பா.ஜான்ஸன், ஓவியம்: கண்ணா
தமிழ் சினிமா ஹீரோக்களின் 'ஆதர்ச நண்பேன்டா’வாக இருந்த சந்தானம், ஹீரோ குதிரை ஏறிவிட்டதால், 'நண்பர்களுக்கு’ திடீர் பஞ்சம். படம் முழுக்க ஹீரோவுடனேயே இருக்க வேண்டும். ஆனால், ஹீரோயினைக் கவரும் அளவுக்கு இருக்கக் கூடாது. ஹீரோவைச் சகட்டுமேனிக்குக் கலாய்க்க வேண்டும். ஆனால், வில்லனைப் பார்த்தால் பம்மிப் பதுங்க வேண்டும். முக்கியமாக, இரவு 10 மணிக்கு மேலும் ஹீரோவுக்குச் 'சரக்கு சப்ளை’க்கு உத்தரவாதம் தர வேண்டும். இப்படி விநோத குணநல சிறப்பம்சங்களுடன் இருக்க வேண்டும் தமிழ் சினிமாவின் நண்பர்கள்.
சந்தானம் 'நண்பேன்டா’ பதவியில் 'வி.ஆர்.எஸ்.’ எடுத்த அந்த சைக்கிள் கேப் இடைவேளையில் புகுந்து ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கும் சில 'நட்பு நடிகர்’களின் புரொஃபைல் அப்டேட் இங்கே...
'மெரீனா’, 'எதிர் நீச்சல்’ என முகம் காட்டி, 'மான் கராத்தே’வில் படம் முழுக்கவே வலம் வந்த சதீஷ், ஆக்ச்சுவலி ஒரு வசனகர்த்தா!
சதீஷ்: ''ஆமாங்க..! கிரேஸிமோகன் சார் ட்ரூப்ல அசிஸ்டென்ட் நான். ஒருநாள், யாரோ ஒரு ஆர்ட்டிஸ்ட் வரலைனு, என்னை அந்த ரோல்ல நடிக்கச் சொன்னாங்க. நல்ல ரெஸ்பான்ஸ். அப்புறம் யார் வரலைன்னாலும், என்னை நடிக்கச் சொன்னாங்க. அதனால, நான் நடிக்க ஆரம்பிச்சதுக்குப் பிள்ளையார் சுழி போட்டவர்... இல்லை இல்லை பிள்ளையாரே கிரேஸிமோகன் சார்தான்.

ஒருநாள், 'பொய் சொல்லப்போறோம்’ படத்துக்கு வசனம் எழுத முடியுமா?’னு கிரேஸி மோகன் சார்கிட்ட இயக்குநர் விஜய் கேட்டார். சில காரணங்களால் அவரால் அப்போ வசனம் எழுத முடியலை. அப்போ என்னை வசனம் எழுத துணைக்கு வெச்சுக்கிட்டார். படத்துல 'வசன உதவி’னு கிரெடிட் கொடுத்தார். அப்போ நான் கொஞ்சம் கொஞ்சம் நடிக்கவும் செய்வேன்னு தெரிஞ்சுக்கிட்டு, 'மதராசப்பட்டினம்’ படத்தில் வாய் பேச முடியாத கேரக்டர் கொடுத்தார். அப்புறம் 'மெரீனா’, 'எதிர்நீச்சல்’ படங்களில் சிவகார்த்திகேயனுக்கு நண்பனா நடிச்சு எஸ்டாபிளிஷ் ஆகிட்டேன்.
