எஸ்.கலீல்ராஜா
##~## |
சமீபத்தில் வெளியான படங்களில் பளிச் ஆச்சர்யம் கொடுத்த சில நட்சத்திரங்களின் மினி பயோடேட்டா இங்கே...
ஷெல்லி கிஷோர்: 'தங்க மீன்கள்’ படத்தில் செல்லம்மாவுக்கு அம்மாவாக 'வடிவு’ கேரக்டரில் இயல்பாக நடித்து அசத்திய ஷெல்லி கிஷோர், மீண்டும் ஒரு கேரளத்து நல்வரவு.
''வளர்ந்தது எல்லாம் துபாய். 2006-ல் கேரளாவுக்கு வந்து 'இகவர்னன்ஸ்’ படிச்சுட்டு மத்திய அரசு நிறுவனத்தில் தற்காலிக வேலையில் இருந்தேன். அப்போ 'தனியே’னு ஒரு டெலி ஃபிலிம் நடிச்சேன். அதில் நடிச்சதுக்காக மாநில அரசு விருது கிடைச்சது. அது சினிமா வாய்ப்புகளைக் கொடுத்தது. ஆனா, நான் நடிச்ச முதல் படம் வெளியாகவே இல்லை. நான் நடிச்ச 'கேரள கஃபே’ படம் செம ஹிட். அப்புறம் தொடர்ந்து படங்கள்ல நடிச்சப்ப பத்மப்ரியா பழக்கமானாங்க. அவங்க மூலம்தான் 'தங்க மீன்கள்’ வாய்ப்புக் கிடைச்சது.
நான் ஒரு க்ளாசிக்கல் டான்ஸர். குச்சிப்புடி கத்துட்டு இருந்தேன். பரபரனு நடிக்க ஆரம்பிச்ச பிறகு, அதைக் கத்துக்க நேரம் இல்லாம போச்சு. கிடைக்கிற சின்ன கேப்ல குச்சிப்புடி க்ளாஸ் போகணும்; வீணை வாசிக்கணும். என் வாழ்க்கை இப்போ எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!''

அர்ஜுனன்: 'காதலில் சொதப்புவது எப்படி?’, 'ஆதலால் காதல் செய்வீர்’ படங்களில் ஹீரோக்களின் நண்பனாக வந்து கலகலக்க வைத்த அர்ஜுனன் சென்னைவாசி.

