சினிமா விமர்சனம் : மகிழ்ச்சி
சாதிக் கட்டுப்பாட்டாலும் ஆணாதிக்கத்தாலும் வாழ்வு இழந்த அக்காவுக்கு, தம்பி புதுப்பிக்கும் புது
கௌதமனும் கார்த்திகாவும் பிரியத்துக்குரிய அக்கா-தம்பி. ஏகத்துக்கும்துன்புறுத்தி, 'மலடி’ என்று பட்டம் சுமத்தி, கார்த்திகா வைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார் அவருடைய கணவன் சம்பத். பிரச்னைகளின் தீவிரத்தில், தன் காதலி அஞ்சலியைப் பிரி கிறார் கௌதமன். இடையில் கார்த்திகாவின் உடலில் எந்தக் குறையும் இல்லை என்கிறது மருத்துவப் பரிசோதனை முடிவு. தன் தலித் நண்பன் சீமானுக்கு அக்காவைத் திருமணம் செய்துவைக்க முடிவெடுக்கிறார் கௌதமன். அந்தத் திருமணம் நிகழ்வதற்குள்ளான சிக்கல்கள்தான் மீதிப் படம்!
நீல.பத்மநாபனின் 'தலைமுறைகள்’ நாவலை சினிமாவாக்கி இருக்கும் இயக்குநர் கௌதமனின் ஆர்வமும், சாதி அடக்குமுறைக்கு எதிரான அவரது நோக்கமும் பாராட்டத்தக்க விஷயம்!

ஆக்ரோஷமான இளைஞனாகவும், பாசமான தம்பியாகவும் முதல் படத்திலேயே நடிகனாகத் தேர்ச்சி அடைகிறார் கௌதமன். சண்டைக் காட்சிகளில் விஜயகாந்த்தை நினைவுபடுத்துகிறார்! கொஞ்சம் 'தாராள மய’க் கொள்கை 'காண்பிக்கிறார்’ அஞ்சலி. வேறு ஒருவரைத் திருமணம் செய்து போகும்போது காரில் கண் கலங்குவதும், குழந்தையோடு வந்து கௌதமனிடம் சத்தியம் வாங்கும் காட்சிகளிலும் நெகிழ்ச்சி அஞ்சலி.
வழக்கம்போல் ஆவேச சீமான்! 'உன் அக்காவை எனக்குத் திருமணம் செய்துவைப்பியா?’ என்று கௌதமனிடம் தயங்கித் தயங்கிக் கேட்கும் இடம்... பூகம்பத்துக்குள் ஒரு பூ! 'நம்ம சாதிங்கிறதால செவந்த பெருமாள், அக்காவைவெச்சு வாழ்ந்தானா?’ என்ற வசனமும், அதை அடுத்து வரும் காட்சிகளும் கூர்மையான சமூக சித்திரிப்பு. தலைமை ஆசிரியராக வரும் பிரகாஷ்ராஜ் எதற்கு வந்து போகிறார் என்று தெரியவில்லை!

கன்னியாகுமரியைக் களமாகக்கொண்ட படத் தில், ஒரு சிலரைத் தவிர, எவருமே வட்டார மொழி குறித்து அலட்டிக்கொள்ளவே இல்லை. கதை நடக்கும் காலமும் குழப்புகிறது. எம்.80, ஃபிரிஜ், ஸ்டெபிலைஸர் என நவீனமாக இருக் கும் ஊரில், மருத்துவப் பரிசோதனையைப்பற்றி யாருக்குமே தெரியவில்லை. கௌதமன் குடும்ப உறுப்பினர்கள் பெயரை நிரப்ப இரண்டு, மூன்று ரேஷன் கார்டுகள் தேவைப்படும். ஆனால், அவர் கள் யாரும் எந்த வேலைக்கும் செல்லாமல் சும்மாவே உட்கார்ந்து சந்தோஷப்படுகிறார்கள், அல்லது வருத்தம் வடிக்கிறார்கள்!
காட்சிகளுக்கு ஏற்ப நெகிழ்ந்து செல்கிறது வித்யாசாகரின் பின்னணி இசை. செழியனின் கேமரா தென்னை, வயல்வெளி நிறைந்த குமரியின் அழகைக் குத்தகைக்கு எடுத்துக் காட்டுகிறது.
எதிர்பார்க்கக்கூடிய க்ளைமாக்ஸ், சீரியல் வாடை இரண்டும் சேர்ந்து மகிழ்ச்சியைக் குறைத்துவிடுகிறது!
- விகடன் விமர்சனக் குழு