தமன்னா கையிலும் அருவா!
''பாய்ஞ்சு அடிச்சது 'சிங்கம்’. அடுத்து பதுங்கி பாயப் போகுது 'வேங்கை’!'' பஞ்ச் சொல்லி வரவேற்கிறார்
''உங்க கதைகள் எப்பவும் சொல்லிவெச்ச மாதிரிதான் இருக்கு. ஆனாலும், சொல்லி அடிக்கிறீங்களே... எப்படி?''
''நான் தெரிஞ்சுக்கிட்டது, புரிஞ்சுக்கிட்டது எல்லாம் மக்கள் மனசு மட்டும்தான். நம்மகிட்ட புழங்குகிற நம்பிக்கைகள், பழக்கவழக்கம், கோபதாபம், வஞ்சகம், பகை, துரோகம், காதல் இதைத்தான் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக்கிறேன். இதோ இப்போ 'வேங்கை’யை எடுத்துக்குங்க. கதை இப்படித்தான் போகும். கோபக்காரன் அருவா எடுத்தா தப்பு... காவல்காரன் எடுத்தா தப்பு கிடையாது. அவ்வளவுதான்!''

''மறுபடியும் கிராமமா?''
''ஆமாம். என்னோட 10 படங்களுக்கும் நான் கேமராவைத் தூக்கிட்டு ஓடுற இடம் காரைக்குடி. அந்த ஊரையே திருநெல்வேலி, தூத்துக்குடின்னு பேர் மாத்திடுவேன். இப்போ எனக்கு அந்த ஊர் சொந்த ஊர் மாதிரி ஆகிடுச்சு. ஒரு கல்யாணம் காட்சி, புள்ளை பொறப்பு, நல்லது கெட்டதுக்குன்னு அவங்க பண்ற விசேஷங்கள் அவ்வளவு நல்லாஇருக்கு. அப்படியே அந்த ஊர்க்காரர் மாதிரி தனுஷ§ம் அமைஞ்சிட்டாரு. முதல் தடவை தனுஷ் என் படத்தில் நடிக்கிறார். அவரை எனக்கு முன்னாடியே ரொம்பப் பிடிக்கும். நடிப்பில் குற்றம் குறை சொல்ல முடியாத பையன். காதல், கீதல்னு அவங்க அண்ணன் படத்தில் நடிச்சுட்டு இருந்தவருக்கு ஏத்த மாதிரி நமக்கு கதை பண்ண வராதேன்னு பயந்தேன். அப்புறம் 'பொல்லாதவன்’, 'படிக்காதவன்’ பார்த்தேன். சரியான வளர்ச்சி. எனக்கு அவரைப் பயன்படுத்தணும்னு ஆசை வந்திருச்சு. சரியா வந்து சிக்கிட் டாரு. அள்ளி அணைச்சுக்கிட் டேன். இதோ ஊருக்குக் கிளப்பிக் கூட்டிட்டுப் போறேன். 'ஒரு மாசத்துக்குச் சேர்த்து பிள்ளை குட்டியைக் கொஞ்சிட்டு வந்திடு தம்பி’ன்னு சொல்லிட்டேன்!''

''ஆச்சர்யமா 'சிங்கம்’ படத்தில் அனுஷ்காவுக்கும் நல்ல ரோல்... இதில் தமன்னாவுக்கும் அவ்வளவு ஸ்பேஸ் இருக்கா?''
''இதுவரை எந்த நடிகைக்கும் நான் கதை சொல்றது இல்லை. என் அசோசியேட்டை அனுப்பிடுவேன். ஆனா, நானே தமன்னாவை மூணு மணி நேரம் உட்காரவெச்சு முழுக் கதையும் சொன்னேன். பல்லி, பூரான் பார்த்தே பயப்படுற பொண்ணு, எப்படி புலியா மாறி அருவா தூக்குறான்னு அவங்க உணர்ற மாதிரி சொன்னா தானே நல்லா இருக்கும். எனக்கு எந்த ஹீரோயினும் ஆக்ஷனுக்குள்ளே வந்திடணும். இல்லாட்டி, ஹீரோயின் படத்துக்கு அவசியம் இல்லாத அயிட்டம் மாதிரி ஆயிடும். மும்பைப் பொண்ணாவே இருந்தாலும், புரிஞ்சுக்குது. நடிக்க வெச்சிடுவோம்!''
''சூர்யா, விக்ரம், சிம்பு, விஷால், பரத்னு தமிழின் முக்கிய நடிகர்கள் அத்தனை பேரையும் இயக்கி இருக்கீங்க.. வித்தியாசம் சொல்லுங்க?''

''சூர்யாவோட டைமிங் அவ்வளவு நல்லா இருக்கும். எவ்வளவு வேண்டுமானாலும் வேலை வாங்கலாம். முகத்தில் அசதி தெரியவே தெரியாது. விக்ரமை நாம எப்படியும் பயன்படுத்தலாம். ஷூட்டிங் நேரத்துக்கு முன்னாடியே டயலாக் டெலிவரி, எக்ஸ்பிரஷன்ஸ்னு எல்லாத் தையும் ரிகர்சல் பண்ணி வெச்சிருப் பார். அவரை ஹேண்டில் பண்ற அள வுக்கு இயக்குநர்கள் தங்களைத் தயார்படுத்திக்கணும். சிம்பு தம்பியை என் படத்துக்குகாலையில 4 மணிக்கு வாங்கன்னாகூட வருவார். அவரை அப்படி வரவைக்கிறது கஷ்டம்னு சொல்வாங்க. ஆனா, எனக்கு அப்படிஎல்லாம் தோணலை. அவரோட ஸ்டைல் எல்லாமே குறைச்சு, நல்ல பையனாக் காட்டினேன். விஷால்தான் என்னைஏமாத்திட்டார். 'தாமிரபரணி’ பண்ணும்போது ஆரம்பத்தில் 'சரியான செலெக்ஷன்’தானான்னு பயந்தேன். ஆனா, அதை அடிச்சுக் காலி பண்ணிப் பின்னிட் டார் மனுஷன். 'காதல்’ பெர்ஃபார்மன்ஸைக் காட்டிலும், இன்னும் ஏகமான திறமைகள் வெச்சுட்டு இருக்கிறவர் பரத். ஆனா, அவர் கூட நான் பண்ண படம் சரியா போகலை. எங்கே தப்பு பண்ணினேன்னு எனக்கே தெரியலை!''


''ஏன் விஜய், அஜீத் மட்டும் உங்ககிட்ட தப்பி இருக்காங்க?''
''அஜீத் சாரும் நானும் சும்மா பேசி இருக்கோம். விஜய் எப்பவோ நம்ம லைனில் வந்திருக்க வேண்டியது. இப்ப அடுத்த படம் சூர்யா கூட பண்றேன். அதுக்கு அடுத்த படம் கண்டிப்பா, விஜய்க்குத் தான்!''