என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
ஸ்பெஷல் -1
Published:Updated:

சினிமா விமர்சனம் : டூ

சினிமா விமர்சனம் : டூ

##~##

காதல் மோதல் கேம்... 'டூ’!

 கோலிவுட் கோடானுகோடி தடவை புடம் போட்ட 'குஷி’ காதல், ஈகோ மோதல் விளையாட்டுக் கதைதான். அதற்கு காமெடி ட்ரிப்ஸ் ஏற்றிய விதத்தில் கவர்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீராம் பத்மநாபன். பள்ளிப் பருவத்திலேயே கிளாஸ்மேட் நட்சத்திரா விடம் (அறிமுகம்) காதலைச் சொல்கிறார் சஞ்சய். நட்சத்திரா மறுக்க, இருவரும் பிரிகிறார்கள். பல வருடங்களுக்குப் பிறகு, இருவரும் மறுபடி சந்திக்க, அப்போது மலர்கிறது காதல். ஆனால், இருவருக்குமான குணநலன்கள், ரசனை எல்லாமே வெவ்வேறாக இருக்க, முளைத்துக் கிளம்புது ஜாலி மோதல். காதல் என்னாச்சு என்பது கிளைமேக்ஸ்!

சினிமா விமர்சனம் : டூ

பக் பகீர் திருப்பங்கள், ரத்தக் காவு கிளைமேக்ஸ்கள், தடாலடி அதிரடிகள் எதுவும் இல்லாமல், கலகலப்பாக நகர்வது தான் படத்தின் ப்ளஸ். 'பொண்ணுங்க விண்ணைத் தாண்டி இல்ல... வீட்டைத் தாண்டியே வர மாட்டாங்க.’ என்பது போன்ற ஸ்ரீராமின் இளமை தெறிக்கும் ட்விட்டர் வசனங்கள்தான் பார்த்துப் பழகிய திரைக்கதைக்கு ஆங்காங்கே ஆக்சிஜன் கொடுக்கிறது!  

நண்பர்கள் டீக்கடையிலேயே தூங்கி எழுந்து, பல் விளக்கி டீ குடிக்கும் வரை, ராத்திரி முழுக்க நட்சத்திராவிடம் சஞ்சய் செல்லில் கடலை போடுவது செம கலாட்டா. காதலியை வீட்டுக்கு அழைத்து வந்து அம்மா ஊர்வசியிடம் சஞ்சய் அறிமுகப்படுத்த, மருமகளுக்கு மாமியார் ஒவ்வொரு விஷயத்துக்கும் மார்க் போடுவதும் அத்தனையிலும் நட்சத்திரா ஃபெயில் ஆவதும் ரசனை மேளா.

ரெஜிஸ்டர் ஆபீஸில் வேலை பார்க்கும் சராசரி இளைஞன் பாத்திரத்துக்கு அளவெடுத்ததுபோலப் பொருந்துகிறார் சஞ்சய். காதலுக்காக உருகி மருகும் சமயங்களில் ஓ.கே. ஆனால், எந்த நேரமும் தாடியும் டல் லுக்குமாகத் திரிந்துகொண்டே இருக்கிறாரே... ஏம்ப்பா?

சும்மாச்சுக்கும் பாடல்களில் 'ஃபிகர்’ காட்டும் கேரக்டராக இல்லாமல், நடிப்பிலும் ஸ்கோர் பண்ணும் வாய்ப்பு நட்சத்திரா வுக்கு. காதலன் வீட்டில் மாமியாரிடம், 'இதுதான் கிச்சனா?’ எனக் கேட்கும் இடத்தில் ஈர்க்கிறார். ஆனால், ஹீரோயி னுக்கு இவ்வளவு ஓவர் மேக்கப் ஏன்?  

அம்மாவாக ஊர்வசி வழக்கம்போல் ஜாலி பட்டாசு. தனது எதிர்பார்ப்புக்குப் பொருந்தாத மருமகளைப் பார்த்து அதிர்ச்சியாகும் இடத்தில் சிரிக்கவைக்கிறார். 'நண்டு’ ஜெகன், 'லொள்ளு சபா’ ஜீவா, நட்ராஜ் மூவரும் கச்சிதமான கிச்சுகிச்சு டீம்.

சினிமா விமர்சனம் : டூ

முதலில் காதலை மறுத்த நட்சத்திரா, பிறகு சஞ்சய் மேல் காதல்கொள்வதற்கு என்ன காரணம்? காதலர்கள் எப்படியும் கிளைமேக்ஸில் இணைந்துவிடுவார்கள்  என்பது எல்லோருக்கும் தெரிந்த கிளைமேக்ஸ்தான். அதற்கான முடிச்சுகளைச் சுவாரஸ்யப்படுத்தாமல் இரண்டாம் பாதியை இழுத்தடிப்பது ஏன் சாமி? நடுவில் தேவை இல்லாத சண்டை, ஸ்பீட் பிரேக்கர் பாடல்கள் எல்லாம் ஏன் ஏன் சாமீ?  

மாறவர்மனின் கேமரா கதைக்கேற்ற மூடு கொடுக்கிறது. அபிஷேக் - லாரன்ஸ் இசையில் 'நதியே’ பாடலைத் தவிர, எதுவும் மனதில் தங்கவில்லை.

திரைக்கதையிலும் உருவாக்கத்திலும் இன்னும் உழைத்து இருந்தால் 'டூ’வுக்குப் பழம் விட்டு இருக் கலாம்!  

- விகடன் விமர்சனக் குழு