ஸ்பெஷல் -1
சென்டிமென்ட் விகடன்
விகடன் பொக்கிஷம்
சினிமா
Published:Updated:

சினிமா விமர்சனம் - ஆதவன்

சினிமா விமர்சனம் - ஆதவன்

சினிமா விமர்சனம் - ஆதவன்
சினிமா விமர்சனம் - ஆதவன்
சினிமா விமர்சனம்
சினிமா விமர்சனம் - ஆதவன்
ஆதவன்
சினிமா விமர்சனம் - ஆதவன்

குறும்புச் சிறுவனாகக் காணாமல்போன மாதவன், கூலிப் படைக் கொலைகாரன் 'ஆதவன்' ஆகத் திரும்பி வரும் கதை!

ஒரு கொடூரக் கொலைக் கும்பலின் நடவடிக்கைகள் குறித்து விசாரித்துக்கொண்டு இருக்கிறார் நீதிபதி முரளி. தன்னைப்பற்றிய உண்மையை முரளி கண்டுபிடிக்கும் முன், அவரைக் கொல்லத் திட்டமிடுகிறான் வில்லன் ராகுல்தேவ். அந்த அசைன்மென்ட் ஷாயாஜி ஷின்டே குரூப்பிடம் வருகிறது. குரூப்பின் மாஸ்டர் மைண்ட் சூர்யா. ஆனால் சூர்யா, முரளியின் மகன் என்பது இந்த இடத்தில் 'நோட் தி பாயின்ட் யுவர் ஹானர்!'

சினிமா விமர்சனம் - ஆதவன்

அப்பா - மகன் ஆடுபுலி ஆட்டம் மீதிக் கதை!

பழகிய கதை, அதுவும் பழைய கதை. அதற்குத் தனது பிரத்யேக மசாலா தூவி சென்டிமென்ட் கோட்டிங் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். முதல் பாதி காமெடி, இரண்டாம் பாதி அடிதடி என்று தடம் மாறுகிற கதையில் மனதில் நிற்பது முதல் பாதி மட்டுமே.

ப்ரீபெய்ட் கார்டு போல ப்ரீபெய்டு கில்லர் சூர்யா. போலீஸிடம் இருந்து தப்பித்து மாடிக்கு மாடி தாவி, விழுந்து எழுந்து புரண்டு ஓடும் ஆரம்பக் காட்சிகளில் வழக்கம் போல வசீகரிக்கிறார். ஆனால், அதற்குப் பிறகு வடிவேலு ஸ்கோர் செய்வதற்கேற்ப கம்பெனி கொடுக்கும் வேலை மட்டுமே.

முதல் பாதியின் மொத்தக் குத்தகைதாரர் வடிவேலுதான். மனிதர் வளைந்து நெளிந்து திரையில் தலை காட்டியதுமே ஆரவாரிக்கிறது அரங்கம். அவரும் அந்த டெம்போ குறையாமல் கப்பலைப் பாதி தூரத்துக்கு வேகமாக நகர்த்தி வந்துவிடுகிறார். சூர்யா பின்னாலேயே பதறித் திரிவதும், மரண பீதியில் உளறுவதுமாக காமெடிக் கரகம். சரோஜா தேவியிடம் 'சொர்க்கத்துலகூட மேக்கப் போட்டுட்டுத்தான் திரிவீங்களோ?' என்று அலம்புவதும், 'ஹைய்யோ... குரங்கே இவனைப் பார்த்தா சூஸைட் பண்ணிக்குமே!' என்று சலம்புவதுமாக அதிரிபுதிரி அட்டகாசம். படத்தின் ஹீரோ யார் என்பதில் சந்தேகம் எழும்போது, நல்லவேளை இடைவேளை வந்து ஆதவனுக்குக் கை கொடுக்கிறது.

முரளியின் மெகா அந்தாக்ஷரி குடும்பக் கும்பலில் ஒருவராக... நயன்தாரா! பாடல்களைத் தவிர, கிடைக்கும் சின்ன இடைவெளியில் சூர்யாவை அழகாகச் சந்தேகப்படுகிறார். (முகத்தில் அத்தனை முதிர்ச்சி ஏனோ?) நீண்ட இடைவெளிக்குப் பின் சரோஜாதேவி கொஞ்சமாக வந்து கொஞ்சிப் பேசிச் செல்கிறார். சூர்யா, வடிவேலு தாண்டி கோபம், பிள்ளைப் பாசம், நேர்மை என பெர்ஃபார்ம் செய்வதற்கு முரளியிடம் மட்டுமே ஸ்கோப். அசத்தலாக நடித்திருக்கிறார் சமீபத்தில் மறைந்த முரளி. இது போக திருப்பதி க்யூ கணக்காக நீளும் வரிசையில் யாருக்கு யார் என்ன உறவு என்று கண்டுபிடிக்க முற்படுவதற்குள் படம் முடிந்துவிடுகிறது.

பழைய கதைக்கு அரதப் பழசான திரைக்கதைதான் மைனஸ். 'முரளி, சூர்யாவோட அப்பாவா இருக்கும்... அதான் கொல்ல மாட்டேங்குறாங்க!' என்று முன் பின் வரிசை ரசிகர்கள் சுலபமாக யூகிக்கும் திருப்பங்கள். கடைசி நொடி வரை சூர்யாவை வில்லனாகக் காண்பித்து கடைசியில் 'அவர் அப்படிலாம் இல்லைப்பா' என்று சொல்வதெல்லாம்... அடேங்கப்பா!

சிறுவன் சூர்யாவின் ஃப்ளாஷ்பேக்... கற்பனை வறட்சி. பத்து வயதுப் பையனின் முகத்தில் சூர்யா முகத்தைப் பொருத்த முயற்சித்திருக்கிறார்கள். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்! சென்சிட்டிவ் விசாரணைக்கு வந்த இடத்தில் தனது மகா மெகா குடும்பத்துடன் பிக்னிக் அடித்துக்கொண்டு இருப்பாரா ஒரு சின்சியர் ஜட்ஜ்!

முரளியின் சீஃப் செக்யூரிட்டி அதிகாரியையே வளைக்க முடிந்த வில்லனுக்கு, முரளியைக் கொல்வது அம்புட்டுக் கஷ்டமா என்ன?

சினிமா விமர்சனம் - ஆதவன்

'ஹசிலி ஃபிசிலி', 'வாராயோ வாராயோ' என ஈர்க்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசை, பின்னணியில் தோள் கொடுக்கத் தவறுகிறது. ரா.கணேஷின் கேமரா காதல் குளுமையும், மோதல் அனலும் கலந்த காக்டெய்ல். 'கனல்' கண்ணனின் ஆக்ஷன் சேஸிங் வேகத்தில் விரட்டி மிரட்டுகிறது.

சொம்பு, ஆலமரம், பவானி ஜமக்காளத்துக்குப் பதிலாக லேப்டாப், ஹெலிகாப்டர், கொல்கத்தா என்று இடம் மாற்றிவைத்த அக்மார்க் கே.எஸ்.ரவிக்குமார் ஃபேமிலி டிராமா. ஐயோடா சாமி!

 
சினிமா விமர்சனம் - ஆதவன்
-விகடன் விமர்சனக் குழு
சினிமா விமர்சனம் - ஆதவன்