''சென்னைக்கு வந்து ஃபுல் ஏ.சி. போட்டு உட்கார்ந்து நாலு நாள் ஆச்சு. இன்னும் மனசைவிட்டு மதுர வெயில் போகலீங்க!'' - 'பொல்லாதவன்' படத்தில் அதிரும் சென்னையின் ஆக்ஸிலேட்டரை முடுக்கியவர் 'ஆடுகளம்' மூலம் மதுரைச் சேவலைச் சிலிர்க்கவிடுகிறார் வெற்றிமாறன்.
''ஆடுகளம்கிற டைட்டிலே உங்களுக்குக் கதை சொல்லும். உண்மையான வீரனுக்கு ஜெயிக்கிறதும் தோற்பதும் முக்கியம் இல்லை. அவனுக்குத் தகுதியான ஆடுகளம் வேணும். தகுதியான எதிரி வேணும். கால்ல கத்தியைக் கட்டிட்டா, சாவுக்குக்கூட தகுதியா மாறணும். அப்படி ஒரு வீரத்தோட ஆடுகளம் இது.''
''இன்னும் கொஞ்சம் கதைக்கு உள்ளே வாங்களேன்...''
''இப்படி ஒரு கதைன்னு முடிவு ஆனதும் நான் தேர்ந்தெடுத்தது மதுரை. ஆனா, அந்த ஊரை, போக வர ரயிலில் பார்த்ததோடு சரி. கதை பண்ண அது மட்டும் பத்தாது. அந்த நகரத்தோட பாரம்பரியம், மொழி, வீரம் எல்லாம் உண்மையா வேணும். மதுரையோட ஒவ்வொரு முக்கியமான வீதியும் படத்தின் சம்பவங்கள் நடைபெறுகிற இடங்களா வருது. இதை ஒரு தனிமனிதனின் கதைன்னு சொல்றதைவிட, ஒரு சமூகத்தைச் சேர்ந்த இரண்டு தலைமுறையின் கதைன்னு சொல்லலாம். எனக்கென்னமோ, நல்லதும் கெட்டதும் மனிதர்களைச் சார்ந்ததில்லை. அது சூழ்நிலையையும் இடத்தையும் பொறுத்ததுன்னு தோணுது. ஒருநாள் நல்லவனா இருக்கிறதும், மறுநாள் அவனே வேற ஆளா மாறுறதும் கண்ணுக்கு முன்னாடி நடந்துக்கிட்டே இருக்கு. நாம ஒவ்வொருத்தரும் பேலன்ஸ் பண்ணி அமைதியாகப் போவதை வாழ்க்கைன்னு நினைக்கிறோம். இது எவ்வளவு தூரம் சரின்னு இந்த ஆடுகளத்தில் சரிபார்த்திருக்கோம்.''
''தனுசுக்குச் சடாரென்று பெரிய திருப்பம் கொடுத்தவர் நீங்கள். இப்ப அவரைப் பார்க்க எப்படித் தோணுது?''
|