நா.கதிர்வேலன்
##~## |
''காதல் இல்லைன்னா உலகம் இல்லை. ஆனா, காதல் மட்டுமே உலகம் இல்லை. தாகத்துக்குத் தண்ணீரோ, பசிக்குச் சாப்பாடோ எதுவுமே தேவைப் படும்போது கிடைக்கணும். அது மாதிரிதான் காதலும். அப்படி தேவைப்படுற சமயத்தில் கிடைக்கும் காதலை அனுபவிக்கும் 'யுவன் யுவதி’ பற்றிய கதை இது!'' - நிதானமாகப் பேசுகிறார் ஜி.என்.ஆர்.குமாரவேலன். முதுபெரும் இயக்குநர் ஜி.என்.ரங்க ராஜனின் மகன், 'நினைத்தாலே இனிக்கும்’ படம் மூலம் கவனம் கவர்ந்தவர், இப்போது 'யுவன் யுவதி’யைச் செதுக்கிக் கொண்டு இருக்கிறார்!

''பரத் - ரீமா கலிங்கல்... பார்க்கவே ஃப்ரெஷ்ஷா இருக்காங்க....''
''எப்பவும் கேரக்டருக்கு ஏத்த ஆர்ட்டிஸ்ட் அமையணும்னு எதிர்பார்ப்பேன். அப்படித் தேடி அமைச்ச இளமைக் கூட்டணி இது. பரத் எப்பவுமே ஸ்மார்ட். ஹீரோயின் ரீமா கலிங்கல், செம ஜாலி டைப். மலையாள 'ஹேப்பி ஹஸ்பண்ட்’ படத்தில் 'ஹிட்

ஹீரோயின்’னு பேர் வாங்கின பொண்ணு. அழகான பெண்களுக்கு நடிக்கத் தெரியாதுகிங்ற பொது விதி ரீமாவுக்குப் பொருந்தாது. சிலரைத் தூரத்தில் பார்த்துட்டுப் போயிடணும். பக்கத்தில் பார்த்தா, பிரமிப்பு போயிடும். ரொம்ப சிலரைத்தான் எப்படியும் பார்க் கலாம்... எப்படியும் ரசிக்கலாம். ரீமா கலிங்கல்... அந்த ரகம்!''
''படத்தில் வேற என்ன ஸ்பெஷல்?''
''ஷூட்டிங் ஸ்பாட்டே ரொம்ப ஸ்பெஷல்தான். தென்ஆப்பிரிக்காவின் செஷல் தீவில்தான் பாடல்களைப் பதிவு செய்தோம். இப்படி ஒரு இடம் பூமியில் இருக்கானு ஆச்சர்யம் இன்னும் விலகலை.


'ஓ மை ஏஞ்சல்’னு ஒரு பாட்டை கடலுக்கு நடுவில் ஷூட் பண்ணோம். தண்ணிக்கு மேல் நாலு அடி உயரத் திட்டில் பரத் நின்னுட்டு இருந்தார். ஹெலிகாப்டரில் கேமராவெச்சு ஷூட் பண்ணிட்டு இருந்தோம். திடீர்னு பரத் விநோதமா எக்ஸ்பிரஷன் கொடுத்தார். 'ஏன் ஓவர் ரியாக்ஷன் கொடுக்கிறார்?’னு யோசிச்சுட்டு இருக்கும் போதே, கீழே அசிஸ்டென்ட்ஸ் ஓடிப்போய் பரத்தை கை கொடுத்துத் தூக்கி மேல இழுத்துப் போட்டாங்க. போய்ப் பார்த்தா, அந்த இடத்தில் 50 அடி பள்ளம் ஒண்ணு இருக்கு. அதுக்குள் விழப் பார்த்தார் பரத். கடைசி நேரத்தில் காப்பாத்திட்டாங்க. 'சினிமாவில் டான்ஸ், ஃபைட் கத்துக்குறது முக்கியம் இல்லை. முதல்ல நீச்சல் கத்துக்கோங்க’னு கலாய்ச்சுட்டே இருந்தோம்!''