கோல்டன் ஸ்டாரின் கோலிவுட் ஆசைநா.கதிர்வேலன், படம் : என்.விவேக்
##~## |

''எப்படி இப்படி சினிமா படிச்சீங்க... ஆச்சர்யமா இருக்கே?''

''அதுக்குத்தான் இன்னும் எனக்குப் பதில் தெரியலை. தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டா எனக்கு அடையாளம் இருந்தது. மெகா சீரியல் நடிச்சேன். 'காமெடி டைம்’ பண்ணப்போ ரிமோட் மறந்து என்னை ரசிச்சாங்க. 'செல்லாட்டா’ன்னு சினிமாவில் கௌரவமான அறிமுகம். படம் ஹிட். அப்புறம் 'முங்காரு மழை’ ரிலீஸ் ஆச்சு. ஒரு கோடியே 40 லட்சத்தில் எடுத்த படம். ஒரு வருஷம் ஓடி, 64 கோடி வரை இன்னமும் ரிக்கார்டு. சூப்பர் டூப்பர் மாஸ்டர் ஹிட். அந்தப் படம் தியேட்டர்ல ஓடிட்டு இருக்கும்போதே, நான் நடிச்ச தமிழ் 'காதல்’ கன்னட ரீ-மேக் ரிலீஸ் ஆச்சு. அதுவும் சூப்பர் ஹிட். அதுல இருந்து இதுவரை 15 படங்கள். எல்லாமே சக்சஸ்!
'யாருக்கும் எங்கேயும் இப்படி நடக்கலை’ன்னு சொல்றாங்க. மேஜிக்னு வியக்குறாங்க. எனக்கு நாளுக்கு நாள் பயமா இருக்கு. நான் ஆண்டவனைத்தான் வணங்குறேன். எல்லோருக்கும் மரியாதை கொடுக்குறேன். காபி கொடுக்கிற பையன் வந்தால்கூட மரியாதையா எழுந்து நின்னுதான் வாங்குறேன். ஏன்னா, கடவுள் எந்த வடிவத்திலும் வந்து 'இவன் ஆடுறானா... அடங்கி இருக்கானா’ன்னு செக் பண்ணுவார்னு தோணுது!
எப்பவும் யாருக்கும் கெடுதல் நினைக்கக்கூட மாட்டேன். எல்லார் படமும் ஓடணும். என் படமும் ஓடணும்னு நினைப்பேன். என் நண்பர்களை ஊர்ல இருந்து அழைச்சுட்டு வந்து புரொடியூசர் ஆக்குறேன். பக்கத்தில் இருக்கிறவங்களை அம்போனு விட்டுட்டு, நான் மட்டும் உயரத்துக்குப் போகக் கூச்சமா இருக்கு!''
''உங்க காதல் கல்யாணம் கர்நாடகாவில் பெரிய பரபரப்பு உண்டாக்குச்சே?''
''ஆமாம்... சில ரசிகைகள் தற்கொலை முயற்சி வரை போனாங்க. மனசுல இன்னும் ஆறாத காயம் அது. அவங்க அன்புக்கு நான் என்ன கைம்மாறுசெய்ய முடியும்? மறுபடி அவங்க மனசுல சாந்தம் ஏற்படும்படி கடவுள்கிட்ட வேண்டுவதைத் தவிர நான் என்ன பண்ண முடியும்? ஷில்பா என் மனைவியாக அமைந்தது என் வாழ்க்கைக்கான வரம். எங்க காதலைப் பெற்றோர்கள் சம்மதித்த மண வாழ்க்கையாக அமைத்துக் கொண்டோம். ஒரே மகள் சார்த்திரியா. வாழ்க்கை சந்தோஷமா இருக்கு!''
''என்ன திடீர்னு சென்னை பக்கம்?''

''சென்னை எப்பவும் எனக்கு பக்கம்தான். பீச் கண்ணகி சிலை யில் இருந்து விகடன் வரை பரிச்சயம். வர்றப்பலாம் பரபரப்பான தமிழ்ப் படங்கள் பார்ப்பேன். இப்போ 'மைனா’ பார்த்தேன். மனசைக் கொத்திடுச்சு. பிரபு சாலமன் சாரைக் கூப்பிட்டு 'இந்தப் படத்தை எனக்கு எடுத்துக் கொடுங்க’ன்னு கேட்டேன். முதல் முறையா 'கூல்’னு ஒரு படம் டைரக்ட் பண்றேன். இந்தத் தடவையும் தெய்வம் கரை சேர்க்கும் என்பது என் நம்பிக்கை. தமிழ்ல பாலா, கௌதம் மேனன், வசந்த பாலன், அமீர், சசிகுமார்னு அவ்வளவு எனர்ஜிட்டிக்கான இயக்குநர்கள். எனக்கே ஒரு நேரடி தமிழ் படத்தில் தலைகாட்டணும்னு ஆசை. யார்கிட்டயாவது ரெகமண்ட் பண்ணுங் களேன்... ப்ளீஸ்!''