சினிமா
Published:Updated:

வலிச்சாலும் வலிக்கலைனுதான் சொல்வான் ஹீரோ!

ஜெகன்

##~##

மிழ் சினிமா வில்லன்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றிய கட்டுரையை விகடனில் படித்து மிகுந்த மன அதிர்ச்சி அடைந்தேன். உண்மையில் வில்லன்களைவிட நமது ஹீரோக்கள்தான் அதிகமாகக் கஷ்டப்படுகிறார்கள். இதோ ஹீரோக்களின் சிரமங்களைப் பட்டியலிட்டிருக்கிறேன். படித்து முடித்துவிட்டு நீங்களே இரண்டு சொட்டுகள் கண்ணீர் சிந்துவீர்களாக!

மாறுவேஷம்னா ஹீரோ முகத்துல வெறும் மரு அல்லது மச்சம் மட்டும் வெச்சுக்கிட்டு வருவார்னு கிண்டல் பண்றீங்களே... தேசத்தைக் காக்கும் லட்சியம் நெஞ்சுல எரியுறப்ப, தாயைக் காப்பாற்றவேண்டிய கடமை பொடனில அடிக்கிறப்ப, ஃபுல் மேக்கப் போட்டுக்கிட்டு வர ஹீரோக்கள் என்ன, 'மானாட மயிலாட’ ஜட்ஜா சார்?

'துப்பாக்கி’ படத்துல விஜய் வெறும் செல்போன்ல கமாண்ட் கொடுத்துட்டே 12 பேரை ஈஸியா சுட்டுட்டார்னு நீங்க சொல்வீங்க. ஆனா, ஒவ்வொரு போனுக்கு இடையிலயும் 'சார் பேங்க் லோன் வேணுமா?’, 'கிரெடிட் கார்டு வேணுமா சார்?’, 'ஹலோ... நீங்க செல் பில் கட்டலை’னு கஸ்டமர் கேர் அழைப்புகள் அலைக்கழிச்சது எத்தனைப் பேருக்குத் தெரியும்!

ஹீரோ ஒரே பாட்டுல பணக்காரனா, பெரிய மனுஷன் ஆகிறதையும் கிண்டல் பண்றீங்க. ஒரு பாட்டு, அதிகபட்சம் அஞ்சு நிமிஷம்தான். அதுக்குள்ளே அவன் பெரியவனாகணும்னா எத்தனை லட்சம் லிட்டர் காம்ப்ளான் குடிசிருக்கணும், எத்தனை கிலோ ஹார்லிக்ஸை அப்படியே சாப்பிட்டிருக்கணும்னு  கற்பனை பண்ணியிருக்கீங்களா? 1,76,000 கோடி ஹார்ஸ் பவர்ல உழைச்சாதான், அப்படி ஒரே பாட்டுல முன்னேற முடியும் பாஸ்!

வலிச்சாலும் வலிக்கலைனுதான் சொல்வான் ஹீரோ!

வில்லனுங்க தங்கள் ரேஞ்சுக்கும் படத்தோட பட்ஜெட்டுக்கும் ஏத்த மாதிரி சுமோ, க்வாலிஸ், பென்ஸ் கார்னு போறப்ப, அந்த வில்லன்களை அடிக்க, 'திருப்பாச்சி’ல ஆரம்பிச்சு 'வேலாயுதம்’ வரைக்கும் கவர்மென்ட் பஸ் ஏறித்தான் சென்னை வர்றார் எங்க இளைய தளபதி. வில்லன்களுக்கு ஹெலிகாப்டர் தர்ற அதே சமூகம்தான், 'அலெக்ஸ்பாண்டியனு’க்கு ஆம்னி வேன் தந்து அசிங்கப்படுத்துது. ஒரு ஹீரோன்னா, அவ்வளவு இளக்காரமா சார்?

வில்லனுங்க நினைச்சா, யாரையும் எங்கேயும் எப்பவும் கத்தியால குத்தலாம். ஆனா, சங்கறுக்கிறதுல கின்னஸ் ரெக்கார்டு படைச்ச எங்க சசிகுமாரே ஊமைக்காய வலியை மறைச்சுக்கிட்டு, 'குத்துனவன் நண்பனா இருந்தா, வெளிய சொல்லக் கூடாது’னு சங்கடப்படுறாப்ல. அதுக்குக் காரணம் அவரு ஹீரோ சார்!

