இருக்கும். ஆனால், தமிழகத்தில் ஏன் இந்த நிலை?  

படத்தில் சத்யராஜ் கேரக்டருக்கு 'அண்ணா’ என்று பெயர் வைத்திருப்பதன் மூலம், 'அண்ணாவின் வாரிசு விஜய்’ என்று சொல்ல நினைத்திருந்தால்.... என்ன காமெடி இது? அரசியலில் மாற்றம், புரட்சி என்பதெல்லாம் பெருந்தொலைவுப் பயணம் ப்ரோ!

- விகடன் விமர்சனக் குழு