பிடித்த தத்துவம்: '' 'கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பணி தானாக வரும்!'னு அமீர் அண்ணன் ஆபீஸ்ல இந்த வரிகளை எழுதிப் போட்டிருக்கார். வாழ்க்கையோட கடைசி நொடி வரை இந்த வரிகளை ஃபாலோ பண்ணணும்கிறது என் ஆசை. என் அசிஸ்டென்ட்டுகளுக்கு நான் சொல்றதும் இதைத்தான்!''
10 வருடங்கள் கழித்து... ''எங்க ஊர் புதுத்தாமரைப்பட்டியில விவசாயம் பார்த்துட்டு இருப்பேன். அப்படி ஓர் அமைதியான, அழகான வாழ்க்கைதான் எப்பவும் என் ஆசை. ஆளுக்கொரு திசையில பிழைக்க வந்துட்டோம். வயல் வரப்பை எல்லாம் ப்ளாட் போட்டு 'அன்னலட்சுமி நகர்'னு பேர்வெச்சு வித்துட்டு இருக்கோம். விவசாயம் போயிட்டா, அன்னமும் கிடையாது... லட்சுமியும் கிடையாது. நஞ்சையிலும் புஞ்சையிலும் ப்ளாட் போட்டு விக்கிறோம். இயற்கை விவசாயத்தோட அருமை இன்னும் கொஞ்ச நாள்ல நமக்குப் புரிஞ்சுடும். அந்த உண்மை சுடும். அப்போ எங்க ஊர்ல நானும், உங்க ஊர்ல நீங்களும் விவசாயம் பார்க்கப் போயிரலாம்!''
கடைசியாக அழுதது: ''என் அக்கா கணவர் சிவக்குமார் இறந்தப்போ! மச்சான் மட்டும்இல்லை அவர்... எனக்கு நண்பனாகவும் இருந்தார். 'குடும்பத்தைப்பத்திக் கவலைப்படாம உன் சினிமாவைப் பாருடா. நான் பார்த்துக்கிறேன்... நீ பெருசா வருவே!'ன்னு அவர் தந்த உற்சாகம் பெருசு. திடுதிப்புனு ஒருநாள் அவருக்கு கேன்சர்னு தெரிஞ்சது. 'வீட்ல யாருக்கும் தெரிய வேணாம். கஷ்டப்படுவாங்க'ன்னு சத்தியம் வாங்கிட்டார். எவ்வளவோ போராடியும் காப்பாத்த முடியாம 'சுப்ரமணியபுரம்' ஷூட்டிங் சமயத்துல இறந்துட்டார். அன்னிக்கு மாதிரி நான் அழுததே இல்லை. இப்போ இந்த வெற்றிகளைப் பார்க்க அவர் இல்லாத பாரத்தை எப்பவும் என்னால இறக்கிவைக்க முடியாது!''
ரசிக்கும் எதிரி: ''ராம்கோபால் வர்மா. கலர்ஃபுல், பவர்ஃபுல்னு நீங்க ரைமிங்கா எழுதுவீங்களே... அதுக்கு அந்த ஆள்தான் சரி. 'ரங்கீலா' ரகளை, 'உதயம்' உறுமல், 'கம்பெனி' கலவரம், 'சர்க்கார்' கம்பீரம்னு அவர் ஆச்சர்யமான கிரியேட்டர். வெற்றிகளுக்குச் சமமா தோல்விகளைப் பார்த்த பிறகும் அவர் பின்னாடி பணத்தைத் தூக்கிட்டு பாலிவுட் அலையுதே... அங்கேதான் நிக்கிறான் கிரியேட்டர்!''
மறக்க முடியாத திட்டு : ''அமீர் அண்ணன்கிட்ட அசிஸ்டென்ட்டா இருந்தப்ப வாங்கின திட்டுகளுக்குக் கணக்கு வழக்கே கிடையாது. அதைஎல்லாம் எழுத முடியாது. சென்ஸார் கட்ல போயிரும். ஆனா, அதெல்லாம்தான் என்னை வளர்த்தெடுத்து உருவாக்கியது. அந்த அக்கறை தகப்பன்களுக்கானது!''
பிடித்த டீச்சர்: ''அகஸ்தா. கொடைக்கானல் 'செயின்ட் பீட்டர்ஸ்' ஸ்கூல்ல என் டீச்சர். பரீட்சையில மார்க் குறைஞ்சா ஸ்டூடன்ட்தானே அடி வாங்கி அழுவான். எங்க அகஸ்தா டீச்சர் பேப்பர் கொடுத்துட்டு அவங்க அழுவாங்க. 'இப்படி மார்க் வாங்கினா, நான் உங்களுக்குச் சரியாச் சொல்லிக் கொடுக்கலைன்னுதானே எல்லோரும் பேசுவாங்க'ன்னு அழுவாங்க. அவங்க அழக் கூடாதுன்னே நாங்க அக்கறையாப் படிப்போம். அப்படி அபூர்வமான அன்பு. அப்புறம் சாந்தா டீச்சர்... என் தமிழ் குரு. என் தமிழ்த்தாய் வாழ்த்து எப்பவும் அவங்களுக்குத்தான். பெரிய ஆளாவதைவிட இவங்க முன்னாடி சின்னப் பையனா நிக்கிறதுதான் சந்தோஷம். என் டீச்சர்களைப் பார்க்கணும் போல இருக்கு... எங்கே இருந்தாலும் ஒரு போன் பண்ணுங்க டீச்சர்!''
|