''அண்ணா பல்கலைக்கழகத்தில் மீடியா சயின்ஸ் படிச்சேன். என் தாத்தா சுப்பாராவ் அந்தக் காலத்துல சினிமா கேமரா மேன். 'வீரபாண்டிய கட்டபொம்மன்’, 'அலிபாபாவும் 40 திருடர்களும்’ போன்ற படங்களுக்கு அவர்தான் ஒளிப்பதிவாளர். அதனால சின்ன வயசுல இருந்தே சினிமா மேல காதல். 'துரோகி’ படத்துல நான் உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். அப்பதான் பாலாஜி மோகன் எனக்குப் பழக்கமானார். அவர் எடுத்த குறும்படத்தில் நடிச்சேன். அதுதான் பின்னாடி 'காதலில் சொதப்புவது எப்படி?’னு அதே பேர்ல சினிமா ஆச்சு. இப்போ நிறைய படங்களில் நடிக்கக் கேட்டு வாய்ப்பு வருது. ஆனா, நான் சினிமாவுக்குள்ள வந்ததே ஒரு படம் இயக்கத்தான். அந்தப் படத்துக்கான ஸ்க்ரிப்ட் வேலைகள் நடந்துட்டு இருக்கு. 'காமெடிப் படம்தானே’னு எல்லாரும் கேட்கிறாங்க. இதுக்காகவே எல்லாரையும் ஏமாத்துற மாதிரி சீரியஸா ஒரு படம் பண்ற ஐடியா இருக்கு.''
நிவின்:
'நேரம்’ படத்தில் சுருக்க ரிக்கா பிஸ்தாவாக முக்கால் மொழத்துக்கு நடித்த நிவின், எர்ணாகுளம் அருகே அலுவாவைச் சேர்ந்தவர்.
''பி.டெக். படிச்சு முடிச்சதும் இன்ஃபோசிஸ்ல வேலை கிடைச்சுது. ஆனா, கொஞ்ச நாள்லயே வேலை போரடிச்சுது. வீட்டுல சொல்லிக்காம வேலையை ராஜினாமா பண்ணிட்டு, ஊருக்குக் கிளம்பிட்டேன். 'நேரம்’ பட இயக்குநர் அல்போன்ஸ் அப்போ குறும்பட வேலைகள்ல பரபரப்பா இருந்தார். அவரோட சேர்ந்து ஸ்க்ரிப்ட் வேலைகளைப் பார்த்துட்டு இருந்தேன். அந்த சமயம் திரைக்கதை ஆசிரியர் சீனிவாசன் சாரோட பையன் வினீத் சீனிவாசன் 'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்’னு ஒரு படம் எடுக்குறதுக்கான வேலைகளை ஆரம்பிச்சார். அஞ்சு நண்பர்கள் பத்தின கதைக்கு என் போட்டோவை அனுப்பி வெச்சேன். என் நேரம் நல்லா இருக்கவும், படத்துல நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. அடுத்து அவர் இயக்கிய 'தட்டத்தின் மறயத்து’ படத்தில் சோலோ ஹீரோ வாய்ப்பு கொடுத்தார். படம் கேரளாவில் சூப்பர் ஹிட். அதுக்கு நடுவுல 'நெஞ்சோடு சேர்த்து’னு ஒரு மியூஸிக் ஆல்பம்ல நஸ்ரியாவோட நடிச்சேன். அதுவும் செம ஹிட். அந்த ராசிதான் 'நேரம்’ படத்துல எங்களை ஜோடி ஆக்கியது. படம் பார்த்துட்டு தனுஷ், வெங்கட் பிரபுனு நிறைய பேர் பாராட்டினாங்க. இப்போ மலையாளத்துல நிறைய படங்கள்ல நடிச்சிட்டு இருக்கேன். தமிழ்ல என் திறமைக்கு சவாலான கேரக்டர் கிடைக்கிறதுக்காக.... ஐ யம் வெயிட்டிங்!''

துளசி : 'ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் மனீஷாவின் அம்மாவாக பதறிப் பதறி நம்மைப் பதறவைத்த துளசி ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்.
''ஹைதராபாத்தில் செட்டில் ஆனாலும், நான் சென்னைக்காரிதான். எனக்கு 47 வயசு. நான் சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சு 47 வருஷமாச்சு! என் அம்மா நடிகை சாவித்ரியோட உயிர் தோழி. மூணு மாசக் குழந்தையா ஒரு படத்தில் என்னை நடிக்க வெச்சாங்க. தொடர்ந்து நான் குழந்தை

நட்சத்திரமா நடிச்ச படங்கள் வெற்றியடையவும், சென்ட்டிமென்ட்டா என்னைத் தேடிப் பிடிச்சு நடிக்க வெச்சாங்க. அப்போ தமிழ்ல சின்ன வயசு ஜெய்சங்கரா நிறையப் படங்களில் நடிச்சிருக்கேன். 'சங்கராபரணம்’ படத்தில் வர்ற அந்தக் குழந்தை நான்தான். 'சகலகலா வல்லவ’னில் கமலுக்குத் தங்கச்சியாவும், 'நல்லவனுக்கு நல்லவ’னில் ரஜினிக்கு மகளாவும் நடிச்சேன். சசிகுமார் எனக்குக் கூடப் பிறக்காத தம்பி மாதிரி. அவரோட ஈசன், சுந்தரபாண்டியன் படங்கள்ல என்னை நடிக்க வெச்சார். அவர் சொல்லித்தான் சுசீந்திரன் தம்பி என்னை 'ஆதலால் காதல் செய்வீர்’ படத்துல நடிக்க வெச்சார். மணிரத்னத்துக்கு என் குரல் ரொம்பப் பிடிக்கும். அதனால அவர் இயக்கும் படங்களில் ஐஸ்வர்யா ராய்க்கு என்னைத்தான் டப்பிங் பேச வைப்பார். தமிழ் சினிமாவுல இப்பத்தான் என்னைக் கவனிச்சிருக்காங்க. இனிமே இங்கேயும் பரபரனு நடிக்கணும்!''