எனக்கு... சட்டப்படி குற்றம்!'நா.கதிர்வேலன்
##~## |
''நானாக தோட்டத்துக்குப் போவது இல்லை. தம்பி விஜய் போக முடியாத சமயங்களில்... நான் போறேன். இப்ப அரசியல் வேண்டாம். அதான் வெளியே அரசியல் சூடா இருக்கே... கொஞ்சம் சினிமா பேசலாம்!''- என்று சிரிக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.
'' 'சட்டம் ஒரு இருட்டறை’, 'நீதிக்குத் தண்டனை’ன்னு கடும் விமர்சனங்களோடு படங்கள் எடுத்தேன். அதுதான் விஜயகாந்த்தை இன்னிக்கு அரசியல் வரை கொண்டுவந்து நிறுத்தி இருக்கு. தவறுகளை எடுத்துச் சொன்னால், சம்பந்தப்பட்டவங்களைத் தவிர, எல்லோருக்கும் பிடிக்கும். அப்படி இன்னிக்கு சமுதாயம், அரசியல், மதம்னு சகல தளங்களிலும் நிறைஞ்சு கிடக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டும் படமா 'சட்டப்படி குற்றம்’ இருக்கும். லஞ்சம் வாங்குவதைத் தடுக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையே லஞ்சம் வாங்குது. அறியாமையைப் போக்க வந்த திராவிடக் கழகங்களே வியாபார அரசியலில் ஈடுபடுவதும் சட்டப்படி குற்றம்!''

''படம் ரொம்பவே காரசாரமா வந்திருப்பதாகப் பேச்சு இருக்கே... பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்பு எழுமே?''

''அரசியல் ஆரம்பிச்சு ஆன்மிகம் வரை, யாரையும் எதையும் இதில் நான் விட்டுவைக்கலை. எல்லோரையும் ஆதாரத்தோடுதான் சாடியிருக்கேன். 'எல்லாமே வியாபாரம்’னு ஆகிட்ட சூழ்நிலையை, அப்படியே ஏத்துக்க முடியலை. ஆனா, என்னால் என்ன செய்ய முடியும்? எனக்குத் தெரிஞ்ச சினிமாவுல சுட்டிக் காட்டலாம். சீறி, ஜனங்களுக்குப் புரியவைக்கலாம். ஆனால், நீதிபோதனை மட்டும் பண்ணிடக் கூடாது. எல்லாத்தையும் நகைச்சுவையாகச் சொன்னால், சிரிச்சுக்கிட்டே ஏத்துக்குவாங்க. ஓட்டுப் போடாம உட்கார்ந்திருந்தா, தார்மீக நெறிப்படி குற்றம். அதுவே பணம் வாங்கிட்டு ஓட்டுப் போட்டால்... அது சட்டப்படி குற்றம்தானே!
எல்லா வேலைகளுக்கும் படிப்பு வேண்டியிருக்கு. ஆனா, அரசியலில் பாருங்க... எந்தத் தகுதியும் இல்லாம வந்து மக்கள் பணத்தைக் கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கிறாங்க. தயவுசெஞ்சு இந்தப் படத்தைப் பார்த்துட்டு, இந்தத் தேர்தல்ல உங்க ஓட்டு யாருக்குன்னு தீர்மானிங்க. இதை நான் ஒரு வேண்டுகோளாகவே வைக்கிறேன்!''
''ரொம்பப் பிரசார தொனி இருக்குமோ?''
''நான் எடுக்கிறது சினிமாதான். ஆனாலும், அதில் நடிக்கிறவர்கள் சமுதாய உணர்வோடு இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். விவேகானந்தர் சொன்னார்ல... 'துடிப்பும் ஆர்வமும் உள்ள ஆயிரம் இளைஞர்களை என்கிட்ட கொடுங்க. சமுதாயத்தை மாத்திக் காட்டுகிறேன்’னு... அப்படி இளைஞர்களை உருவேத்துற கேரக்டர் சத்யராஜுக்கு. கேரக்டர் பேரே சுபாஷ் சந்திரபோஸ். சே குவேரா கெட்டப்ல சத்யராஜைப் பார்த்தாலே

பொறி பறந்துச்சு. மொத்த ஷூட்டிங்கும் முடிஞ்சதும் 'எம்.ஜி.ஆருக்கு ஒரு 'நாடோடி மன்னன்’... சிவாஜிக்கு ஒரு 'பாசமலர்’, ரஜினிக்கு ஒரு 'பாட்ஷா’, அப்படி எனக்கு 'சட்டப்படி குற்றம்’னு சத்யராஜ் சொன்னார். சத்யமங்கலம் காட்டில் வீரப்பன் உலவிய இடங்களில் பெரிய பெரிய செட் போட்டு, இளைஞர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் நடப்பதைப் பதிவு செய்தோம். முழு அர்ப்பணிப்பு உணர்வோடு நடிச்சார் சத்யராஜ்.
நீதிமன்றத்தில் வேகமும் விவேகமுமா வாதாடுகிற கோபம்கொண்ட இளைஞன் கேரக்டருக்கு யார் சாய்ஸ்னு யோசிச்சேன். சீமானைத் தவிர, வேற யாரும் என் ஞாபகத்துல வரலை. கிட்டத்தட்ட'பரா சக்தி’ சிவாஜியின் மூர்க்கம் வேணும். ஆனா, சினிமா மாதிரியே

இல்லாம, அசலா... அனலான... சீற்றமான சினமா கவும் இருக்கணும். இத்தனை படம் எடுத்திருக்கேன், எத்தனையோ கோர்ட் ஸீன் பார்த்திருக்கேன். சீமான் இதில் அந்த எல்லா அனுபவங்களையும் மங்கச் செய்துட்டார்!''
''அப்ப இது முழுக்க முழுக்க அரசியல் படம்?''
''சில கேள்விகளுக்கு, 'ஆமாம், இல்லை’ன்னு பதில் சொல்லிட முடியாது. இதில் ஆன்மிகத்தின் அத்துமீறல்கூட இருக்கு. முழுமையான ஒரு தீர்வு சொல்லி இருக்கிறதுதான் படத்தில் விசேஷம்!''