Published:Updated:

சினிமா விமர்சனம் : நகரம் மறுபக்கம்

சினிமா விமர்சனம் : நகரம் மறுபக்கம்

ஹிம்சைப் பாதை திரும்பிய முன்னாள் தாதாவை இம்சிக்கும்... 'நகரம்’!

 மனம் திருந்தி வாழும் தாதாவான சுந்தர்.சி-க்கும் அனுயாவுக்கும் காதல். சுந்தர்.சி-யின் போலீஸ் நண்பன் போஸ் வெங்கட்,

அவரைப் பகடைக் காயாகப் பயன்படுத்திக் கடத்தல் வேலைகளில் ஈடுபடச் செய்கிறார். சிலந்தி வலை என்று தெரியா மலேயே அதில் சிக்கிக்கொள்ளும் சுந்தர்.சி, ஒரு கட்டத்தில் மனம் தெளிந்து நகரத்தைவிட்டு வெளியேறி, அனுயாவோடு அமைதியான வாழ்க்கை வாழ முடிவு எடுக்கிறார். 'நகரம்’அதை அனுமதித்ததா என்பது க்ளைமாக்ஸ்!

சில வருடங்களுக்கு முன் தானே நடித்த 'தலை நகரம்’ படத்தின் ரீ-மிக்ஸை, நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இயக்கி இருக்கிறார் 'நடிகர்’ சுந்தர்.சி. மனம் திருந்திய தாதா, வடிவேலு காமெடி, க்ளைமாக்ஸ் பில்ட்-அப்கள் என்று இரண்டு 'நகரங்களுக்கும்’ கிட்டத்தட்ட ஒரே பின்கோட்!

சினிமா விமர்சனம் : நகரம் மறுபக்கம்

படத்தில் சுந்தர்.சி பஞ்ச் டயலாக் பேசவில்லை. பறந்து பறந்து அடிக்கவில்லை. அதிகமான சண்டைக் காட்சிகளும் இல்லை. ஆனாலும், விறுவிறுப்பான துரத்தல்களும் அடுக்கடுக்கான முடிச்சுக்களும் கதையின் வேகத்துக்கு கீ கொடுக்கின்றன. சுந்தர்.சி இப்படித்தான் நடிப்பார் என்று பழகிவிட்டதாலோ என்னவோ, அவருடைய நடிப்பைப்பற்றி எதிர்பார்ப்பும் இல்லை... ஏமாற்றமும் இல்லை. ஸ்டைல் பாண்டியாக வடிவேலு வரும்போது எல்லாம் ஆரவார அதிர்வு. அரை நிர்வாணமாகச் சென்று அனுயாவைக் கவர் பண்ண அடிக்கும் லூட்டி, பெண் வேடம்இட்டு நளினியிடம் மாட்டிக்கொள்ளும் அவஸ்தை, நூறாவது திருட்டு அலப்பறை எனக் காணும் இடம் எல்லாம் கலகலக்க வைக்கிறார்.

நடிப்பு, கவர்ச்சி என இரட்டைக் குதிரைச் சவாரி அனுயாவுக்கு. வெற்றிகர மாகவே சமாளிக்கிறார். டூயட்களில் ஏராளத் தாராளம் காட்டிக் கலங்கடிப்பவர், சென்டி மென்ட் காட்சிகளில் கலங்கவும் வைக்கிறார்.

அனுயாவின் அம்மாவை 'வைத்திருக்கும்’ அண்ணாச்சி, சுந்தர்.சி-யைப் பார்த்து பதுங்கிப் பின் பாயும் ரௌடி காசி, கடத்தல் தாதா பாண்டிச்சேரி பாய், கூடவே இருந்துவிட்டு 'தப்பா எடுத்துக் காதே... மன்னிச்சுக்கோப்பா’ என்று கழுத்தறுக்கும் நண்பன் என விதவிதப் பாத்திரங்களைப் படைத்து, நிழல் உலக சுவாரஸ்யங்கள் மீது வெளிச்சமிட்டு இருக்கிறார் இயக்குநர்.

என்னதான் அத்தனை நெருக்கமான நண்பனாக இருந்தாலும் போஸ் வெங்கட்டை அநியாயத்துக்கு நம்புகிறாரோ சுந்தர்.சி என்று நமக்கு ஏற்படும் சந்தேகம்கூட 'முன்னாள் தாதா’ சுந்தர்.சி-க்கு ஏற்படாமல் போனது சோகமே. கடத்தல்காரர்கள் முஸ்லிம் பாய் ஆகத்தான் இருப்பார்கள் என்கிற பழைய ஊறுகாய் இதிலும் உண்டு.

சினிமா விமர்சனம் : நகரம் மறுபக்கம்

தமனின் இசை, நகரத்துக்கு வெளியே நிற்கிறது. துறைமுகம், பாண்டிச்சேரி, முஸ்லிம் வீட்டுக் கல்யாணம் என்று களங்க ளுக்கு ஏற்பக் கச்சிதமாக நகர்கிறது      பி.செல்லத் துரையின் கேமரா.

லாஜிக் மீறல்கள் உண்டு. இருந்தாலும், நகைச்சுவையும் திருப்பம் நிறைந்த ஆக்ஷனும் நகருக்குள் ஒரு உலா போகிறது!

- விகடன் விமர்சனக் குழு