சினிமா
Published:Updated:

ராஜா ராணி - சினிமா விமர்சனம்

ராஜா ராணி - சினிமா விமர்சனம்

##~##

விருப்பம் இல்லாமல் ஜோடி சேர்ந்த 'ராஜா ராணி’க்கு இடையிலான 'மௌன ராகமே’ படம்!

தத்தமது 'லவ் பேர்டு’களை இழந்த ஆர்யாவும் நயன்தாராவும் பெற்றோர் திருப்திக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த 'ஆங்ரி பேர்டு’களுக்கு இடையிலான டிஷ்யூம் டிஷ்யூம், உருகும் ஃப்ளாஷ்பேக், இறுகும் நெருக்கம் என்று பார்த்த சினிமாதான். ஆனால், ராஜா ராணி காலத்துக் கதையை டி-20 யுகத்தின் 'ரிச் டச்’ செய்தவகையில், அறிமுக இயக்குநர் அட்லீக்கு கலர்ஃபுல் வெற்றி!

சர்ச்சில் திருமண உறுதிமொழி ஏற்பின்போது நயன்தாரா தடுமாறுவது, அப்பா சத்யராஜை 'டார்லிங்’ என்று அழைத்து பீர் வாங்கிக் கொடுப்பது, காதலன் ஆர்யாவை நஸ்ரியா 'பிரதர்’ என்று வம்பு இழுப்பது... என, படம் முழுக்க இளைஞர்களின் 'ஜஸ்ட் லைக் தட்’ மனநிலை பளிச் பளிச்.

ஏர்வாய்ஸ் வாடிக்கையாளராக எகிறும் நயனிடம், 'யக்கா.. இன்னைக்குதான்க்கா வேலைக்கு வந்திருக்கேன். நான் வேணா உன் பில்லுக்கு பணம் கட்டிடுறேன்க்கா’ என்று பம்மிப் பதறும் 'கஸ்டமர் கேர்’ ஜெய் அத்தியாயம், செம சிரிப்பு சிக்குபுக்கு.

'நான் அழுவுலியே... என் கண்ணு வேர்க்குது’, என்று 'பயந்து வருது’ கேரக்டரில் பட்டாசு கிளப்பி இருக்கிறார் ஜெய். அட, துளி க்ளாமர் இல்லாமல் அழுகையில் மேக்கப் கரைந்த நிலையிலும்... வசீகரிக்கிறார் நயன்தாரா. வெல்கம் பேக் நயன்!

ராஜா ராணி - சினிமா விமர்சனம்

நஸ்ரியா, நயன்தாராவை மருத்துவப் படுக்கைகளில் பார்த்துக் கலங்கி கண்ணீர்விடும்போது... அட, ஆர்யா நடிச்சிருக்கார்பா! அந்த 'ரிங்க ரிங்கா’ ஆட்டம் ஒண்ணு போதும்... நீங்கள்லாம் நல்லா வந்துட்டீங்க நஸ்ரியா! 'முதலிரவு நடக்கலையா? அப்போ குஸ்கா மட்டும்தான் சாப்பிட்டியா?’ என ஆர்யாவைக் கலாய்க்கும் சந்தானம், படத்தின் ஸ்ட்ராங் பில்லர். 'என் பொண்ணு ஒருதடவைகூட உங்களுக்கு பீர் வாங்கிக் கொடுத்தது இல்லையா?’ என்று ஆச்சர்யப்பட்டு வருத்தப்படும் இடத்தில் சத்யராஜ்... க்ளாஸ்!

ராஜா ராணி - சினிமா விமர்சனம்

'நான் யாரையோ வெச்சிருக்கேன்னு என் புருஷன் சொல்றாரு’ என்று கலாய்க்கும் மதுமிதாவிடம், 'அது... நீங்க ரிங் டோனை வெச்சிருக்கீங்க’ என்று ஜெய் சொல்லும் அப்பாவியான பதிலும், 'உலகத்துல யாருமே பொறக்கும்போது 'மேட் ஃபார் ஈச் அதரா பொறக்கிறதில்லை... வாழ்ந்துகாட்டுறதுலதான்’ எனும் நயனின் புரிதலுமான வசனங்கள்தான், கொஞ்சம் நீளமான படத்தை அலுப்பு இல்லாமல் நகர்த்துகின்றன.

படம் முழுக்க ரங்கோலி உற்சாகத்தைப் புதைத்திருக்கிறது ஜார்ஜ் வில்லியம்ஸின் கேமரா. ஜி.வி.பிரகாஷின் 'ஹம்மிங்’ ரகப் பாடல்களும், நெகிழவைக்கும் பின்னணி இசையும் நல்ல காம்போ!  இளமை துள்ளும் குறும்புக் குற்றால சாரலை பாடல்களில் தெளித்திருக்கிறார்கள் கவிஞர்கள் பா.விஜய், நா.முத்துக்குமார்.

அத்தனை நீளமான க்ளைமாக்ஸ் ஏன் அட்லீ? ரம்மி சேர்ந்த பின்னும் ஆட்டம் நீள்கிறது. ஆனாலும், சுவாரஸ்ய 'ஷோ’ காட்டுகிறார்கள் இந்த ராஜா ராணி!

- விகடன் விமர்சனக் குழு