"சிங்களப் பேரினவாதம், அழித்தொழிக்கப்பட்ட போராளிகள், இன்னும் புதைத்து முடியாத பிணங்கள், வேண்டப்படாத உயிர்கள், மனித விலங்குப் பண்ணைகள், ஓலமிடவும் சக்தி இழந்து சிதறடிக்கப்பட்ட தமிழினம் எனப் பெரும் கோரம் நிகழ்ந்த மறு கரைக்கும், அவர்களுக்காக அழுத கண்ணீர் கடலாகக்கிடக்கும் இந்தக் கரைக்கும் இடையில், கடல் நீரில் சிங்கள நீர் எது? தமிழ் நீர் எது என்ற அச்சத்தில்தான் தினமும் மீன் பிடிக்கச் செல்கிறார்கள் தமிழக மீனவர்கள். அவர்களில் பலர், விடுதலைப் புலி, கடத்தல்காரன், உளவாளி என்று சந்தேகத்தின் பேரில் துன்புறுத்தப்படுகிறார்கள். தனுஷ்கோடியில் 100 மீனவக் குடும்பங்கள் வாழ்வது இந்திய அரசுக்குத் தெரியுமா என்பதே ஆச்சர்யம். அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது. சி.ஐ.டி, க்யூ பிராஞ்ச், கடலோர ரோந்துப் படை, போலீஸ் எல்லாமே கண்காணிக்கிறது. அங்கே நான் கேட்ட கதைகள் வேதனையாகவும் விசித்திரமாகவும் இருந்தன. அதைத் தமிழ் மக்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என நினைத்தேன்.
"இது ஆர்ட் ஃபிலிம் பாணியிலானதா?"
"எளிய மக்களைப்பற்றிய எளிய படம். உண்மையைத் தவிர, இதில் வேறு எதுவும் இல்லை. எதையும் விட்டுத்தரவில்லை. எனக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பது உண்மையானால், எல்லோரும் பார்க்க முடிகிற படமாக இருக்கும். இல்லாவிட்டால், என் உரிமைக்காகப் போராட வேண்டி வரலாம். தணிக்கைக்குப் பயந்துகொண்டு, அதன் விதிமுறை களைக் கையில் வைத்துக்கொண்டு என்னால் படம் செய்ய இயலாது. எது எப்படியோ, அது அப்படியே படத்தில் இருக்கும்!"
|