கி.கார்த்திகேயன்
##~## |
'Rise of the Planet of the Apes’ படத்தின் கிளைமேக்ஸில் 'NO’ என்று உறுமுகிறது அந்த சிம்பன்சி. மனிதனின் உத்தரவை மதிக்க மறுத்து, அதை வார்த்தை மூலமும் சிம்பன்சி
வெளிப்படுத்தும் காட்சியில், ஹாலிவுட் தியேட்டர்கள் ஆரவாரத்தில் அலறுகின்றன. ஆனால், சென்னையிலோ மிச்சம் இருக்கும் பாப்கார்னைக் காலி செய்தபடி மௌனமாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் பார்வையாளர்கள். காரணம், டைப்ரைட்டிங் அடிக்கும் பாம்பு முதல் ஃபுட்பால் விளையாடும் யானை வரை இராமநாராயணன் படங்களில் திறமை காட்டி, நம்மவர்களின் ரசனையை 'அடுத்த தளத்துக்கு’ உயர்த்திச் சென்றுவிட்டது!
'Rise of the Planet of the Apes’ ஹாலிவுட்டில் பட்டையைக் கிளப்பிக்கொண்டு இருக்கும் படம். மனிதனின் மருத்துவப் பரிசோதனைகளுக்கு ஆளாகும் சிம்பன்சிகள், அவனுக்கு எதிராகப் புரட்சி செய்யும் கதை.

இதற்கு முன் வெளிவந்த 'Ape’ வரிசைப் படங்களின் தொடர்ச்சிதான். ஆனால், அந்தப் படங்களில் இல்லாத ஒரு ஸ்பெஷலாக மோஷன் கேப்சர் டெக்னாலஜி மூலம் இல்லாத சிம்பன்சியை நடிக்க வைத்திருக் கிறார்கள்! 'அவதார்’ படத்தில் பயன்படுத்தப் பட்டு அதன் உச்சகட்ட நேர்த்தி வெளிப் பட்ட தொழில்நுட்பம்தான். ஆனால், வெறுமனே குரங்குச் சேட்டை மட்டும் செய்துகொண்டு இருக்காமல், மனிதனின் அத்தனை உணர்ச்சிகளையும் சீஸர் என்ற சிம்பன்சி தத்ரூபமாக வெளிப்படுத்தும் காட்சிகளில் அசத்தல் அப்ளாஸ் அள்ளு கிறது. பின்னணி விவரம் தெரியாதவர்கள் 'அந்த சிம்பன்சி எந்த ஜூவில் இருக்கிறது... பார்க்க வேண்டுமே!’ என்றுகூட ஆசைப் படுவார்கள். ஆனால், சீஸர் என்ற சிம்பன்சியே இந்த உலகில் இல்லை. ஆண்டி செர்கிஸ் என்ற நடிகரின் நடிப்பை அப்படியே சிம்பன்சிக்கு 'உடல்மொழி’ பெயர்த்திருக்கிறார்கள். இந்த ஆண்டி செர்கிஸ் கிட்டத்தட்ட ஒரு வாழும் மிருகம். 'கிங்காங்’ படத்தில் கொரில்லாவாக 'நடிப்பு கடத்தியவரும்’ இவர்தான். சும்மா இருக்கும் நேரத்தில் விதவிதமான மிருகங்கள்போல ஆடி, ஓடி தாவிக் குதித்துப் பயிற்சி எடுத்துக்கொண்டு இருப்பாராம் ஆண்டி.
பரிசோதனை விளைவுகள் காரணமாக, மனிதன் அளவுக்கு யோசித்துச் செயல்படும் சிம்பன்சிதான் படத்தின் ஹீரோ. ஒரு கட்டத்தில், மனிதன்போலவே பேசி, பரிணாமத்தின் உச்சத்தைத் தொடுகிறான் சீஸர். சிம்பன்சிகளுக்குள் ஒற்றுமையை உருவாக்கத் திட்டமிடுவது, சிம்பன்சிகளின் புரட்சிப் படையை வழிநடத்துவது, போலீஸ் படையைச் சமாளிக்க முக்கோண வியூகம் வகுப்பது, இறுதியில் 'Caesar in home’ என்று அறிவித்து காட்டுக்குள் மறைவது என ஸ்க்ரீனில் தோன்றும் சமயம் எல்லாம் சிக்சர் அடிக்கிறான் சீஸர். எதிர்காலத்தில் பார்வையாளர்கள் மட்டும் இருந்தால் போதும்போல... ஹீரோ, ஹீரோயின்கள் இல்லாமலேயே ப்ளாக்பஸ்டர் சினிமாக்களை உருவாக்கத் தொடங்கிவிட்டது ஹாலிவுட்!