என் விகடன் - திருச்சி
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

கற்றது பாசம்!

நா.கதிர்வேலன்

##~##

'தங்க மீன்கள்’ - தலைப்பிலேயே தூண்டில் இடுகிறார் இயக்குநர் ராம். 'கற்றது தமிழ்’ படத்துக்குப் பிறகு, இயக்குநராகவும் நாயகனாகவும் 'தங்க மீன்’ பிடிக்க வருகிறார்!

''தமிழ் படித்த மாணவர்களின் சமூக அந்தஸ்தை 'கற்றது தமிழ்’ மூலமாக விவாதப் பொருள் ஆக்கினீங்க. இந்த மீன்களின் இலக்கு என்ன?''

''இது ஒரு சாதாரண மனிதனின் அசாதாரணமான கதை. ஒரு வரியில் சொல்லணும்னா, ஒரு கெட்ட மகன்... நல்ல அப்பாவான கதை. ஒவ்வொரு மனுஷனும் தன்னோட வாழ்க்கையில் கதாநாயகனாக மாறுவது, அவன் அப்பா ஆன பிறகுதான். காதலி, மனைவி, அம்மா, சகோதரி என எல்லோருக்கும் ஒரு ஆண் குறுகிய காலத் துக்கு மட்டுமே ஹீரோவா இருக்க முடியும். ஆனால், மகள் மனதில் மட்டும், ஓர் ஆண் எப்பவுமே நாயகன்தான். அப்படித் தன் பெண்ணுக்காக எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு நின்ன ஒரு அப்பனோட வாழ்க்கை இது. ஒரு அப்பனோட கதைனு சொல்லக் கூடாது. இது இரண்டு அப்பாக்களின், இரண்டு பிள்ளைகளின், இரண்டு தலைமுறைகளின் கதை!

கற்றது பாசம்!

சங்க காலத்தில் இருந்து இப்போ வரை 'பொருள்வயிற் பிரிதல்’ என்பது தலைவனின் இயல்பு. பொருள் ஈட்டுவதற்காக தகப்பன்கள் குடும்பத்தைவிட்டுப் பிரிகிற காலங்கள் எப்போதும் உண்டு. காசு, பணம், வசதி என்ற வார்த்தைகள் நம்ம உறவுகளில் எவ்வளவு சிக்கல்களை ஏற்படுத்துது... ஓர் அன்பை எப்படி சிதைச்சுப்போடுதுனு யோசிச்சப்போதான் 'தங்க மீன்கள்’ உருவானது.

கற்றது பாசம்!

இங்கே ஒரு நல்ல தகப்பனுக்கு அடையாளம் எங்கேயாவது போய், ஏதாவது செய்து பொருள் ஈட்டுவதுதான். சராசரி இந்தியக் குழந்தைகளுக்கு முதல் 10 வருடங்கள் அப்பாவின் அரவணைப்பு கிடைப்பதே இல்லை. ஆனால், என் கல்யாணசுந்தரம் தன் இருப்பைத் தன் மகள் செல்லம்மாவுக்காக அர்ப்பணிக்கிறான். அதற்காக பணம், வேலை, கௌரவம்னு எதையும் கருத்தில்கொள்ளாமல் வாழ்கிறான். ஆனால், கல்யாணியின் அப்பா அவனுக்கு நேர் எதிர். அவருக்குப் பணம், கௌரவம் இதெல்லாம்தான் ஓர் ஆணின் அடையாளம். கல்யாணி என்ற மகன் செல்லம்மாவுக்கு அப்பா ஆகும்போது ஏற்படும் உணர்வுகளின் வழியாக, இரண்டு தலைமுறைகளை இந்தக் கதையில் பார்க் கிறேன்!''  

'' 'கற்றது தமிழ்’னு ஆவேசமா ஒரு படம் கொடுத்துட்டு, இவ்வளவு மென்மையாக ஒரு கதையை எப்படிக் கையில் எடுத்தீங்க?''

''உண்மை ஒண்ணுதான். அதைக் கோபமாவும் சொல்லலாம். கண்ணீரோடும் சொல்லலாம். புன்னகையோடும் சொல்லலாம். இது என்போன்ற பல தகப்பன் களின் உண்மைக் கதை. கோயம்புத்தூரில் குடும்பத்தை விட்டுட்டு, சினிமாவுக்காக சென்னையில் திரிபவன் நான். மகளைப் பார்க்கவே போக முடியாமல் இருந்த நாட்கள்ல ஒருநாள், என் பொண்ணு போன்ல சொன்னா... 'அப்பா, நம்ம கொல்லையில பூவெல்லாம் அவங்க அப்பாவைக் காணோம்னு என்கிட்ட அழுதுச்சுப்பா.’ உடனே நான், 'அதுக்கு நீ என்னப்பா சொன்ன?’னு கேட்டேன். ''அப்பாவெல்லாம் பணம் சம்பாதிக்க சென்னைக்குப் போயிருக்காங்க. பணம் கிடைச்சதும் வந்துருவாங்க’னு சொன்னேம்பா’ன்னா. எனக்குச் சட்டுனு மனசு கனத்துப்போச்சு. என்னைப் பார்க்காம இருக்கிறதையே ஒரு கதை மாதிரி சொல்லிட்டா என் மக. அவ சொன்ன அந்த வார்த்தைகள்ல இருந்துதான் இந்தக் கதையை எழுத ஆரம்பிச்சேன். இது முழுக்க முழுக்க நம் அசல் வாழ்க்கையின் பதிவு!''

