இனி டூயட் ஆடுனா உதை !
ம.கா.செந்தில்குமார்
##~## |
காதல் மனைவி ஜெஸ்லியை 'ஜெஸ்ஸு’ என்று அழைக்கிறார் பரத். கணவனை செல்லமாக 'B’ என்று அழைக்கிறார் ஜெஸ்லி. 'காதல்’ ஹீரோவின் நிஜக் காதல் கதை இங்கே...
''பொதுவான நண்பர்கள் மூலம் அறிமுகமானோம். நுங்கம்பாக்கம் காதர் நவாஸ் கான் சாலை 'கரி க்ளப்’தான் நாங்க சந்திக்கும் ஜாயின்ட். ரொம்ப நாள் வரை 'ஹாய்... பை’ மட்டும்தான். எஸ்.எம்.எஸ்., செல் அழைப்புகள்னு நெருக்கமான நண்பர்கள் ஆனோம். அப்புறம் என்ன.... காதல்... காதல்... காதல்!'' - ஜெஸ்லியைப் பார்த்து கலகலவெனச் சிரிக்கிறார் பரத்.
''நாங்க துபாய்ல வசிக்கும் மலையாளிக் குடும்பம். டென்த் வரை அங்கேதான் படிச்சேன். தமிழ்நாட்டில் கல்லூரிப் படிப்பு படிச்சா நல்லா இருக்கும்னு இங்கே வந்து பி.டி.எஸ். சேர்ந்தேன். அடுத்த வருஷம் எம்.டி.எஸ். படிக்கணும்!'' பேட்டிக்குப் பழக்கம் இல்லாததால் தயங்கித் தயங்கிப் பேசுகிறார் ஜெஸ்லி.
''என் வீட்ல எங்க காதலுக்கு உடனே க்ரீன் சிக்னல் கொடுத்துட்டாங்க. ஆனா, ஜெஸ்ஸு வீட்லதான் பிடிகொடுக்கலை. எனக்கென்ன சார் குறைச்சல்?'' என்று ஜெஸ்லியை வாருகிறார் பரத். ''உடனே சம்மதம் சொல்லிட்டா, அதுல என்ன த்ரில் இருந்திருக்கும்?'' என்று சிரிக்கும் ஜெஸ்லி, ''சினிமால இருக்கார்னு கொஞ்சம் தயங்கினாங்க என்பது உண்மை. ஆனா, 'அவரைத்தான் நான் கட்டிக்குவேன். அதுவும் உங்க சம்மதத்தோடதான் எங்க கல்யாணம் நடக்கும்’னு வீட்ல சொல்லிட்டு அந்த முடிவில் உறுதியா நின்னுட்டேன்!'' என்கிறார்.
''பரத் நடிச்ச படங்கள்ல எதெல்லாம் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்?''
''எனக்கு சினிமாவே பிடிக்காது. இவரைக் காதலிக்கிறதுக்கு முன்னாடி கொஞ்சம் படங்கள்தான் பார்த்திருப்பேன். ஆனா, காதலுக்குப் பிறகு ஆறேழு மாசத்துல 'பாய்ஸ்’ல ஆரம்பிச்சு '555’ வரை இவர் நடிச்ச எல்லாப் படங்களையும் பார்த்துட்டேன். ஏன், எதுக்குனு சொல்லத் தெரியலை. சினிமா பார்க்க மாட்டேன்னாலும், எனக்கு விஜய் பிடிக்கும். அவர் மாதிரியே இவரும் நல்ல டான்ஸர். ஆனா, B நடிக்கிற படங்கள்ல சுத்தமா டான்ஸுக்கு ஸ்கோப் இருக்காது. முழுக்க முழுக்க ஒரு டான்ஸ் ஃப்லிம்ல நடிங்கனு நான் சொல்லிட்டு இருக்கேன்!''
''ஜெஸ்லி கொடுத்ததில் மறக்க முடியாத காதல் பரிசு?'' - இந்தக் கேள்வி பரத்துக்கு.