பன்ச் டயலாக் பேசுறாங்கனு விமர்சனம் பண்றீங்களே, எங்க ஹீரோக்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதலே அதுதான். பால் குடிக்கிற பாப்பால இருந்து பல்லுப்போன பாட்டி வரை இப்போ பன்ச் அடிக்கிறாங்க. அப்படி இருக்கிறப்போ, மலை உச்சில இருந்து பொது மக்களோடு விழப்போற மினி பஸ்ஸை தன் மணிக்கட்டுல கட்டி இழுக்கிற எங்க ஹீரோக்கள் பன்ச் அடிச்சா என்ன சார் தப்பு?

உங்களுக்கு மனசாட்சினு ஒண்ணு இருந்தா, இதுக்குப் பதில் சொல்லுங்க பார்க்கலாம்! 30 வயசு ஆள், 60 வயசு வில்லனா நடிக்கிறது தூசு. ஆனா, 60 வயசு ஆள் 30 வயசு ஹீரோவா நடிக் கிறதும், 40 பேரை அடிக்கிறதும் எவ்வளவு கஷ்டம் தெரியுமா? எல்லாருமே வீரப்பன்கிட்ட மாட்டி, மயில் எண்ணெயை முட்டில தேய்ச்சுக்க முடியுமா?

உங்க வில்லனுங்க ஒஸ்தி க்ளப்ல சரக்கு அடிச்சுட்டு, மல்லிகா ஷெராவத்தோட கேபரே டான்ஸ் ஆடுவாங்க. ஆனா, எங்க ஹீரோக்களோ அட்டு டாஸ்மாக் பார்ல சைட் டிஷ்ஷ§க்கு காசு இல்லாம கட்டிங் போடுவாங்க. சமயங்கள்ல குடிச்சிட்டு காசு இல்லாம செல்போன், சட்டை எல்லாம் பறிகொடுத்துட்டு நிப்பாங்களே... அப்போகூட உங்க மனசுல ஈரமே சுரக்காதா?

சண்டைக் காட்சி பி.ஜி.எம். ஆரம்பிச்சதுமே, வில்லனுங்க சட்டையைக் கிழிச்சுப் போட்டு, ஷூக்களை உதறிட்டு சண்டைக்கு வருவாங்க. ஆனா, எங்க 'தல’ ஏழு கிலோ கோட்டை தோள்ல போட்டுக்கிட்டு, கால் கிலோ கூலிங் கிளாஸை கண்ணுல மாட்டிக்கிட்டு சண்டை போடுறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? பெருசா பேசுறீங்க பேச்சு!

வலிச்சாலும் வலிக்கலைனுதான் சொல்வான் ஹீரோ!

வில்லனுங்க, மேல ஈ உக்காந்தாலே அப்பல்லோவில் அட்மிட் ஆவாங்க. ஆனா, அலோபதி, ஹோமியோபதி, அம்பிகாபதி, டெலிபதி, சபாபதினு எந்த ட்ரீட்மென்ட்டும் எடுத்துக்காம எங்க தளபதி எத்தனை படத்துல அவராவே உடைஞ்ச கை, கால் எலும்புகளை சரிபண்ணிக்கிட்டார் தெரியுமா? அதெல்லாம் ரொம்பக் கஷ்டம் ப்ரோ!

ஒரு படத்துல ஃபர்ஸ்ட் வில்லன், செகண்ட் வில்லன், தேர்ட் வில்லன்னு நடிக்கிறது கஷ்டமே இல்லை. ஆனா நாய், குரங்கு, பாம்பு எல்லாம் ஃபர்ஸ்ட் ஹீரோவா நடிக்கிறப்ப, அதுங்ககூட செகண்ட் ஹீரோவா நடிக்கிற ராம்கி, கரண் நிலைமையை கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க!

மூணு அடி வாங்கி ரத்தம் எட்டிப்பார்த்த பிறகுதான் ஹீரோவுக்கு வீரம் வரும்னு நக்கல் அடிக்கிறீங்களே... ஹீரோ 30 அடி அடிச்சாதான் வில்லனுக்கு ரத்தம் வரும்கிறதை ஈஸியா மறந்துடுறீங்களே?

ஒரு சி.டி., பென் டிரைவைக் கைப்பற்ற எங்க ஹீரோ எவ்வளவு கஷ்டப்படுறார் தெரியுமா? என்னைக்காவது வில்லனுங்க பெரிய மனசு பண்ணி எக்ஸ்ட்ரா காப்பி ஒண்ணு போட்டுக் கொடுத்திருக்காங்களா? 'அச்சா கிதர், அச்சா கிதர்’னு மும்பை முழுக்க பத்து ரூபா சி.டி-யைத் தேடிப் பாருங்க... அப்போ அதோட வலி புரியும். ஏன்னா, ஹீரோ வலிச்சாலும் வலிக்கலைனுதானே சார் சொல்வான்!

