வில்லன் மார்க்!
'ஒரு சில எதிரிகளை உருவாக்கிக் கொள்ளாமல் 500 மில்லியன் நண்பர்களை நீங்கள் சம்பாதிக்க முடியாது!’- 'The Social
மற்றவர்களின் கிரியேட்டிவ் ஐடியாக்களையும், நண்பனின் பணத்தையும், தனது கிரிமினல் மூளையையும் மூலதனமாகக் கொண்டு ஃபேஸ்புக் துவக்கி, உலகளாவிய புகழையும்வங்கிக் கணக்கு கொள்ளா பில்லியன் டாலர்களையும் தனதாக்கிக் கொண்டார் மார்க் ஸக்கர் பெர்க் என்பது இன்று வரை அவர் மீது உள்ள குற்றச்சாட்டு. அந்த குற்றச்சாட்டு எந்த அளவுக்கு உண்மை என்பதைக் காட்சிக்கு காட்சி விவரிக்கிறது 'The Social Network’.

கிட்டத்தட்ட நிஜ வாழ்க்கைக் கதை. படத்தில் ஒரு ஆக்ஷன் காட்சி கிடையாது, படுக்கைக் கசங்கல்கள் கிடையாது. ஆனாலும், அ முதல் ஃ வரை விறுவிறுப்பாகப் பரபரக்கிறதுகதை.

ஒரு காட்சியில் ஃபேஸ்புக்கின் C.F.O ஆக இருக்கும் நபரின் காதலி கோபத்தோடு வருகிறாள். 'நீ ஏன் இன்னும் ஃபேஸ்புக் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸில் 'single’ என்றே வைத்திருக்கிறாய்?’ என்று கேட்கிறாள். 'என்னால் அதை மாற்ற முடியவில்லை!’ என்று சமாளிக்கப் பார்க்கிறார். 'ஓ... ஃபேஸ்புக்கின் C.F.O-வுக்கே அந்த உரிமை இல்லையா?’ என்று மொத்துகிறாள் காதலி. உலகம் முழுக்க நட்பு வட்டம் படைத்த நாயகன், இறுதியில் தனது முன்னாள் காதலிக்கும் ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் அனுப்பிக் காத்திருப்பதாக முடியும் இடத்தில் சின்ன நெகிழ்ச்சி.
'படம் முழுக்க டிராமா. ஆனால், எனது ஆரம்ப நாட்களை நினைவுறுத்தியது என்பதை மறுக்க முடியாது!’ என்பது படத்தைப்பற்றி மார்க் ஸக்கர்பெர்க்கின் கமென்ட். 'படத்தில் கொஞ்சம்தான் உண்மை. ஆனாலும், மார்க் ஸக்கர்பெர்க்கை அநியாயத்துக்கு வில்லனாகச் சித்திரித்து இருக்கிறார்கள்!’ என்பது மட்டுமே படத்துக்கு எதிரான விமர்சனம். ஆனால், ஃபேஸ்புக்கின் ஒவ்வொரு அப்ளிகேஷனைத் திறக்கும்போதும், அது நமது பிரைவஸி தகவல்களைப் பறிக்கும் போக்கைக் கவனிக்கும்போது, அப்படித் தோன்றவில்லை!