ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

சினிமா விமர்சனம்: பூ

சினிமா விமர்சனம்: பூ


சினிமா
சினிமா விமர்சனம்: பூ
சினிமா விமர்சனம்: பூ
 
சினிமா விமர்சனம்: பூ
சினிமா விமர்சனம்: பூ
சினிமா விமர்சனம்: பூ
சினிமா விமர்சனம்: பூ
சினிமா விமர்சனம்: பூ

ந்தகப் 'பூ'வின் கதை!

ஆண்களின் 'ஆட்டோகிராஃப்' மட்டுமே சொல்லப்பட்ட தமிழ்த் திரையில், முதன்முதலாக ஒரு பெண்ணின் காதல் நினைவுகளை, கள்ளிப்பழ வாசத்துடன் மலரவிட்டதற்காக இயக்குநர் சசிக்கு, நம்பிக்கை தரும் படைப்பாளிகளின் வரிசையில் ஒரு நாற்காலி!

வெக்கையடிக்கும் கரிசல் பூமியில், 'வெடியாபீஸில்' வேலை பார்க்கும் கிராமத்துப் பெண் மாரியம்மா. 'பெரியவளானதும் என்னவாகப் போற?' எனக் கேட்கும் வாத்தியாரிடம், 'தங்கராசுக்குப் பொண்டாட்டியாகப் போறேன் சார்' என்கிற அளவுக்கு மாமா மகன் மீது மருகும் காதல். வெடிமருந்து, கள்ளிப்பழம், அரை குயர் நோட்டு, ஆட்டுக்குட்டி எனத் தனக்குப் பரிச்சயமான அனைத்திலும் அவளுக்கு தங்கராசுவின் ஞாபகம். சென்னைப் பொறியியல் கல்லூரி ஒன்றில் மாணவனான தங்கராசு, சந்தர்ப்பவசத்தால் அப்பாவின் முதலாளி மகளையே மணக்க நேரிடுகிறது. மாரியும் அவள் அடைகாத்த காதலும் என்னவாச்சு என்பதே மிச்சமுள்ள க(வி)தை.

சினிமா விமர்சனம்: பூ

ச.தமிழ்ச்செல்வனின் 'வெயிலோடு போய்...' சிறுகதையை, செல்லுலாய்டில் விதைத் திருக்கிறார் சசி. கிராமத்துப் படம் என்றால் வன்முறைக் காட்சிகளும், திருவிழாக் குத்துப்பாட்டும் இருக்க வேண்டும் என்கிற முந்தைய இலக்கணங்களை உடைத்தது முதல் அழகு. படம் முழுக்க அன்பால் நிறைந்த மனிதர்களைக் காட்டிச் செல்லும் விதத்தில், ஆரோக்கிய சினிமாவுக்கு இது இன்னொரு அடிக்கல்.

கதை நெடுக வியாபித்து, மாரியம்மாள் என்னும் ஏழைப் பெண்ணாகவே எளிமையில் மிளிர்கிறார் பார்வதி. 'என் தங்கராசுவுக்காக நான் என்ன செஞ்சாலும் அழகுதான்' என்கிற வெட்கத்தில், 'ஆசை முத்தம்தான் தர முடியலை, தோசை முத்தமாச்சும் தர்றேன்' என்கிற ஆசையில், காதல் தோல்வியிலும் 'கறுப்புக் குட்டீஈஈ!' என ஆட்டுக் குட்டியைத் தூக்கிக் கொஞ்சும் தவிப்பில், நள்ளிரவில் கள்ளிப்பழம் தேடிப் போகையில்... குடுகுடுப்பைக்காரரைக் கண்டு நடுங்கும் மிரட்சியில்... முக பாவனைகளிலேயே இத்தனை உணர்ச்சிகளைக் காட்டும் நடிகையைத் திரையில் பார்த்து எத்தனை காலமாயிற்று!

