ஆஸ்கருக்குப் பிறகு இந்தியாவில் ரஹ்மானின் முதல் இசை நிகழ்ச்சி என்றால், டெல்லிதான் மையமாக இருந்திருக்க வேண்டும். கல்லா கட்ட வேண்டும் என்றால், மும்பையை டிக் அடித்திருக்கலாம். 'தாய் மண்ணே வணக்கம்' என்று ரஹ்மான் சென்டிமென்ட்டாக ஃபீல் பண்ணியிருந்தால், விழா சிங்காரச் சென்னையில் அரங்கேறியிருக்க வேண்டும். ஆனால், கடந்த ஞாயிற்றுக் கிழமை 'ஜெய்ஹோ' என்ற ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடந்ததோ சீக்கினக் குப்பத்தில். சென்னையில் இருந்து 80 கி.மீ. தள்ளி கிழக்குக் கடற்கரைச் சாலையில் விரிந்திருக்கும் ஒரு வனாந்தரம்.
மேடைக்கு மட்டுமே 10 ஆயிரம் சதுர அடி இடம்,
5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்களை பார்க் செய்யும் வசதி என்று விழாவுக்கான தேவைகள் மெகா சைஸில் விரிந்ததால், சீக்கினக் குப்பத்தில் சிக்கிக்கொண்டது விழா. மைக்கேல் ஜாக்சன், மடோனா, பிரிட்னி ஸ்பியர்ஸ் போன்றோரின் உலக இசைச் சுற்றுப்பயணம் போல உலகெங்கும் இசைப் பயணம் செய்யத் திட்டமிட்டு இருக்கும் ரஹ்மான், அதற்கு வெள்ளோட்டம் பார்த்த நிகழ்ச்சியாக இந்த 'ஜெய்ஹோ' அமைந்திருந்தது.
மேடையில் இரண்டு தளங்கள். மேல் தளத்தின் பின்னணியாக வர்ண ஜாலங்கள் காட்டிய பிரமாண்ட எல்.ஈ.டி. திரை தமிழ்நாட்டுக்குப் புதுசு. ரசிகர்களையே மும்பையில் இருந்து விமானத்தில் அழைத்து வந்த நிகழ்ச்சி அமைப்பாளர்கள், பாடகர்கள் விஷயத்தில் கோட்டைவிடுவார்களா என்ன? ஹரிஹரனில் துவங்கி சாதனா சர்கம் வரை அத்தனை பேரையும் சென்னைக்கு அலேக்கியிருந்தார்கள்.
|