Published:Updated:

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - சினிமா விமர்சனம்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - சினிமா விமர்சனம்

ரிவாள், உலக்கை, உருட்டுக்கட்¬ட என சகலவித ஆட்கொல்லி ஆயுதங்களுடன் ஆட்கள் காத்திருக்க, வீட்டு வாசலைத் தாண்டினால், ஆள் காலி. முரட்டு வில்லன்களுடன் அப்பாவி ஹீரோ ஆடும் 'உள்ளே-வெளியே’ ஆட்டமே 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’!

வீட்டுக்கு வந்த விருந்தாளி மனம் கோணாமல் உற்சாகமாக உபசரித்து வழி அனுப்புவது நாகி நீடு குடும்பத்தின் பாரம்பரியம். அந்த வீட்டுக்கு 'விருந்தாளி’யாகச் செல்கிறார் சந்தானம். தடபுடல் வரவேற்பு, அட்டகாச விருந்து என ரத்தினக் கம்பள உபசரிப்பு அளிக்கிறார் நாகி நீடு.

அப்போது தாங்கள் கொல்லத் துடிக்கும் பரம்பரைப் பகையாளிதான் சந்தானம் என்று நாகி நீடுவுக்கும், விருந்து முடிந்து வீட்டு வாசலைத் தாண்டியதும் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்று சந்தானத்துக்கும் தெரிய வருகிறது. அந்த அரிவாள் கும்பலிடம் இருந்து அப்பாவி சந்தானம் தப்பிக்கிறாரா என்பதே 'வல்லவன் புல்’ சாகசம்!

தெலுங்கின் ஹிட் சினிமாவான 'மரியாதை ராமண்ணா’ படத்தை அப்படியே தமிழ்ப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீநாத். ஒரு வீடு, ஒரு பரம்பரைப் பகை என மிகச் சாதாரண ஒன்லைன். அதில், காமெடி மசாலா, குடும்ப டிராமா சேர்த்து சிரிக்கவும் ரசிக்கவும் வைத்திருக்கிறார்கள்.

அட... 'ஹீரோ’ சந்தானம் இவ்வளவு 'பச்ச புள்ளை’யா?! டபுள் மீனிங் வசனம், டாஸ்மாக் உற்சாகம், ஈவ் டீஸிங் கிண்டல்ஸ்... என எந்தக் குறும்புச் சேட்டையும் இல்லை. சைக்கிள் மிதிக்கிறார்; உழைக்கிறார்; நல்லது மட்டும் செய்து, நல்லது மட்டுமே சொல்கிறார்!

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - சினிமா விமர்சனம்

ஹீரோயிச சாகசமோ, காமெடி சேட்டையோ எதையும் அடக்கிவாசித்தே, லைக்ஸ் அள்ளுகிறார். 'ரசம் வைக்கிறவன்லாம் ரகுவரன் மாதிரி பேசிட்டுப் போறான்’ என்று ஒன் லைன் பன்ச் அடிப்பதும், 'என்னப்பா அக்குள்ல கட்டியா?’ என்று 'சுடுதண்ணீர்’ வில்லனிடம் அலும்பு செய்வதும், ரயில் பயணத்தில் கலாய் ராஜுடன் கதகளி ஆடுவதுமாகப் படம் நெடுக சிரிப்ஸ். நடனம், உடல்மொழி, முகமொழி... என ஹேட்ஸ் ஆஃப் சந்தானம்!

ஆரம்ப அதிரடிக்குக் கைகொடுக்கும் சோலார் ஸ்டார் ராஜகுமாரனுக்குச் செம லந்து லாங்வேஜ். 'இதோட மொக்கை வாங்கினீங்கன்னா... ஹாட்ரிக்’ என்று பில்டப் கொடுக்கும் அவரது சிஷ்யர்களும் செம செட். அறுக்கப்பட்ட ஊஞ்சல் கயிறைப் பார்த்து சந்தானத்தை முறைக்கும் இடத்தில் நாகி நீடு பதறவைக்க, அவரது மகன்களாக வரும் ரவிபிரகாஷ், சுகந்தன் இருவரும் புருவ அசைவில்கூட டெரர் ஏற்றுகிறார்கள்.

ஆந்திரா ரீமேக் கதைதான். அதற்காக ஒரு ஜில்லாவையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் டெரர் வில்லன், நோட்டீஸ் வீசுவது கணக்காக அரிவாள் வீசும் அடியாட்கள்... என அப்படியே ஆந்திரா கோங்குராவாகக் களம் அமைத்திருக்க வேண்டுமா? இடைவேளை ட்விஸ்ட்டுக்குப் பிறகு எந்தப் பெரும் திருப்பமும் இல்லாமல் பயணித்து, பழகிய க்ளைமாக்ஸில் நிலை கொள்கிறது.

ஆனாலும், ஒரு வீடு, ஒரு ஹீரோ, சில அரிவாள்கள்... இதை வைத்தே முழுப் படத்தையும் அலுங்காமல் நகர்த்திச்சென்ற வகையில், இந்த வல்லவனுக்குக் காமெடியே ஆயுதம்!

- விகடன் விமர்சனக் குழு