''மறக்க முடியாததைச் சொல்ல மாட்டேன். ஆனா, ஆச்சரியப்படுத்திய ஒரு பரிசு பத்திச் சொல்றேன். ஒரு நாள் வீட்டுக்கு தபால்ல ஒரு பார்சல் வந்தது. துபாய்ல இருந்து இவங்க அனுப்பியிருந்தாங்க. பிரிச்சா, அது ப்ளே ஸ்டேஷன் 3. நான் வெறித்தனமா வீடியோ கேம் விளையாடுவேன்னு ஜெஸ்ஸுக்குத் தெரியும். அதனால தேடித் தேடி எனக்குப் பிடிச்ச, என்கிட்ட இல்லாத ப்ளே ஸ்டேஷனை வாங்கி அனுப்பியிருந்தாங்க. சந்தோஷத்துல எனக்குப் பேச்சே வரலை. இவங்களுக்கு 'தேங்க்ஸ்’ கூட சொல்லத் தோணாம, நான் அதை வெச்சுட்டு விளையாட ஆரம்பிச்சுட்டேன். அதுதான் அவங்க எதிர்பார்த்ததும்'' என்று சட்டெனக் கனிவாகிறார் பரத்.
பரத் பற்றிய கிசுகிசுக்களைப் படித்தால் கோபம் வருமாம் ஜெஸ்லிக்கு. ''என்னைப் போட்டு பின்னி எடுத்துருவாங்க. அதுவும் சமீபத்துல எனக்கும் இன்னொரு பெண்ணுக்கும் கல்யாணம்னு கிளம்பின வதந்தியைப் படிச்சுட்டு செம டென்ஷன் ஆகிட்டாங்க. அதுவும் அப்பத்தான் வீட்ல கல்யாணம் பத்தி பேசிட்டு இருந்த சமயம். அப்புறம் ஒரு மாதிரி புரிஞ்சுக்கிட்டாங்க. ஆனா, ஒரே ஒரு சின்ன வருத்தம்தான்...'' என்று பரத் சின்ன இடைவெளி கொடுக்க, திடுக்கென நிமிர்கிறார் ஜெஸ்லி.

''கல்யாணமும் முடிஞ்சிருச்சு. ஆனா, அதுக்குப் பிறகு இன்னும் துபாய்ல உள்ள மாமனார் வீட்டுக்குப் போகலை'' என்று குறும்பாகச் சிரிக்கிறார் பரத். அவசர அவசரமாகப் பதில் சொல்கிறார் ஜெஸ்லி. ''அது... ஆரம்பத்துல 'நடிகர்’னு தயக்கம் இருந்ததால், அவரைக் கூட்டிட்டுப் போக முடியலை. ஆனா, இப்போ இவர் பழகுறதைப் பார்த்துட்டு அவங்களுக்கும் இவரை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. இப்ப என் அண்ணன் இவர்கிட்டதான் ஜிம் டிப்ஸ் கேட்டுக்குறார். ஹனிமூன் போறப்ப துபாய்ல ரெண்டு நாள் ஸ்டே நிச்சயம்!'' எனும் மனைவியைத் தோளோடு அணைத்துக்கொள்கிறார் பரத்.
''சரி... இந்தில 'ஜாக்பாட்’ படத்துல செக்ஸ் பாம் சன்னி லியோன்கூட நடிக்கிறாரே இவர்... அது பத்தி எதுவும் உங்ககிட்ட ஷேர் பண்ணிக்குவாரா?'' என்று ஜெஸ்லியிடம் கேட்டால், ''நீ சொன்னதை நானே சொல்லிடுறேன்!'' என்று அனுமதி பெற்றுச் சொல்கிறார் பரத்... '''டூயட் கீயட்னு அவங்ககூட ரொம்ப க்ளோஸா நடிச்ச, மவனே உதை விழும்’னு மிரட்டினாங்க!''
அது..!