'போக்கிரி' படத்தின் ஹிந்தி டப்பிங் 'வான்டட்' பாலிவுட்டில் ஆர்.டி.எக்ஸ். ஹிட்! படத்தில் சல்மான் வரும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் 1,000 வாட்ஸ் ஆக்ஷன். ஸீனுக்கு ஸீன் ரத்தம் சத்தம் தெறித்து தோட்டாக்கள் பறக்கும் 'போக்கிரி' கதைக்கு விஜய், மகேஷ் பாபுவைக் (தெலுங்கு) காட்டிலும் சல்மான் அசத்தல் பொருத்தம். இரும்பால் வார்க்கப்பட்டது போன்ற எய்ட்-பேக்ஸ் உடம்பு, சலனம் இல்லாத கண்கள், படீரென வெடிக்கும் முஷ்டி என மனுஷன் மசில் மெஷினாக அதகளப்படுத்துகிறார். 'ஒரு தடவை முடிவு எடுத்துட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்!' என்ற விஜய்யின் பஞ்ச் டயலாக்கை சல்மான் ஹிந்தியில் அடிக்கும்போது தியேட்டரில் 'உய்... உய்' உற்சாகம்.போக்கிரியில் அதுவரையிலான ஆக்ஷன் டெம்போ விஜய் போலீஸ் டிரெஸ் அணிந்து வந்ததும் கொஞ்சம் காலியாகும். ஆனால், சல்மானுக்கு அந்த போலீஸ் டிரெஸ் கம்பீரக் கச்சிதம்.
'போக்கிரிப் பொங்கல்' பாடல் அங்கே 'ஜல்வா ஜல்வா' என்று அவதாரம் எடுத்திருக்கிறது. அதில் விஜய் போல சட்டைக் காலரை இழுக்கிறார் சல்மான். ஆனால் விஜய்யிடம் இருக்கும் ஒரு குறும்பு ஸ்டைல் மிஸ்ஸிங்! பாடலில் சல்மானோடு ஆட்டம் போடும் பிரபுதேவாவின் செல்போன் ரிங்குகிறது. 'நல்லா ஜாலியா ஆடிட்டு இருந்தேன். அது பொறுக்காதே!' என்று தமிழில் சிணுங்கியபடி பிரபு தேவா இடத்தைக் காலி செய்ய.... பாடல் முடிகிறது.
ஆக்ஷனில் வெடித்து வேட்டையாடினாலும் காமெடி காட்சிகளில் விஜய் பக்கத்தில்கூட நெருங்கவில்லை சல்மான். ரொம்ப வருடங்களுக்குப் பிறகு சல்மானுக்குக் கிடைத்திருக்கும் மெகா ஹிட் இந்தப் படம். உங்களுக்கு சல்மான்கான் பிடிக்கும் என்றால், தவறாமல் 'வான்டட்' பாருங்கள். பிடிக்காவிட்டாலும் பாருங்கள்... அதன் பிறகு நிச்சயம் சல்மானைப் பிடிக்கும்!
|