"கேசட் வெளியீட்டு விழாவில் உங்க அப்பாவைப்பற்றிப் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டீங்களே?"
"உண்மைதான். புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை என்ற கிராமம்தான் என் சொந்த ஊர். விவசாயம் பொய்த்துப்போனதால், பங்காளிகிட்ட கணக்குப்பிள்ளையா வேலைக்குச் சேர்ந்தார் அப்பா. கேலி, கிண்டல் தாங்க முடியாம நிறைய தடவை வாய்விட்டு அழுதிருக்கார். கருகருன்னு தேகம். ஆஜானுபாகுவான தோற்றம். சின்ன வயசுல அவர்தான் என்னோட ஹீரோ. நான் என்னவாகப் போறேன்னு அவருக்குத் தெரியலை. எனக்குமே தெரியலை. 'நல்லாப் படிடா. படிச்சாதான் மரியாதை'ன்னு சொல்வார். வாத்தியார் பசங்க எத்தனையாவது ரேங்க்னு விசாரிப்பார். 'அவனுங்க ரெண்டாவது, மூணாவது ரேங்க்தான். நான் 25-வது ரேங்க்'னு சொல்லிட்டேன். ரொம்பப் பெருமையா முதுகில் தட்டிக் கொடுத்தார். அவ்வளவு அம்மாஞ்சி. ஒருநாள் கிளாஸ் டீச்சரைப் பார்த்து, 'என் பையன் ரொம்ப நல்லாப் படிக்குறான்போல'ன்னு விசாரிச்சிருக்கார். டீச்சர் ரேங்க் சிஸ்டத்தை அப்பாவுக்கு விளக்கிச் சொல்லிட்டாங்க. அடி பிரிச்சு மேய்ஞ்ச பிறகுதான் அவர் கோபம் தணிஞ்சது.
ப்ளஸ் டூ முடிச்சதும், 'என்னடா பண்ணப்போற?'ன்னு கேட்டார். 'சினிமாவில் சேரப்போறேன்'னு சொன்னேன். 'தூத்தேறி... அதுக்கெல்லாம் அழகா இருக்கணும்டா'ன்னாரு. 'நடிப்பது' மட்டும்தான் சினிமாங்கிறது அவரோட எண்ணம். 'படிச்சதெல்லாம் போதும்... போய் சைக்கிள் கடையில வேலை பார்'னு சொல்லிட் டார். அப்போதான் அப்பா எனக்கு முதல் முறையா வில்லனா தெரிஞ்சார். சென்னை வந்த பின்னாடிதான் சினிமா எவ்வளவு கஷ்டம்னு தெரிஞ்சுது. நாட்களை ஓட்ட ஏவி.எம்மில் செக்யூரிட்டியா வேலைக்குச் சேர்ந்தேன். என்னைப் பார்த்த என் பங்காளி ஒருத்தன், ஊருக்கு போன் பண்ணி, 'உன் பையன் வாட்ச்மேனா இருக்கான்யா'னு உளறிட்டான். அவமானம், வேதனை கலந்த வார்த்தைகளோடு அப்பா ஒரு கடிதம் எழுதினார். ஏதாவது பண்ணியே ஆகணும்னு பதறி சேரன் சாரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். 'வெற்றிக் கொடி கட்டு', 'பாண்டவர் பூமி', 'சொல்ல மறந்த கதை'ன்னு மூணு படத்திலும் ஒவ்வொரு நிமிஷம் வந்துட்டுப் போனேன். படத்தில் என்னைப் பார்த்து கொதிச்சுப்போயிட்டாரு. "இந்த எழவுக்கா ஒன்பது வருஷம் சென்னையில் நாய் மாதிரி அலைஞ்சே?"ன்னு அப்பா கோபமும் அழுகையுமா கேட்டப்ப, என்னால பதில் சொல்ல முடியலை.
'சினிமாங்கிறது நடிகர்கள் மட்டும் கிடையாது. அவங்களையே ஆட்டிவைக்கிற ஒருத்தர் இருப்பார். அவர்தான் டைரக்டர். நான் அந்த டைரக்டர் ஆகப்போறேன்'னு சொன்னேன். அப்பாவுக்கு அது கடைசி வரைக்கும் புரியலை. திட்டு விழுந்துகிட்டே இருந்தது. அதனால தீபாவளி, பொங்கலுக்கு ஊருக்குப் போறதையே நிறுத்திட்டேன். அம்மா தவறின பிறகு, அப்பா தளர ஆரம்பிச்சிட்டார். 'பசங்க' படத்துக்கு அட்வான்ஸ் வாங்கின கையோடு ஊருக்கு ஓடினேன். அவருக்கு என்னைச் சுத்தமா அடையாளம் தெரியலை. 'யாருப்பா நீ'ன்னு கேட்டார். நிலைகுலைஞ்சு போயிட்டேன். 'பசங்க' பாதிஷூட்டிங் போயிட்டு இருக்கும்போதே, இறந்துட்டார்.
'சின்னையா சாவு பெருஞ்சாவுடா' என்று ஊரே பேசுற அளவுக்கு சசிக்குமார் உள்பட எங்களோட 'பசங்க' பட டீமே சேர்ந்து அவரை மாலை மரியாதையோடு அடக்கம் செய்தோம். என் அப்பாவுக்கு நான் தந்த ஒரே மரியாதை அது மட்டும்தான்!" - பேசி முடிக்கும்போது பாண்டிராஜின் கண்களில் தேங்கி நிற்கிறது நீர்!
|