சினிமா விமர்சனம் : உயர்திரு 420
##~## |
சின்னச் சின்னத் திருட்டுகள் மூலம் ஊரை ஏமாற்றும் ஒரு 420, தன் கிரிமினல் புத்தியால் கடனில் தத்தளிக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலைக் கரை சேர்த்தானா என்பதே கதை!
திருடர்களிடமே லூட் அடிக்கும் தில்லாலங்கடி திருடன் சினேகன். ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவே வங்கிக் கடனை நம்பி இருக்கும் வசீகரனின் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ஜி.எம். ஆக வேலைக்குச் சேர்கிறார் சினேகன். ஹோட்டல் தொழிலில் முத்திரை பதிக்க ஆசைப்படும் வசீகரனுக்கு, தமிழின் முன்னணி நடிகையுடன் காதல். வங்கிக் கடனைக் கட்டச் சொல்லி வங்கி அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கும் வேளையில், காதல் திருமணம் மூலமும் சிக்கலை எதிர்கொள்கிறார் வசீகரன்.

பிரச்னைகளில் இருந்து விடுபட சினேகன் உதவுவார் என்று நினைக்கும்போது, வசீகரனைக் கொல்ல முயற்சிக் கிறார் அவர். ஏன், எதற்கு..?!
புதிய பின்னணியில் சஸ்பென்ஸ் முடிச்சுக்களை அடுக்கி, அதை ஒவ்வொன்றாக அவிழ்க்கும் விதத்தில் கவனம் கவர்கிறார் அறிமுக இயக்குநர் எஸ்.பிரேம்நாத்.
'420’ ஆகப் பாடலாசிரியர் சினேகன். 'இத்தாலி மெஷின்’ என்று ஆசை காட்டி, பேட்டை தாதாவிடமே 10 லட்சம் லபக்குவது, சரவணா ஸ்டோர் அட்ரஸ் சொல்லி, முரட்டு ரவுடியைக் குழப்புவது, மேக்னா ராஜைக் குழப்பி, சாப்பாடு பார்சல் வாங்குவதுபோன்ற தகிடுதத்தங்களின்போது ஓ.கே. ஆனால், படத்தின் எல்லா சூழலிலும் முறைத்த விழிகளும் விறைத்த நடையுமாகவே சினேகன் அலைவது ஏன்? மேக்னா ராஜ் அழகு. ஆனால், சீட்டிங் என்று தெரிந்தும் ஹீரோவை லவ்வும் வழக்கமான லூஸுப் பெண் கேரக்டருக்குள் சிக்கிச் சின்னாபின்னமாகிறார்.
இறுதி வரை கனவு, லட்சியம் என்று ஆசை ஆசையாகப் பேசிக்கொண்டே இருக்கும் வசீகரன், படம் முடியும் வரை அதற்காக உருப்படியாக ஒரு நடவடிக்கையும் எடுப் பேனா என்கிறாரே!
படத்தின் அத்தனை கேரக்டர்களும் 'பில்லா’வுக்குப் போட்டியாக விடாது கூலிங் கிளாஸ் போட்டு அடாது அலும்பு செய்கிறார்கள். அட, ரெஸ்ட் ரூமில் கண்ணாடி அணிந்திருப்பதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், தற்கொலை முயற்சியின் போது சினேகனும், அழும்போது மேக்னா ராஜும் கூலிங் கிளாஸ் அணிந்திருப்பதை... வேணாம் விடுங்க பாஸு... கண்ணைக் கட்டுது!

'நான் அடிக்கிறது தெரியாது. ஆனா, வலிக்கிறது தெரியும்.’, 'என்னை மாதிரி நிறைய பேரைப் பார்த்திருப்பே. ஆனா, என்னைப் பார்த்திருக்க மாட்டே.’, 'எது நடந்திரக் கூடாதுனு நினைக்கிறோமோ, அது நடந்துரும்னு நினைக்கிறவன்தான் ஜி.எம்.’ - பொளேர் பளேர் வசனங்கள். கார் சேஸ் காட்சிகளில் டாப் கியர் பரபரப்பு கிளப்பும் டி.சங்கரின் ஒளிப்பதிவு, திரைக்கதைக்கு எக்ஸ்ட்ரா மைலேஜ் கொடுக்கிறது.
சினேகன், வசீகரனைக் கொல்ல முயற்சிப்பதும் அந்த வீடியோ ஸ்கேண்டலும் திகீர் ட்விஸ்ட்தான். ஆனால், தொடரும் சம்பவங்களும் சவசவ நீதிமன்ற வாதங்களும்... இன்னும் பெட்டராகச் செய்திருக்கலாம். சினேகன் நல்லவரா, கெட்டவரா என்ற குழப் பம் 'உயர்திரு’வைப் பல சமயங்களில் 'திருதிரு’க்கவைக்கிறது!
- விகடன் விமர்சனக் குழு