அதுக்கு முன்னாடியே சிவகார்த்திகேயனும் நானும் சேர்ந்து, 'முகப் புத்தகம்’னு ஒரு குறும்படம் நடிச்சிருக்கோம். அது 'ராஜா ராணி’ இயக்குநர் அட்லீ இயக்கிய படம். அந்தச் சமயம் சிவாகிட்ட, 'நான் காமெடியன் ரோலுக்கு டிரை பண்ணிட்டிருக்கேன்’னு சொன்னேன். உடனே அவர், 'நானும்தான் டிரை பண்ணிட்டு இருக்கேன்’னு சொன்னார். 'ஆஹா... பக்கத்துலயே பலமான போட்டி இருக்கே’னு பக்குனு ஆகிடுச்சு. 'பாஸ்... நீங்க ஆள் பார்க்க அட்டகாசமா இருக்கீங்க. டான்ஸும் நல்லா ஆடுறீங்க. ஹீரோ ரோல் டிரை பண்ண வேண்டியதுதானே?’னு சொல்லி மனசை மடை மாத்திவிட்டேன். நல்லவேளை, அவர் ஹீரோ ஆகிட்டார். நான் காமெடியன் ஆகிட்டேன். இப்போ எங்க கெமிஸ்ட்ரி பக்காவா இருக்கு!
இப்பத்தான் வாழ்க்கை பிக்கப் ஆகுது. அதுக்குள்ள, 'கல்யாணம் ஆயிடுச்சா?’னு நிறைய விசாரிப்புகள். எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. ஆனா, கல்யாணத்தால ஒரு காமெடி நடந்தது.

கிரேஸி சார் ட்ரூப்ல இருந்தப்போ ஒரு நாடகம். அதுல ஒரு கல்யாண சீன்ல பொண்ணு கழுத்துல தாலி கட்டணும். தாலி கட்டுற மாதிரி நடிக்கிறப்ப, தாலியைக் கழுத்து வரை கொண்டு போவாங்களே தவிர, அதைக் கட்ட மாட்டாங்க. ஆனா, 'அடுத்த சீன் ஜோடியா கால்ல விழணுமே... அப்போ தாலி விழுந்துடக் கூடாது’னு நினைச்சு தாலி கட்டுறப்போ ஒரு முடிச்சு போட்டுட்டேன். உடனே எல்லாரும், 'ஏய் என்னப்பா நிஜமாவே கட்டிட்ட... இனி அந்தப் பொண்ணை நீதான் காப்பாத்தணும். உன்கூடவே கூட்டிட்டுப் போ’னு சலம்ப ஆரம்பிச்சிட்டாங்க. எப்போ 'கல்யாணம்’னு கேட்டாலும், அந்தத் தாலிதான் என் முன்னாடி நிழலாடுது!''
ஹீரோக்களுக்கு 'நண்பேன்டா’ என்றால், ஹீரோயின்களுக்கு 'தோழிடீ’..! சமீபமாக அந்தத் 'தோழீடி’ அந்தஸ்தை 'அன்னப்போஸ்ட்’டாகப் பிடித்துக்கொண்டிருப்பவர் வித்யூலேகா.
வித்யூலேகா: ''நான் அடிப்படையில் ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். ஏழு வருஷமா நாடகங்களில் நடிச்சிட்டிருக்கேன். என் நண்பன் ஒருத்தன், 'கௌதம் சார் படத்துக்கு ஹீரோயின் தோழி கேரக்டருக்கு ஆள் வேணுமாம். நீ டிரை பண்ணு’னு சொன்னான். அப்போ நான் காலேஜ்ல படிச்சிட்டிருந்தேன். 'சும்மா போய்ப் பார்ப்போம்’னு ஸ்க்ரீன் டெஸ்ட்டுக்குப் போனேன். கௌதம் சாருக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. 'நீதானே என் பொன்வசந்தம்’ படத்துல ஜெனி கேரக்டர் தந்தார். அந்தப் படத்தோட தெலுங்கு வெர்ஷனிலும் அதே கேரக்டர் கொடுத்தார். அப்பா மோகன்ராமுக்கு, அவர் பேரைப் பயன்படுத்தாமலே நான் ஒரு அடையாளம் தேடிக்கிட்டதுல பெரிய சந்தோஷம். எனக்கு மனோரமா ஆச்சிதான் ரோல் மாடல். அவங்களைப் போல காமெடி, சீரியஸ், குணச்சித்திரம்னு கலந்து கட்டி வெளுத்து வாங்கணும்..!''