ஹீரோ தம்மடிச்சா பொங்கி எழுந்து போராட்டம் பண்ற இந்த பார்ட்-டைம் அரசியல்வாதிங்க, என்னைக்காவது தம் அடிக்கிற, தண்ணி அடிக்கிற வில்லன்களுக்கு டார்ச்சர் கொடுத்திருக்காங்களா?

வில்லனுங்க நினைச்சா, புடிச்ச பொண்ணை வண்டியில தூக்கிப் போட்டுக்கிட்டுப் போயிட்டே இருக்கலாம். ஆனா, நம்ம ஹீரோ ஒரு பொண்ணைப் பார்க்கணும், அவ பின்னாலயே சுத்தணும், பேசிப் பழகணும். இது எவ்வளவு சங்கடம் தெரியுமா? பொண்ணுங்களை கரெக்ட் பண்றதுக்குப் பதிலா, ஹைவே ஹோட்டல்ல புரோட்டா போடலாம் பாஸ்!

'வில்லன் சுட்ட துப்பாக்கிக் குண்டு, ஹீரோ நெஞ்சுல இருக்கிற டாலர்ல பட்டு தப்பிச்சுடுவாராம்’னு நீங்க சிம்பிளா சொல்லிடுறீங்க. ஆனா, குண்டு பாய்ஞ்சு வர்ற திசையில ஹீரோ நெஞ்சோட டாலரை நகர்த்தி, கரெக்ட்டா டாலர் மேல குண்டு படுற மாதிரி மைக்ரோ செகண்ட்ல கொண்டுபோறார். அதான் நிஜம். அது எவ்வளவு பெரிய திறமை!

வலிச்சாலும் வலிக்கலைனுதான் சொல்வான் ஹீரோ!

இருட்டு கொடவுனுக்குள்ள கதகதப்பாவோ, ஏ.சி. ரூம்ல ஜிலுஜிலுன்னோ வில்லன் உட்காந்துக்குவான். ஆனா, இமயமலையில தீவிரவாதிகளைத் தேடிப் போற அர்ஜுனுக்கு நாம தர்றது வெறும் கட் பனியன் மட்டும்தானே! அது மட்டுமா? ஆயிரம் பேர் சுத்தி இருந்தாலும், வில்லனால சேலை உருவப்பட்ட பொண்ணுக்கு, சைஸ் லூஸா இருந்தாலும் தன் சட்டை, பேன்ட், அண்ட்ராயர் வரை கழட்டிக்கொடுத்து அவ மானத்தைக் காப்பத்த, தான் அவமானத்தை ஏத்துக்கிறாரே... அவர்தாங்க ஹீரோ!

உலகத்துலயே கொடுமையான தண்டனை, யார்கிட்டயாவது அறிவுரை கேக்குறதுதான்! எந்த சினிமாலயாவது 'டெல்லி’கணேஷோ, 'நிழல்கள்’ரவியோ, மாணிக்கம் விநாயகமோ வில்லனுக்கு அறிவுரை சொல்லி நீங்க பார்த்திருக்கீங்களா? தனுஷ§ம் சிம்புவும் ரொம்பப் பாவங்க. அட்வைஸ் பண்ணியே அரை வாழ்க்கையை ஓட்டிட்டாங்க!

குட்டி யானை அழுதுச்சுனு அம்மா யானைகூட சேர்த்துவெச்ச ரஜினியைப் பாருங்க, கஞ்சா குடிக்கிற சாமியாரா நடிச்சாலும் கண்ணு தெரியாத பொண்ணுக்கு உதவின ஆர்யாவைப் பாருங்க, அஞ்சு நிமிஷத்துக்கு மேல ஞாபகம் நிக்காத சூர்யாவைப் பாருங்க, பல வேஷங்கள்ல நடிக்கிற கமலைப் பாருங்க, ஒரே வேஷத்துலயே எல்லாப் படமும் நடிக்கிற விமலைப் பாருங்க... ஹீரோவா இருக்கிறது எவ்வளவு கஷ்டம்னு தெரியும்!

கடைசியா ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன்... நூறு படத்துல வில்லனா நடிச்சிடலாம். ஆனா, உங்களால ஒரு பாலா படத்துல ஹீரோவா நடிக்க முடியுமா... நடிக்க முடியுமா?

சேகர் செத்துருவான்!