தம்மாத்துண்டு கேரக்டரில்

காந்த். பாதிப் படம் ஓடிய பிறகே அறிமுகமாகிற ஹீரோ கேரக்டரைக் கதையின் கனத்துக்காக ஒப்புக்கொண்டதற்காகவே

காந்த்துக்குக் கை குலுக்கலாம். ஆனால், அவரது பேச்சுமொழியும் உடல்மொழியும் அசலான கிராமத்து மனிதர்களுக்கு மத்தியில் அந்நியமாகவே நிற்கிறது. கேமரா வெளிச்சத்தை முதன்முதலில் பார்க்கிற மனிதர்கள், நடிப்பில் பிரமாதப்படுத்திவிட்டனர். பேனாக்காரராக வரும் ராமு... புழுதிக்காட்டு தகப்பன்சாமிகளின் மன உணர்ச்சிகளை அப்படியே கொண்டுவந்ததில் இயல்பான நடிப்புக்காரர். தங்கை மீதுள்ள பாசத்தை மிகைப்படுத்தாமல், யதார்த்த அண்ணனாக ஆர்ட் டைரக்டர் வீரசமர், 'அலோ' டீக்கடைக்காரர் கந்தசாமி, 'வெடியாபீஸ்' ஃபோர்மேன் கண்ணன், மாரியின் அம்மா ஜானகி, மாரியம்மாளின் தோழி சீனியாக இன்பநிலா, பார்வதியின் கணவனாக இனிகோ என அத்தனை கேரக்டர்களிலும் மிளிர்கிறது எளிமையும் இயல்பும். இந்த யதார்த்தம் சின்ன வயது மாரியம்மாளாக வரும் மயிலா வரை நேர்த்தியாகப் பொருந்துவது இயக்குநரின் மெனக்கெடலுக்கு சாட்சி.

'பெருசானதும் என்னவாகப் போறீங்க?' என்ற பள்ளிக்கூட வாத்தியார் கேள்விக்கு, 'சர்பத் கடை வைப்பேன் சார்', 'டக்கர் டைவராவேன் சார்' என பையன்கள் பதில் சொல்ல, எந்தப் பதிலும் சொல்லத் தெரியாமல் தடுமாறி நிற்கின்றனர் பெண் குழந்தைகள். 'எதிர்காலத்துல என்னவாகப் போறோம்னு தெரியாமலேயே வளருதுங்களே பொம்பளைப் புள்ளைங்க' என்ற ஆசிரியரின் விசனக் குரலில் வெளிப்படுகிறது சசியின் சமூக அக்கறை.

கிராமத்துப் படம் என்றாலே அங்கொரு டீக்கடை, அதில் காமெடி என்கிற கிளிஷே இதிலும் உண்டு. அதே போல் பணக்கார வீட்டுப் பெண் என்றாலே, கால் மேல் கால் போட்டு இங்கிலீஷ் புக் படிப்பதும், புருஷனைக் கேவலமாகத் திட்டுவதுமாக அலுப்புப் புளிப்பு. அவ்வப்போது எட்டிப் பார்க்கும் ஹீரோயினின் 'கறுப்பு மேக்கப்', பரவை முனியம்மாவின் திணிக்கப்பட்ட பாடல், கொய்யாக்காய் ஷாட், ஃபோர்மேனின் தன்னிலை விளக்கம் எல்லாம் பூவில் நெருடும் முள்கள்.

விற்கப்பட்ட பழைய ஆட்டுக்குட்டியைத் தூக்கிக்கொண்டு பார்வதி நிற்கும் இடத்திலேயே படம் முடிந்துவிடுகிறதே. அதற்கடுத்தும்

காந்த் கஷ்டப்பட்டு, பார்வதி அழுது என பூவை இழுத்துத் தொடுத்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் தமிழுக்கு இனிய இசை வரவு. 'ச்சூ ச்சூ மாரி', 'மாமன் எங்கிருக்கான் ஆக்காட்டி' பாடல்கள் கரிசல் ஈரம்.

வெடித்துக்கிடக்கும் கரிசல் நிலம், மொட்டை வெயிலில் மோனத் தவமிருக்கும் பனைமரங்கள், நடுநிசியில் சிவப்பாகப் பூத்துக்கிடக்கும் கள்ளிப்பழங்கள், பொடிசுகளின் விளையாட்டில் சிதறிக்கிடக்கும் சோளக்கதிர்கள் என கேமராவில் கிராமத்தின் உயிரைக் கொண்டுவந்திருக்கும் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா, தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கை தரும் இன்னொரு இளைஞர்.

நல்ல இலக்கியத்தைத் தரமான, சுவாரஸ்யமான சினிமாவாக்க முடியும் எனக் காட்டியவிதத்துக்கு ஒரு பூங்கொத்து!

சினிமா விமர்சனம்: பூ

 
சினிமா விமர்சனம்: பூ
- விகடன் விமர்சனக் குழு
சினிமா விமர்சனம்: பூ