என் விகடன் - திருச்சி
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

என்னடா பதில் சொல்லப் போறீங்க?

ம.கா.செந்தில்குமார்

##~##

''ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழ் உயிர்களை சிங்கள வெறியர்கள் கொன்று குவித்தபோது, நாமெல்லாம் என்ன செய்தோம்? இங்குள்ள அரசின் மீதோ அல்லது ஓரிரு அரசியல்வாதிகள் மீதோ குற்றம் சுமத்திவிட்டுத் தப்பிக்க நினைத்தோம். அந்த இன அழிப்புத் துரோகத்தில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது. 'என் தங்கைக்கோ, அக்காவுக்கோ நடந்தால்தான் ரத்தம் கொதிக்கும் என்றால், அது என்னடா மானங் கெட்ட ரத்தம்’ என  உயிர் ஆயுதம் ஏந்திய என் தோழன் முத்துக்குமார் கேட்ட கேள்விக்கு இன்று வரை பதில் இல்லையே! எம் மக்களின் வலியை, வேதனையை, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் உணரணும். இது பொழுதுபோக்கு வதற்கான படம் அல்ல. 'ச்சீ... நானும்தானே குற்றம் பண்ணியிருக்கேன்’ என குற்றவுணர்வில் குமுறி அழுதுத் தீர்ப்பதற்கான படம்!'' - வேதனையும் கண்ணீருமாகப் பேசுகிறார் புகழேந்தி தங்கராஜ். 'காற்றுக்கென்ன வேலி’ படத்தின் மூலம் ஈழத்தின் வீரத்தைப் பதிவு செய்தவர், ஒரு சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமை மூலம் ஈழ மக்களின் துயரை 'உச்சிதனை முகர்ந்தால்’ படம் மூலம் காட்சிப்படுத்த வருகிறார்.

என்னடா பதில் சொல்லப் போறீங்க?

''கதை என்ன?''

''இது நிஜம் கலந்த கதை. 2009-ம் ஆண்டின் பிற்பகுதியில் ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்த சமயம் மட்டக்களப்பில் புகுந்த சிங்கள ராணுவம், அங்கிருந்த ஆண்களை மட்டும் பிரித்து ஒரு கோயிலுக்குள் அடைத்துவிட்டு, சிறுமிகள், பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோரை இருட்டு விலகுவதற்குள் நாசம் செய்துவிட்டு வெளியேறியது. இதை மட்டக்களப்பு மருத்துவர் ஒருவர், ராணுவத்தின் எதிர்ப்பை மீறி, 'கேங் ரேப்’ எனப் பதிவு செய்தார். அதுபற்றி படித்தபோது, 'ஏன் இந்த உலகத்தில் இருக்கிறோம்?’ என்ற எரிச்சலும் ஆற்றாமையும் பொங்கியது. அங்கு நடந்த கொடுமையின் வீரியத்தை உணர ஒய்.புனிதவதி என்ற 13 வயதுச் சிறுமியின் கதை ஒன்றே போதும். அவளை என் நாயகியாக வைத்து ஒட்டுமொத்த ஈழ மக்களின் வலியைச் சொல்லி இருக்கிறேன்.  

எல்லாக் குழந்தைகளும் இறைவனின் ஆசீர்வாதத்துடன் பிறக்கின்றன என்பார் கள். ஆனால், புனிதவதியை மட்டும் எல்லா சாத்தான்களும் சபித்திருக்கின்றன. தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்கள் எடுத்த அந்தக் குழந்தைக்குத் தன் எதிர்காலத்தைப்பற்றி எவ்வளவோ கனவுகள் இருந்திருக்கும். ஆனால், ஒற்றை இரவில் அது அனைத்தும் நசுக்கப்பட்டு சிதைக்கப்பட்டாள். போராளிகளின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த ஈழத்தின் அமைதி, அவளின் மகிழ்ச்சியான தருணங் கள், அவள் பழகிய போராளிகள் எனப் பல விஷயங்களைக் கதையோடு சேர்த்து இருக்கிறோம்!''

''இப்படி ஒரு படத்தில் நடிக்க பிரபல நடிகர் - நடிகைகள் தயங்கி இருப்பார்களே?''

''பேராசிரியர் நடேசனாக நண்பர் சத்யராஜ். அவருடைய மனைவி சங்கீதா. திருமணமாகி 20 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருப்பவர்களிடம் புனிதவதி வந்து தஞ்சம் அடைகிறாள். தங்கள் மகளாகவே நினைத்து அவளை வளர்க்கிறார்கள். மருத்துவராக நாசர். தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு அறிந்த சி.என்.டி. என்கிற சி.என்.தெய்வநாயகமாக இவரை உலவ விட்டு இருக்கிறோம். 'சம்பளம் வேண்டாம். இந்தப் படத்தில் நடிக்க இதுவே நிபந்தனை.’ என்றார். உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் துடிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆண்டனியாக என் தோழன் சீமான். இவர்களைத் தவிர, ஒரு நாயும் கதாபாத்திரமாக நடிக்க வேண்டிய அவசியம். புனிதாவின் உணர்வுகளை உள் வாங்கிக்கொண்டு அவள் அழுதால், அதுவும் அழுது... அவள் மகிழ்ந்தால், அதுவும் மகிழ்ந்து எனப் படம் முழுக்க உயிர்ப்புடன் பயணிக்கும் ஜீவன். ஒரு நாய்க்கு இருக்கும் உணர்ச்சிகூட தமிழனுக்கு இல்லையேனு படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் நினைக்கணும்!''

