தலை நிறைய முடியோடும், கொலை செய்யும் வெறியோடும், கார்த்தியின் அப்பா ஜெயப்பிரகாஷைக் கண்ணாடித் துண்டால் போட்டுத் தள்ளியவர் மகேந்திரன். "வேற ஒரு படத்தில் நடிக்கத்தான் முடி வளர்க்க ஆரம்பிச்சேன். ஆனா, அந்தப் படம் டிராப் ஆயிடுச்சு. ராத்திரி கொஞ்சம் லேட்டா ரூம் திரும்ப முடியாது. எங்கெங்கே போலீஸ் ஜீப் நிற்குதோ, அங்கெல்லாம் என்னை நிறுத்தி விசாரிப்பாங்க. ஆனா, இந்த முடியைப் பார்த்துதான் சுசீந்திரன் சார் இந்த கேரக்டரே கொடுத்தார். என்ன செய்றது சார், முடியுள்ள பிள்ளைதான் பிழைக்கும்!" என்று சிரிக்கும் மகேந்திரனின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்தில் என்.வி.குடிக்காடு என்னும் கிராமம்.
ஐந்து கிரிமினல் மாணவர்களுக்கும் எப்படி ஸ்கெட்ச் போடுவது என்று கொலைத் தொழில்நுட்பம் கற்றுக்கொடுத்த தாய்மாமன் ராமச்சந்திரன். முறையாக, போட்டோகிராபி கோர்ஸ் படித்து முடித்தவர். "அந்தக் கிறுக்குல சென்னை வந்து சினிமா வாய்ப்புகள் தேடி சீரியல் பக்கம் கரை ஒதுங்கினேன். 'கோலங்கள்' சீரியலில் திருச்செல்வத்திடம் பணிபுரிந்தேன். பிறகு, 'வெண்ணிலா கபடிக் குழு'வில் உதவி இயக்குநர். சுசீந்திரன் சார் அந்தப் படத்தில் ஒரு சின்ன ரோல் கொடுத்தார். அப்புறம் 'நான் மகான் அல்ல'வில் தாய் மாமன். நான் இந்தப் படத்தின் அசிஸ்டென்ட் டைரக்டரும்கூட. திடீர்னு நடிக்கணும், அப்புறம் ஷூட்டிங்குக்கான வேலைகளும் பார்க்கணும். ஆனால், எப்பவுமே ஒரு ஜாலியான மனநிலையிலேயே வேலை பார்த்ததால்... நடிப்பு எனக்குக் கஷ்டமா இல்லை" என்று சொல்லும் ராமச்சந்திரனின் குரல் மாவு மிஷினில் மணலைப் போட்டு அரைத்ததைப்போல சற்றே நைஸான கரகரக் குரல். "நானும் கவிஞர் ஃபிரான்சிஸ் கிருபாவும் நண்பர்கள். இரண்டு பேரும் ஒரே சாயலில் இருப்போம். அதனால், என்னைக் கவிஞர்னும் அவரை நடிகர்னும் குழப்பும் காமெடி இப்போ அடிக்கடி நடக்குது!" என்கிறார் ராமச்சந்திரன் ஜாலியாக.
|