ஹாலிவுட் ஆக்ஷன் படங்களின் இந்தக் கதைத் தளம், தமிழுக்கு ரொம்பவே புதுசு. இந்தியா செலுத்தவிருக்கும் செயற்கைக்கோளை நவீன ஆயுதங்கள் உதவியோடு தகர்க்க காட்டுக்குள் ஊடுருவுகிறார்கள் 16 தீவிரவாதிகள். தனது சொல் பேச்சு கேட்கக் கூடாது என்ற வறட்டுப் பிடிவாதத்தோடு இருக்கும் ஐந்து பெண்களை அதே காட்டுக்குள் என்.சி.சி. பயிற்சிக்கு அழைத்து வருகிறார் காட்டிலாகா அதிகாரி 'ஜெயம்' ரவி. இந்த 5 + 1 கூட்டணி அந்த 16 உறுப்பினர் அணியை தடுத்துத் தடை ஏற்படுத்துகிறதா என்பது 'வந்தே மாதரம்' கிளைமாக்ஸ்.
அடித்து வார்க்கப்பட்ட இரும்பு வார்ப்பாக துருவன் கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார் 'ஜெயம்' ரவி. ஒவ்வொரு நொடியும் உஷாராக இருப்பது, கோவணம் கட்டி மாட் டுக்குப் பிரசவம் பார்ப்பது, அவமானங்களுக்கு மத்தியில் முளைத்துக் கிளம்புவது எனப் பழங்குடியினரின் இயல்புகளைப் பிரமாதமாகப் பிரதிபலிக்கிறார் ரவி. வெல்டன் துருவன்!
அந்த வெளிநாட்டு வில்லன் ரோலன்ட் கிக்கிங்கர் (டெர்மினேட்டர் அர்னால்டின் டூப்!) அசைந்து நடக்கும் ஆலமரமாக மிரட்டுகிறார். பாதிப் படம் வரை குறும்புச் சேட்டைகள் செய்து ரவியை இம்சிக்கிறார்கள் அந்த ஐந்து பெண்களும். ஆனால், நிலைமையின் விபரீதம் புரிந்து போராடத் துணியும் சமயம், அவர்களுக்குள் அபார மாற்றம். காமெடியைவிடவும், 'இனிமேலாவது மத்தவங்களுக்காக விளைவிக்காம, உங்களுக்காக விதைங்கய்யா!' என்னும் இடத்தில் பாசமாக ஈர்க்கிறார் வடிவேலு.
நாலு பாட்டு, மூணு ஃபைட், 15 பஞ்ச் டயலாக் போன்ற கோலிவுட்டின் ஃபார்முலா பொத்தல்களில் சிக்கிக்கொள்ளாமல் பச்சைப் பசேலெனத் தளம் பிடித்திருக்கிறார் இயக்குநர். ஆனால், இங்கும் லாஜிக் பொத்தல்கள் உண்டு. கையில் ஒரு மேப், சில ஆயுதங்களோடு ஒரு வெளிநாட்டுக் கும்பல் ஜஸ்ட் லைக் தட் வந்து அந்த ராக்கெட்டைக் குடை சாய்ப்பது, ஸ்டிரிங்கர் ஏவுகணையை என்.சி.சி. பெண்கள் ரொட்டி கணக்காக எடுத்துச் சுடுவது, எதிரிகளின் சாம் ஏவுகணையை கம்ப்யூட்டரில் நாலு தட்டுத் தட்டித் திசை திருப்புவதெல்லாம்... ஸாரி சார்!
|