என்னடா பதில் சொல்லப் போறீங்க?

'' 'புனிதவதி’யாக நடிப்பது யார்?''

''நடிக்க விருப்பம் தெரிவித்து வந்த ஐந்தாறு பேரிடம் கேரக்டர்பற்றிச் சொன்னதும் உடனே நடிக்க மறுத்துவிட்டனர். 'என்ன செய்வது’ என்று எரிச்சலில் இருந்த சமயம் தான், இவள் வந்தாள். முகத்தில் அவ்வளவு பாவனை. 'இவள்தான் என் புனிதா’ என்று உடனே முடிவு செய்தேன். 'தாய்க்குப் பின் தாரம்’ படத்துக்கு வசனம் எழுதின சா.அய்யாபிள்ளையின் பேத்தி இவள். 'நீர், நிலம், காற்று’ என்பதைக் குறிக்கும் வகையில் 'நீநிகா’ என அவளுக்குப் பெயர்வைத்தோம். 'மிகப் பொருத்தமான பெயர்’ என்றார் கவிஞர் காசி ஆனந்தன்!''

என்னடா பதில் சொல்லப் போறீங்க?

''கதைக் கரு வலுவாக இருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாகவும் படம் பலமாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து இருக்கிறீர்களா?''

''அதில் நாங்கள் எந்தச் சமரசமும் செய்துகொள்ளவில்லை. கதையைக் கேட்டதும் இசையமைப்பாளர் இமான் அழுதேவிட்டார். 'உங்க மார்க்கெட் தெரியும். உங்க சம்பளத்தை நான் நிர்ணயிக்க முடியாது. எவ்வளவுனு சொல்லுங்க... தந்துடுறேன்’னு சொன்னேன். 'எதுவுமே கொடுக்கலைன்னாலும் இந்தப் படத்தை நான் பண்றேன்’னு சொன்னார். 'உச்சிதனை முகர்ந்தால் உள்ளங்கால்  வரை சிலிர்க்குதடி’ன்னு எழுதத் தொடங்கிய அய்யா காசி ஆனந்தன்,

'மட்டு நகர் பாட்டும் மத்தாளம் கூத்தும் 
மனசு மறக்கலையே
ஊரில் நான் வளர்த்த கிளிப்பிள்ளை 
என் மனம்விட்டுப் பறக்கலையே
பனிச்சங்கேணி நண்டு வாங்கி வந்து 
  கறியாக்கிக் கடிக்கணும்
பதுங்குகுழிக்குள் நிலவொளியில்
     நான் புத்தகம் படிக்கணும்
’னு எழுத எழுத... எங்களால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியலை. இழைத்து இழைத்து தமிழருவி மணியன் அய்யா எழுதிய வசனங்கள் ஒவ்வொண்ணும் அம்பு மாதிரி தைக்கும். 'நீங்க ஏங்க்கா அழுவுறீங்க. எனக்கு அன்னிக்கு மட்டும்தாங்க்கா வலிச்சது’னு புனிதவதி வசனம் பேசும்போது, சுத்தி நின்ன எல்லாரும் நடிக்க மறந்து அழுதுட்டாங்க!''  

''இப்போ புனிதவதி எங்கே இருக்காங்க?''

''புனிதவதியை என் சொந்த மகளாகத்தான் நான் நினைக்கிறேன். அந்தப் பிள்ளை 'எங்கே எங்கே’னு யூனிட் முழுக்க விசாரிச்சுட்டே இருந்தாங்க. அவளை அழைத்து வராமலா இருப்போம்? இந்தப் படத்தின் நோக்கமே புனிதவதியைத் தமிழகத்துக்கு அழைத்து வருவதாகத்தான் இருக்கும். புனிதாவை இந்த யூனிட்டே தத்துஎடுத்துக் கொள்ள வேண்டும் என்று  ஒரு கனவு. ஒரு குழந்தையைத் தத்து எடுக்கலாம். ஆனால், இவளைப்போல உள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளை என்ன செய்வது? புனிதாவை அழைத்து வருவோம். 'இவளுக்கு இழைக்கப்பட்ட அநீதியில் உங்களுக்கும் பங்கு இருக்கிறதடா’ என இங்கு உள்ள எல்லோரிடமும் அப்போது கேட்போம்.அதற்கு என்னடா பதில் சொல்லப்போகிறீர்கள்?''- உகுக்கும் கண்ணீருக்கு இடையே உரத்து ஒலிக்கிறது புகழேந்தி தங்கராஜின் குரல்!