என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

சினிமா விமர்சனம் : கோ

விகடன் விமர்சனக் குழு

##~##

மிழகத்தை ஆளும் 'கோ’ (அரசன்) யார் என்பதை ஒரு பத்திரிகை புகைப்படக்காரர் தீர்மானித்தால்... என்ன ஆகும் என்பதே 'கோ’!

 ஒரு தேர்தல், எதிரும் புதிருமான இரண்டு ஊழல் தலைவர்கள், 'மாற்றம் வேண்டும்’ என்கிற இளைஞர் இயக்கம் என்கிற மூன்று புள்ளிகளை வைத்து ஆட்டம் நடக்கிறது. அரசியல்வாதிகள் பிரகாஷ்ராஜ், கோட்டா சீனிவாசராவ் இருவரின் 'கறுப்பு’ப் பக்கங்களை வெளிச்சத் துக்குக் கொண்டுவருகிறார் 'தின அஞ்சல்’ புகைப்படக்காரர் ஜீவா. அஜ்மலின்'சிறகு கள் இளைஞர் இயக்கத்’தின் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிக்கிறது.'நல்லவர் கள்’ இமேஜும் அனுதாப அலையும் அஜ்மலை தமிழக முதல்வர் நாற்காலியில் கரை சேர்க்கிறது. பிரசார மேடையில் குண்டு வைத்தது யார்? ஒரு பொறியில் தேடத் துவங்குகிறார் ஜீவா. அங்கே காத்திருக்கிறது ட்விஸ்ட்!

சினிமா விமர்சனம் : கோ

துறுதுறு, சுறுசுறு போட்டோ ஜர்னலிஸ்ட்டின் விறுவிறு பணிச் சூழல், அரசியல்வாதிகளின் திரைமறைவு ரகசியங்கள், பத்திரிகை அலுவலக ஈகோ, அரசியலுக்கு வரும் இளை ஞர்கள் சந்திக்கும் பிரச்னைகள், தேர்தல் தில்லாலங்கடிகள் என சுபாவின் பரபர திரைக்கதையில் கமர்ஷியல் 'க்ளிக்’கி இருக்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த். ஓட்டுக்குத் துட்டு, இலவச மேளா வாக்குறுதி, பலவீன எதிர்க் கட்சி, 85 சதவிகித வாக்குப் பதிவு(!) என ஏகப்பட்ட தேர்தல் டாபிக்கல் சுவாரஸ்யங்கள்!    

பரபர போட்டோ ஜர்னலிஸ்ட்டாக ஜீவா. பளீர் தருணங்களை மிஸ் செய்யாத லாகவம், எதிராளி எகிறும்போது சாதுவாகக் காரியம் சாதிக்கும் நேக்கு, உயிருக்கு ஆபத்தான சமயத்திலும் பத்திரிகை தர்மம் காப்பது எனப் பக்குவமான பாடி லாங்குவேஜ்! கார்த்திகா... எவ்ளோ பெரிய கண்கள். விழிகளின் படபடப்பிலே 'எக்ஸ்பிரஷன்’களைச் சமாளித்துவிடுகிறார். உங்ககிட்ட இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் மேடம்?  

செம ஹேண்ட்சம் அஜ்மல் சளைக்காத போராளியாகவும், எந்தச் சூழ்நிலையையும் தனக்குச் சாதகமாகத் திருப்பும் காரியக்காரராகவும் பிரமாதப் படுத்தி இருக்கிறார். சிற்சில காட்சிகளிலேயே வந்து போகும் பிரகாஷ்ராஜ், 'நடக்கணுமாம்... நடக்கணுமாம்ல!’ என்று பொங்கிப் பொருமும் இடத்தில் மட்டும் அப்ளாஸ் அள்ளுகிறார்.

'எனக்கு எவ்ளோ ரேட் கேட்பாங்க?’, 'இவளுக்கு எவ்ளோ ரேட்?’ என்று பியா ஜாலிக் கோழியாகக் கலகலக்கவைத்தாலும், எந்தப் பத்திரிகை அலுவல கத்திலும் இப்படி ரிப்போர்ட்டர்களைப் பார்க்க முடியாது. பிரஸ்மீட்டில் கேபரே ஆடும் லேடி ரிப்போர்ட்டர்!

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் 'என்னமோ ஏதோ’ பாடல், நிஜமாகவே 'என்னமோ ஏதோ’ செய்கிறது. ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு 'லைவ் சினிமா’ எஃபெக்ட் கொடுப்பதோடு, பாடல் காட்சிகளில் ஹீரோ - ஹீரோயின்கள் மீது பார்வை பதிக்க முடியாத அழகை அள்ளித் தெளிக்கிறது!  

சினிமா விமர்சனம் : கோ

'எப்படி... எப்படி... எப்படி?’ என லாஜிக் உதைத்தாலும், அதையே ஒரு லாஜிக்காக மாற்றும் ஃபைனல் ட்விஸ்ட் சுவாரஸ்யம். ஆனால், ஒற்றைக் குண்டு வெடிப்புச் சம்பவம் மூலம், முதல் தேர்தலிலேயே அஜ்மலின் இயக்கம் முதல்வர் நாற்காலியை எட்டிப் பிடிக்க முடியுமா? அத்தனை பரபர சென்சேஷன் ஆன பிறகும், அதே சிறுமியைத் திருமணம் செய்வாரா கோட்டா? ஒரே ஒரு செய்தித் தாளின் ஆதரவுடன் ஆட்சியையே பிடிக்க முடியுமா...தொக்கி நிற்கின்றன கேள்விகள்... கேள்விகள்?!

நக்சல் இயக்கம் என்றால் என்னஎன்றே தெரியாமல், இன்னும் எத்தனை படங்கள்தான் எடுப்பார்களோ?

தியேட்டரில் இருக்கும் வரை யோசிக்காமல் ரசிக்கவைக்கிறான் ஜாலிக்'கோ’!