'வில்லா’வில் திகில், 'தெகிடி’யில் நட்பு என வெரைட்டி கேரக்டர்களில் அசத்தியவர் வெங்கட். இவர் குறும்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்.
காளி வெங்கட்: ''சினிமாவில் சேர்றதுக்காக என்னென்னவோ வேலை பார்த்தேன். ஆனா, சினிமா கதவு திறக்கவே இல்லை. அதிசயமா ஆறு வருஷம் முன்னாடி 'தசையினைத் தீச்சுடினும்’னு ஒரு படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. 'அட்டகத்தி’ தினேஷ§க்கு அதுதான் முதல் படம். ஆனா, அந்தப் படம் இப்பவரை ரிலீஸ் ஆகலை. அப்புறம் 'நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சிக்காக ஒரு குறும்படத்துல 'காளி’ங்கிற கேரக்டர்ல நடிச்சேன். அதுல இருந்து 'காளி’ வெங்கட் ஆகிட்டேன். 'நாளைய இயக்குநர் சீஸன்-3’ல சிறந்த நடிகர் விருது கிடைச்சது. அப்படியே சின்னச் சின்னதா லீட் பிடிச்சு 'தடையறத் தாக்க’, 'உதயம் ழிபி4’, 'வில்லா’, 'தெகிடி’, 'வாயை மூடிப் பேசவும்’னு இப்போ வாழ்க்கை கொஞ்சம் டேக்-ஆஃப் ஆகிருச்சு!''

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் சிரிசிரிக்க வைத்த பகவதி பெருமாள், 'ஒரு கன்னியும் மூணு களவாணியும்’ படத்திலும் அந்த டெம்போவைத் தக்கவைத்துக்கொண்டார்.
பகவதி பெருமாள்: ''எம்.ஐ.டி. இன்ஜீனியரிங் கிராஜுவேட் சார் நான். சினிமா ஆசை இருந்தாலும் படிப்பு முடிஞ்சதும், 'அடுத்து என்ன?’னு குழப்பமாவே இருந்துச்சு. எழுத்தாளர் சுஜாதா, காலேஜ்ல எனக்கு சூப்பரோ சூப்பர் சீனியர். அவருக்கு போன் பண்ணி, 'சார் எனக்கு என்ன பண்றதுனு குழப்பமா இருக்கு. நீங்கதான் கைடு பண்ண ணும்’னு கேட்டப்ப, செம டோஸ் விட்டார். 'நீ என்ன நினைச்சிட்டு இருக்க? கவர்மென்ட் உங்களுக்கு எவ்ளோ செலவு பண்ணுது? சினிமாவுக்குப் போறதுனா சினிமா சம்பந்தப்பட்ட படிப்பைப் படிக்க வேண்டியதுதானே? எதுக்காக ஒரு இன்ஜீனியரிங் சீட்டை வேஸ்ட் பண்ணினே? அந்தச் சீட்ல வேற எவனாவது படிச்சிருப்பான்ல’னு செம பரேடு. டக்குனு 'சாரி சார்’னு சொல்லிட்டு லைனை கட் பண்ணிட்டேன். ஆனா, அவர் பேசினது ரொம்ப நியாயமான விஷயம்.
அப்புறம் ரெண்டு, மூணு படங்களில் உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். அப்போதான் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்தப் பட சென்ட்டிமென்ட்டோ என்னவோ, அடுத்தடுத்து நண்பன் ரோலாவே வருது. நச்னு ஒரு ஸ்கிரிப்ட் எழுதி, அதை சுஜாதா சார்கிட்ட காட்டி பாராட்டு வாங்கணும். என் படத்தில் அவர் வசனம் எழுதணும்னு ஒருகாலத்துல மனசுல ஆசை வெச்சிருந்தேன். ஆனா, அது இனிமே நடக்காதுனு நினைக்கிறப்பலாம் வருத்தமா இருக்கும்!