கற்றது பாசம்!

''தாக்கம் இல்லைனு சொல்றீங்க... ஆனா, மத்த இயக்குநர்கள் பாதையில் நீங்களும் ஹீரோவாக் களம் இறங்கிட்டீங்களே?''

''என் தோழர் ரேவதி பரிந்துரைக்க... கௌதம் மேனனைச் சந்தித்தேன். என் கதையைக் கேட்ட பிறகு, கதையின் ஸ்க்ரிப்ட் புத்தகத்தைப் பார்த்த பிறகு, 'நீங்க நடிச்சா, நான் தயாரிக்கிறேன்’னு சொன்னார். எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது எப்பவுமே நோக்கம் கிடையாது. அதற்கான முனைப்போ, ஆர்வமோகூடக் கிடையாது. இந்தக் கதையில் நானும் ஒரு பாத்திரம். இதில் இன்றைய ஹீரோவுக்கான அம்சங்கள் இல்லை. அவர்கள் விரும்பும் ஆசைப்படும் சாகசங்களுக்கும் இதில் இடமே இல்லை. அப்படியும் நானே நடிக்கலாமா வேண்டா மானு பெரிய குழப்பத்தில் இருந்த என் பயத்தைப் போக்கியது தோழர் சுபா பாண்டியன்தான். அவர் என்னை எடுத்த புகைப்படங்களும், நண்பர் பிஜி.முத்தையாவோடு திருவண்ணாமலைக்குப் போய் எடுத்த டெஸ்ட் ஷூட்டும் எனக்கு நம்பிக்கை அளித்தன. எழுதுகிறவனாகவும் இயக்குநராக வும் ஒருவனே இருந்தால், உணர்வுகளை உண்மையா வெளிப்படுத்தி நடிக்க முடியும்னு அப்புறம்தான் உணர்ந்தேன்!''

கற்றது பாசம்!

''கதையின் அழுத்தத்தை அறிமுகக் கதாநாயகியும் குழந்தையும் தாங்குவாங்களா?''

''திருவனந்தபுரத்தில் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருப்பவர் செல்லி. எனது வடிவை செல்லியிடம் அப்படியே அச்சு அசல் பார்த்தேன். ஆர்வத்தோடு கதையை உள்வாங்கி, கண்ணியத்தோடு அதை வெளிப்படுத்தினார் செல்லி. சாதனா என்ற குழந்தை என் மகளா நடிச்சிருக்கா. என் மகளாகவே வாழ்ந்திருக்கானு சொல்லலாம். கதையின் முக்கியத்துவத்தை, இயல்பை இவ்வளவு சிறு வயதில் உணர்ந்து நடிப்பது ரொம்பவும் கஷ்டம். அந்தக் கஷ்டத்தை ரொம்ப எளிமையாக் கடந்து அட்டகாசப்படுத்தி இருக்கிறாள் சாதனா!''

'' 'கற்றது தமிழ்’ காலத்தைக் காட்டிலும் இப்போ யுவன் - நா.முத்துக்குமார் கூட்டணி ரொம்பவே ஸ்பெஷல். இங்கே என்ன விசேஷம்?''

'' யுவன் ஷங்கர்- நா.முத்துக்குமார் இல்லாம என்னால் பாடல்களை நினைச்சுப் பார்க்கவே முடியாது. எனக்காக பணம் எதையும் பொருட்படுத்த மாட்டார் யுவன். நேரத்தைக் கொடுத்துட்டா, அவரோட

கற்றது பாசம்!

அர்ப்பணிப்பு எல்லை தாண்டும். என் மனதைப் புரிந்தவர் நா.முத்துக்குமார். சமூகப் பொறுப்பு இல்லாமல் என்னால் படம் எடுக்க இயலாது என்பதைப் புரிந்துகொண்டவர்கள் இவர்கள்!''

''தயாரிப்பாளர் கௌதம் மேனன் என்ன சொன்னார்?''

'' 'கதையைக் கேட்கும்போதே படம் பார்த்த மாதிரி இருந்தது... ஒரு தயாரிப்பாளராக உங்களிடம் நான் குறுக்கிடவே மாட்டேன். முதல் பிரதியைக் காட்டினால் போதும். நீங்கள் சொன்னதைப் பார்க்க ரெடியா இருக்கேன்’னு  சொன்னார். அவருடைய கனிவுக்கு மரியாதை தருகிற படமாக 'தங்க மீன்கள்’ இருக்கும்!''