எஸ்.கலீல்ராஜா
தமிழ் சினிமாவின் ஹிட் ஸ்டார்கள் இருவர் இணைந்து கலக்க இருக்கிறார்கள். இந்தச் செய்திக்குள் போவதற்கு முன், ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்...
விகடனில் இரட்டை எழுத்தாளர்கள் சுபா எழுதிய மின்னல் வேக எக்ஸ்பிரஸ் தொடர்கதை 'யட்சன்’. வாராவாரம் இரண்டே பக்கங்கள்தான். ஆனால், ஒவ்வோர் அத்தியாயமும் அனல் கிளப்பும்.
சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் கனவுடன் சென்னைக்கு வருவான் ஒரு நாயகன். ஸ்கெட்ச் போட்டு ஓர் ஆளைத் தூக்குவதற்காக சென்னைக்கு வருவான் இன்னொருவன். ஒருவன் அப்பாவி அழகன்; இன்னொருவன் கில்லாடி முரடன். திடீர் திருப்பத்தில் சந்தர்ப்பவசத்தால் இருவரும் இடம் மாற, அடியாள் ஹீரோ, சினிமா கேமரா முன் நடித்துக்கொண்டிருப்பான். நடிப்பு தாகத்தோடு வந்தவன் ரத்த வேட்கையுடன் கொலைத் தொழில் புரிந்துகொண்டிருப்பான்.
டபுள் ஹீரோ ஆக்ஷன் சினிமாவுக்குரிய ட்விஸ்ட் திருப்பங்களும் பரபர சம்பவங்களுமாகப் பயணிக்கும் 'யட்சன்’ தொடர்கதை, விகடன் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர். அந்த 'யட்சன்’ கதையே இப்போது 'இருவன்’ என்ற பெயரில் மெகா பட்ஜெட் சினிமா ஆகிறது. அதில் நடிக்க இருக்கும் இருவர்... தமிழ் சினிமாவின் டிரெண்டிங் ஸ்டார்களான விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன்!

'யட்சன்’ தொடர்கதையைப் படிக்கும்போதே இயக்குநர் கே.வி.ஆனந்த் இதை சினிமா ஆக்கலாம் என்று யோசித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் சுபாவிடம் பேச, 'ஆர்யா-ஜீவா செட் ஆவாங்களே!’ என்று சொல்லியிருக்கிறார்கள் சுபா. அவர்களிடம் கேட்டபோது, 'கதை எங்களுக்கு ஓ.கே. ஆனா, எங்க ரெண்டு பேரோட கால்ஷீட் சேர்ந்து கிடைக்கிறது சிரமமாச்சே. அது கிடைச்சிருந்தா, நாங்க ஜனநாதன் இயக்கும் 'புறம்போக்கு’ படத்துலயே சேர்ந்து நடிச்சிருப்போமே!’ என்று சொல்லியிருக்கிறார்கள். அப்போதைக்கு மேலும் சில ஹீரோக்களிடம் பேசியிருக்கிறார் கே.வி.ஆனந்த். ஆனால், எதுவும் உடனடியாக வேலைக்கு ஆகவில்லை. அதனால், தனுஷை வைத்து 'அனேகன்’ படத்தை இயக்கச் சென்றுவிட்டார் கே.வி.ஆனந்த்.
'ஐ’ பட திரைக்கதை வேலைகளின்போது, இயக்குநர் ஷங்கரிடம் 'யட்சன் சினிமா’ முயற்சி குறித்து சும்மா பேசியிருக்கிறார்கள் எழுத்தா ளர்கள் சுபா. 'நான் ஆரம்பத்துல சில வாரம் அந்தக் கதையைப் படிச்சேன். ஆனா, அப்புறம் 'ஐ’ வேலை ஆளை அமுக்கிருச்சு. முதல் சில வாரங்கள்லயே அதுல ஒரு செம சினிமா இருக்குனு எனக்குத் தோணுச்சு. இந்தக் கதைக்கு சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ரெண்டு பேரும் நடிச்சா நல்லா இருக்கும். அப்படின்னா என் புரொடக்ஷன்லயேகூட அந்தப் படத்தைப் பண்ணலாம்!’ என்று சொல்லியிருக்கிறார் ஷங்கர்.
தகவல் உடனே சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இருவருக்கும் பாஸ் செய்யப்பட, அவர்கள் முதலில் நம்பவில்லை. பிறகு அழுத்தமாகச் சொல்லப்படவும், 'எஸ் பிக்சர்ஸ் படம் என்றால் எங்களுக்கும் ஓ.கே.!’ என்று இருவரும் ஓப்பனிங் சிக்னல் கொடுத்து விட்டார்கள். இது ஷங்கருக்குத் தெரிவிக்கப்பட, 'சூப்பர்... ஷூட்டிங் டேட்ஸ் கன்ஃபார்ம் பண்ணிடுங்க’ என்று சொல்லிவிட்டு 'ஐ’ வேலைகளில் மூழ்கிவிட்டார் ஷங்கர். படத்தின் இயக்குநர் அநேகமாக 'சூது கவ்வும்’ நலன் குமரசாமியாக இருக்கலாம்.
வேறு யாரும் இதுகுறித்து மேலும் தகவல் சொல்லாத நிலையில், சுபாவிடம் பேசினோம். ''ஹீரோக்கள், இயக்குநர் பத்திலாம் நாங்க சொல்ல மாட்டோம். ஆனா, யெஸ்... உண்மைதான். 'யட்சன்’ சினிமா ஆகுது. தமிழ் சினிமாவில் இப்போதான் நாவல்களைப் படமா எடுக்கும் கலாசாரம் வந்திருக்கு. மக்களுக்கு, 'விகடன்ல நாம படிச்ச கதைதானே’னு நினைப்பு வந்திடக் கூடாது. அதுக்காக மூலக்கதையை மட்டும் வெச்சிக்கிட்டு சம்பவங்களைப் பரபரப்பா, இன்னும் ஸ்பீடா மாத்திட்டு இருக்கோம். படத்துல ரெண்டு கேரக்டருமே மேன்லியா இருப்பாங்க. அதுக்காக ஹீரோக்களைக் கொஞ்சம் உடம்பை டோன் பண்ணச் சொல்லியிருக்கோம். படத்துல மெயின் வில்லன் கேரக்டர் சினிமா துறையைச் சேராத பிரபலமான ஒரு வி.ஐ.பி. அவர் பெயர்... சஸ்பென்ஸ்!'' - சிரிக்கிறார்கள் இருவரும்.