புளியந்தோப்பு பழனியும், முஸ்ரத் பதே அலிகானும் சேர்ந்து பாடுகிற கச்சேரியைக் கேட்டது மாதிரியான அனுபவம் மிஷ்கினுடன் பேசியது. சினிமா, இலக்கியம், பெர்சனல் என நீளும் பேச்சுக்கு ஒரே தடை நள்ளிரவு தான். உணர்வுகளையும் உத்திகளையும் மிகச் சரியாக இணைக்கும் இயக்குநர். கமலின் அடுத்த சாய்ஸ். இதுவரை சொல்லாததைச் சொல்கிறார்...
மறக்க முடியாத நாள்:
''முதல் நாள், முதல் ஷாட், 'சித்திரம் பேசுதடி'க்காக வெச்சது தப்பாக அமைஞ்சது. நடிப்பு சரி இல்லை. நான் சொல்லிவெச்ச கோணம் தப்பாக இருந்தது. மானிட்டரில் பார்த்தால், எனக்கே அவமானமா இருந்தது. எனக்கு சினிமா தெரியாதா, என்ன தவறு செய்தேன், எனக்கே புரியாத நிலை. யோசிச்சுப் பார்த்தா, என் கதைக்கு வேறு யாரோ மாதிரி ஷாட் வெச்சா எப்படி இருக்கும்னு நினைச்சுவெச்சிருக்கேன்னு எனக்கே புரிஞ்சது. அப்புறம்தான் என்னுடைய சினிமாவை என்னுடைய 'ஷாட்'டில் எடுத்தேன். அந்த முதல் நாள்தான் நானே என்னை அவமானமா உணர்ந்தது. ஆனால், நான் தெளிஞ்சு வெற்றியடைந்த நாளும் அதுதான்!''
சென்டிமென்ட்:
''நாம் சிந்தித்து, உணர்வுகளை உள்வாங்கி ஒரு கதை உருவாக்கி நண்பர்களிடம் சொல்வோம். அதை ஒரே வார்த்தையில் 'வேலைக்கு ஆகாது' எனச் சொல்லிவிடுவார்கள். ரொம்ப மனசு உடைபடும். இப்படி ஒரேயடியாகக் கிணற்றுக்குள் குதிக்கச் சொல்வது அறியாமை. இப்படித்தான் 'நீ உருப்பட மாட்டே'ன்னு வீட்டில் பெற்றோர்கள் சாபம் இடுவார்கள். இது மாதிரி வார்த்தைகளை சென்டிமென்ட்டாக வெறுக்கிறேன். நண்பர்களால் இது 'வேலைக்கு ஆகாது' என ஒதுக்கப்பட்ட கதைகள்தான் 'சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே', 'நந்தலாலா' எல்லாம். நல்ல வார்த்தைகள் பேசிப் பழகுவோம். ஒரு குழந்தை அழகா, சுதந்திரமாப் பட்டம் விட்டுக்கொண்டு இருக்கும்போது, அதனிடம் போய் 'படிக்கலையா?'ன்னு கேட்கிறது என்னைப் பொறுத்தவரை வன்முறை!''
மிகச் சிறந்த நண்பன்:
''ரவிக்குமார். போலீஸ்காரன். மனசைக் கரைச்சு அன்பாக இருக்க முடிகிற ஆள். என் கடைசி வரை கூட வருகிற நண்பன் அவனாகத்தான் இருப்பான். என்னிக்காவது வருவான். 10 நிமிஷம் என்கூட இருந்துட்டு அப்படியே போயிடுவான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம ஹானஸ்ட் மனுஷன். ஒருநாள் என் கையில் டீ குடிக்கக்கூட காசு இல்லை. வாடகை கேட்டு உரிமையாளர் நாலஞ்சு தடவை எரிக்கிற பார்வை பார்த்துட்டுப் போயாச்சு. ஒரு ரூபாயைக் கண்டுபிடிச்சு போன் பண்ணினா, அடுத்த 10 நிமிஷத்தில் வந்து நிற்கிறான். அவனோட சம்பளத்தைப் பிரிக்காத கவர். ஏன் முன்னாடியே சொல்லலைன்னு ஹோட்டலுக்குக் கூப்பிட்டுப் போய் சாப்பிடவைக்கிறான். அன்னிக்கும், என்றைக்கும் என்னைத் தொடர்ந்து வருகிற நண்பன் ரவிக்குமாராகவே இருப்பான். உறவுகளில் உன்னதம் நட்புன்னு சொல்வாங்க. ரவிக்குமார் உன்னதன்!''
சொல்ல மறந்த ஐ லவ் யூ:
''ஒரு ஜென் கவிதை உண்டு
'அன்பே,
இன்று இரவுக்குள் நான்
சாகப்போகிறேன்.
எனக்குத் தெரியும்
விடியலில் முதல் ஒளிக்கீற்றாய்
நீ வருவாய்.'
இதுக்கு அந்தக் காதலி பதில் சொல்கிறாள்...
'அன்பே!
இந்த இரவுக்குள் நீ சாகப்போகிறாய்
அந்தியின் முதல் இருளாய் நான் வருவேன்.'
|