என் விகடன் - புதுச்சேரி
ஸ்பெஷல் -1
Published:Updated:

குறும்பு மச்சினியும்... மண்பானை இட்லியும்!

நா.கதிர்வேலன்

 ##~##
''பே
ர்தான் 'களவாணி’. ஆனா, அந்தப் படம் கொடுத்தது எனக்குப் பெரிய மரியாதை. எப்பவும் இரண்டாவது படம்தான் 'ஆசிட் டெஸ்ட்’னு சொல்வாங்க. அந்தத் தகிப்பை இப்போ உணர்றேன். கிடைச்ச அங்கீகாரத்தைத் தக்கவெச்சுக்கணும்னு ஆசை. பேராசைதான். சளைக்காம, மலைக்காம உழைச்சுக்கிட்டு இருக்கோம்!''- நிதானமாகப் பேசத் துவங்குகிறார் சற்குணம். ஆரவாரமே இல்லாமல் மனதைக் கொள்ளைகொண்ட 'களவாணி’ இயக்குநர்.

 ''முதல் படத்தின் எந்தச் சாயலும் இல்லாம சினிமா பண்ண  ஆசை. பலவிதமா யோசிச்ச துல பீரியட் ஃபிலிம்தான் சரின்னு தோணுச்சு. 1966-ல் நடக்கிற மாதிரி ஒரு கதை பிடிச்சோம். அப்போதைய சாதாரண வாழ்க்கையை இப்போ கேள்விப்படுறப்போ, எவ்வளவு இழந்திருக்கோம்னு சுரீர்னு உறைக்குது. எவ்வளவு திருவிழாக்கள், சடங்குகள், உறவுகள்... எல்லாத்தையும் உதறிட்டு வந்திருக்கோம். எல்லாத்தையும் ஒரு கதையில் மீள் உருவம் கொடுத்தா, நல்லா இருக்கும்ணு தோணுச்சு. 'வாகை சூட வா’ன்னு பேர்வெச்சு வாழத் துவங்கிட்டோம்!''

குறும்பு மச்சினியும்... மண்பானை இட்லியும்!

''இரண்டாவது படமே பீரியட் ஃபிலிம்... சிரமம்ஆச்சே?''

குறும்பு மச்சினியும்... மண்பானை இட்லியும்!

''ஈஸியான காதல் கதைதான். அதன் பின்னணி மட்டும் வித்தியாசமா இருக்கும். நம்மோட நிறைய பழக்கவழக்கங்கள் இன்னிக்கு மறந்துபோயிருச்சு. தொப்புள் கொடி மாலை போட்டுப் பிறந்த குழந்தையின் முகத்தை எண்ணெயில்தான் பார்க்கணும் மாமன். கூண்டுக்குள் கோழி வைத்து நரி பிடிக்கிற வைத்தியர். மழை நேரத்தில் குளத்தில் உள்ள பனை மரத்தில் ஏறும் சன்னை மீனை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீங்க. நான் காட்டுறேன்.

அநியாயத்துக்கு வெட்கப்பட்டு சாப்பிட்டுக் கிட்டு இருக்கும் மாப்பிள்ளையின் இலையை நூல் கட்டி இழுத்து விளையாடும் அழகான மச்சினிச்சிகள், கழுதையில் உப்பு விற்கிற வியாபாரிகள், எப்போதாவது சுடப்படும் மண்பானை இட்லி, பின் கொசுவம் வைத்துக் கட்டிய கேப்பைக் களி பெண்கள், எருமை மாடுகள் வெச்சுக் கட்டிய கமலை... ஒரு டைம் மெஷின் பயணமாக இருக்கும் படம். இழந்து போன தமிழ் அடையாளங்களைப் பாடம் மாதிரி சொல்லாமல், நகைச்சுவையா சொல்லப் போறோம்!''

''ஆக, பீரியட் ஃபிலிம் பின்னணியில் 'களவாணி’ காதல் செய்யப்போறாரா?''

'களவாணி’யில் தஞ்சாவூர் இளைஞனா வந்த விமலை, 66-களில் உலவிய அச்சு அசல் இளை ஞனா இதில் மாத்திட்டேன். அரிசியை மையாக்கி கலர் கலந்து பொட்டு தயாரித்து விற்பது, டீக் கடை வெச்சு கருப்பட்டிப் பாலில் டீ போட்டு, 'ரெண்டு காசு டீ... மூணு காசு டீ...’னு சொல்லி விக்கும் கதாநாயகிக்கும், பி.யூ.சி. முடிச்சுட்டு, பெரிசாப் படிச்சு முடிச்ச மாதிரி வாத்தியார் வேலைக்குத்தான் போவேன்னு சொல்லித் திரியும் கதாநாயகனுக்கும் இருக்கிற காதல்தான் கதையே. யதார்த்தம் மீறாம கதை

குறும்பு மச்சினியும்... மண்பானை இட்லியும்!

சொல்லணும்னு மட்டும் மனசுல வெச்சிருக்கேன். இப்ப இருக்கிற நாகரிகங்களின் எந்த சாயலும் வந்துவிடக் கூடாதுன்னு எங்கேயாவது ஒரு கிராமத்தைப் பிடிச்சு படப்பிடிப்பை ஆரம்பிக்கப் பார்த்தோம்... முடியலை. அதனால், அருப்புக்கோட்டைக்குப் பக்கத்துல ரெண்டு கோடிக்கு மேல செலவழிச்சு 'கண்டெடுத்தான் காடு’ன்னு ஒரு கிராமத்தையே உருவாக்கிட்டோம்.

ஹீரோயினாக ஸ்ருதின்னு ஒரு மலையாளப் பொண்ணு. முதல் வருஷக் கல்லூரி மாணவி. ஓங்குதாங்கான உடல்வாகு, அழுத்தமான முகம்... பார்த்ததுமே மனசுக்குள்ள பட்சி சொல்லிடுச்சு அவங்கதான்னு! அதுவும் போக அழகா, ஸ்பஷ்டமா தமிழ் பேசுறாங்க. கூட்டிட்டு வந்துட்டோம். என் நண்பன் ஜிப்ரான், இதில் இசையமைப்பாளராக அறிமுகமாகுறார். பாடல்களின் ஆன்மாவிலும் வார்த்தைகளிலும் அந்தக் காலகட்டம் தொனிக்கணும்னு புரிந்து, பாட்டு கொடுத்திருக்கிறார் வைர முத்து. கவிதையான தமிழ் அடையாளங்கள் சுமக்கும் ரசனையான சினிமாவாக இருக்கும்!''