காமெடிக் கூட்டணிக்கு டெல்லி கணேஷ், லிவிங்ஸ்டன், சிங்கமுத்து எனப் பலர் வந்துபோனாலும், காமெடி வொர்க்-அவுட் ஆக மறுக்கிறது. 2,000 ரூபாய்க்கு கருணாஸின் நம்பருக்குத் தப்பாக டாப்-அப் செய்துவிட்டு, தினமும் இரவு கூடுவாஞ்சேரியில் இருந்து கிண்டி வந்து போன் பேசிவிட்டுச் செல்லும் மயில்சாமி யின் காமெடி மட்டும் ஆறுதல். வேலைக்குச் செல்லும் அவசரத்தில் மாடியில் இருந்து மண்ணில் குதித்துச் செல்லும் முகம் தெரியாத டி.டி.ஆர் கேரக்டரும், அவரது மனைவி நிரோஷாவும் சுவாரஸ்யம் கூட்டுகிறார்கள்.
கருணாஸ் லட்சியத்தில் ஜெயிக்கப் போராடிக்கொண்டு இருக்கும்போது, லேகியம், தாம்பத்யம் என்று திசை மாறும் திரைக்கதை எரிச்சல் ரகம். கோட்டாவை அவ்வப்போது வில்லனாகக் காட்டி பில்ட்-அப் ஏற்றும்போதே முடிவு தெரிந்துவிடுகிறது. ஆனாலும், விடாமல் சுற்றி வளைத்து கதை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். சிறு வயதில் இருந்து பேப்பர் போட்டு கருணாஸ் சம்பாதிக்கும் பணம் ஏழு லட்சம். அதே வேலையைச் செய்து அடுத்த சில மாதங்களில் 30 லட்சம் சம்பாதித்து விடுகிறார். கூட்டிக் கழிச்சுப் பார்த்தாலும் கணக்கு சரியா வரலையே?
கருணாஸின் இசையில் 'ஒத்தக் கல்லு...'
ரீ-மேக் பாட்டு செம கமர்ஷியல் குத்து. கருணாஸ் போடும் ஆட்டம் ஆச்சர்யம் கொடுக்கிறது.
ஆனாலும், தண்டபாணி... அம்பானி ஆகவில்லை!
|