Published:Updated:

சினிமா விமர்சனம் : மந்திரப்புன்னகை

சினிமா விமர்சனம் : மந்திரப்புன்னகை

ரே நேரத்தில் நிகழ் காலத்திலும், கற்பனை உலகிலும் வாழ்பவனின் 'மந்திரப் புன்னகை’!

 திறமையான ஆர்க்கிடெக்ட் ஆன கரு.பழனியப்பனுக்கு (அறிமுகம்) புகை, மது, மாது இல்லாமல் எந்த இரவும் விடியாது...

முடியாது. தனது அத்தனை தவறுகளையும் பகிரங்கமாக, நேர்மையாக ஒப்புக்கொள்ளும் பழனியப்பன் மீது காதல்கொள்கிறார் மீனாட்சி. 'இவ்வளவு கெட்டவனானஉன்னை ஏன் அவ காதலிக்கணும்? அவளும் ஏதோ தப்பு செய்றா!’ என்று எச்சரிக்கிறார் பழனியப் பனின் அப்பா. அதற்கேற்ப மீனாட்சியை வேறு ஒரு நபரோடு படுக்கையில் பார்க்கிறார் பழனி. கோபத்தில் மீனாட்சியைக் கொலை செய்துவிட்டு, போலீஸிடம் சரண் அடை கிறார். போலீஸ் விசாரிக்கத் தொடங்க, உயிரோடு வந்து நிற்கிறார் மீனாட்சி. பகீர் ட்விஸ்ட்தான் படம்!

மெதுவாக நகரும் கதையில், திகீர் திகீரெனத் தீப்பிடிக்கவைக்கும் திருப்பங்கள் படத்தின் பலம். ஆனால், தொடர்ந்து தடதடக்க வேண்டிய திரைக்கதை, பின் பாதியில் அடங்கி ஒடுங்கிவிடுவது... பலவீனம்!

சினிமா விமர்சனம் : மந்திரப்புன்னகை

'பட்டிக்காட்டு முரட்டு முட்டாள் ஹீரோ’க்கள் மத்தியில் சுயநலமிக்க, மருந்துக்குக்கூடப் பாச நேசம் காட்டாத பக்கா நகரத்து ஹீரோ கேரக்டரை வடிவமைத்து நடித்தும் இருக்கிறார் இயக்குநர் கரு.பழனியப்பன். 'இருக்குற இடத்துல இருந்தபடியே பேசுறதுக்குத்தான் செல்போன். ஆனா, எல்லோரும்அலைஞ்சு கிட்டே பேசுறாங்க’, 'அப்பாக்கள் பிள்ளை களைத் தோளில் தூக்கிவெச்சு வளர்க்குறீங்க. அதனாலதான் எங்களுக்குத் தெரிஞ்சது உங்களுக்குத் தெரிய மாட்டேங்குது’ போன்ற வசனங்களில் இயக்குநர் பளிச்சிடுகிறார். ஆனால், நடிகர்?! காதல், மோதல், கோபம், வருத்தம் என எதற்கும் பழனியப்பனிடம் ஒரே மாதிரி முகபாவம்தான். நடிப்புக்கு இன்னும் நிறையவே டியூஷன் எடுத்திருக்கலாம்!

தன்னைக் கொல்லத் துரத்தும் பழனியப்பனைப் பார்த்து மிரள்வதும், அனுதாபம்கொண்டு காதலில் உருகுவதுமாக மீனாட்சி ஜொலிக்கிறார். சீரியஸாகவே பயணிக்கும் கதையில், சந்தானம் மட்டுமே ஃபர்ஸ்ட் ஹாஃப் பலம்.

கரு.பழனியப்பனின் நிலைமைக்குக் காரணமாக விரியும் ஃப்ளாஷ்பேக்.... ரொம்பவே  சுரீர். சிறு வயது அப்பாவின் உருவம் இம்மியும் பிசகாமல் இப்போதும் அப்படியே இருப்பது, அப்பாவிடம் 'கொடுத்த’ பணம் இடம் மாறாமல் அங்கேயே இருப்பது என சின்னச் சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்தி இருக்கும் இயக்குநர், பின்பாதி திரைக்கதை முழுக்கவே  அந்தக்  கவனத்தைப்  படரவிட்டு இருக்கலாம். அதிலும் அவ்வளவு சிக்கலுக்கும் தீர்வு காணும் அந்த க்ளைமாக்ஸ்... அடப் போங்கப்பா! ஒரு படத்தின் அத்தனை கதாபாத்திரங்களுமா இன்டெலிஜென்ட் ஆக இருப்பார்கள்? எல்லோருமே எங்கேயும் எப்போதும் கருத்துக் குத்து மேளாவே நடத்து கிறார்கள்.

சினிமா விமர்சனம் : மந்திரப்புன்னகை

கொலை வெறி நாயகன், காதல் மயக்க நாயகி என்று சஸ்பென்ஸ்வைக்கும் இடை வேளை, அதற்குப் பின் எவ்வளவு சுவாரஸ்யமாக இருந்திருக்க வேண்டும்? அவ்வளவு அவமானங் களுக்குப் பிறகும் மீனாட்சி ஏன் பழனியப்பனை விடாது துரத்த வேண்டும்? ம்ஹூம்!

ரணகளமான தளத்தில் காதல் என்பது தமிழ் சினிமாவுக்குப் புதுசுதான். ஆனால், அதை மயில் இறகால் எழுதியதுதான் பிரச்னை!

- விகடன் விமர்சனக் குழு